அகமும் கண்ணாடியும்.
கண்ணாடியை
உடைத்துப்போட்டாய்,
யாரும் பார்க்கா நேரம்
ஒன்றிணைத்து
ஒட்டிவைத்தாய்.
நான் வந்து
முகம் பார்த்தேன்.
ஒவ்வொரு கட்டத்திலும்
ஒவ்வொரு முகம்.
பின்னால் நின்றபடி
‘உங்களுக்கு பல முகம்’ என
நீ சொன்னாய்..
‘உடைத்தது நீ’
என்றேன்
சிரித்தபடி
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமென்றாய்..
நான்,
அகமும் கண்ணாடியும்
ஒன்றென்றேன்.
நீ புரிந்திருப்பாய்.
தவறுதலாய்
உடைபட்டதென்றாய்.
‘அப்படியாயின்,
பல முகம்
உண்டென்பதும்
தவிர்க்கமுடியாதது’ என
நான் சொன்னேன்.
‘இனிமேல்
தவறியும்
கண்ணாடிகளை
உடைக்கமாட்டேன்’ என
மேசையில் அடித்து
சத்தியமிட்டாய்..!
மேசையில் இருந்த
உன் மூக்குக் கண்ணாடி
உடைந்திற்று
கீழே விழுந்து.
சிரித்தபடி
நான் சொன்னேன்.
‘கண்ணாடியும் அகமும்
ஒன்று தான்.’
இஸ்பஹான் சாப்தீன்
2014|03|15