ஆடுகளே!
எல்லா வேலிகளும்
தாண்ட முடியாதபடி
கட்டப்படுகிறது.
இருப்பினும்,
வேலிகள் தாண்டாதபடி
கட்டப்படுகிறது
எம் கழுத்தில்,
முக்கோணமாய் தடிகள்.
கழுத்து எப்போதும்
கனத்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
இனி இருக்கும்.
அவர்கள்
தீர்மானித்து விட்டார்கள்.
அக் கனம் என்பது,
‘கழுத்து பத்திரம்’ என்கிற
தொடரறா நினைவூட்டல்.
எம்மை மேவி
மேய்ப்பிக்க
அவர்களால் முடியும்.
அவர்களால் மட்டுமே முடியும்.
அவர்கள்
தீர்மானித்து விட்டார்கள்.
இந்த மந்தைக்கு
மேய்ப்பர்கள் இல்லை,
இருந்தவர்கள்,
மேய்ப்பர்களும் இல்லை,
மேய்ப்பர் தோல் போர்த்திய
முதலாளிகள்.
அவர்களுக்கு இது தெரியும்.
நம்புங்கள்!
அவர்களுக்குத்தான் இது
நன்கு தெரியும்.
மற்ற மந்தையை
திசைப்படுத்தும் தடியடி,
அடுத்த மந்தையை
ஒருங்கிணைக்கும் கூக்குரல்,
உங்கள் மந்தையை
களைக்காதிருக்கட்டும்.
நம்புங்கள்!
உங்களுக்கென
மேய்ப்பர்கள் இல்லை.
இருந்தவர்கள்,
மேய்ப்பர்களும் இல்லை,
மேய்ப்பர் தோல் போர்த்திய
கசாப்பு முதலாளிகள்.
ஆடுகளே!
2020.01.11 | 11.33
இஸ்பஹான் சாப்தீன்