மரணித்த பின்பும் மரணிக்காத குரல்…
யாருக்கும் தெரியாது
இவ் வழிதான் போனேன்..
கனத்த சுமைகள்
மனசை நிறைத்திருந்தது
தலையில் இருந்ததைப் போலவே..
துரத்தப்பட்டவனின் பாதம்
எங்குதான் போகும்?
ஆயினும்,
இவ்வழியேதான் போனேன்..
வடக்கும் தெரியாது,
தெற்கும் தெரியாது,
விழிக்கு வழி மட்டுமே தெரிந்தது
மனத்தில் வலி மட்டுமே இருந்ததால்..
என் நிழல் கூட
உடைந்தேதான் வந்திற்று
அச்சம்தான் அதற்கும்..
நகரும் காலநதியில்
விழுத்தாட்டப்பட்ட சருகாய்..
எங்கு போகிறேன்.!
சத்தியமாய் தெரியாது.
போனேன்..
போய்க்கொண்டே இருந்தேன்..
போக்கற்றவனாய்..
இனந்தெரியாதவன் கரத்தால்
எனதுயிர் போக்கப்படும் வரை..
‘சொந்த மண்ணிலும்
சாகக் கூடாது.’
இன்று எழுதப்பட்ட தீர்ப்பிது.
தயவு கூர்ந்து கேளுங்கள்!
நீங்களும் துரத்தப்பட்டால்..
இவ்வழியே போகாதீர்கள்
தீர்பை திருத்தி எழுதும் வரை.
2007.08.06 வளாக அரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.