ஊருக்குப் போனேன்!
அழகானதொரு குளம்,
அதிலோர் ஒற்றையாறு,
உன் விழி மீது வந்து வழும்
முன்னெற்றி ஒற்றை முடிபோல…
தாமரையில் சில பனிதுளிகள்,
உன் இதழோரம்
என் பெயரைப் போல்
நித்ய பசுமையாய்…
பொடி நடை பயில
ஓர் ஒற்றையடிப் பாதை
என்னுடனான உன் பேச்சாய்
மிக நீளமாய்…
வயல் நடு வரம்பும்
அழகாய் தெரிகிறதே…
அடடே…!
உன கூந்தல் நடு வகிடு!
நான் குடியிருக்கும்
உன் மனசைப் போல்
அதோ தெரிகிறது
என் மினிக் குடிசை!
என்னவளே,
நேற்றிரவு உனைக் கண்டேன்.
கிடுகு முகட்டின்
ஓட்டையுள்ளால்.
கண் விழித்ததும் நீ,
முற்களுக்கிடையே எட்டியவளாய்…
யன்னல் கம்பியூடான அதே நீ,
அதே வெட்கங்கெட்ட தனம்.
ஆனால்… நீ…எங்கே?
இதோ…நம் மணவாழ்வு போல்
மணமேடைப் புகைப்படமும்
சிதைந்து கிடக்கிறதே(!)
இஸ்பஹான் சாப்தீன்.
2005 இன் தொடக்கத்தில் எழுதிய இக்கவிதை, 2010ல் கலையக அரங்கில் வாசிக்கப்பட்டது.