சுனாமி நினைவாக…. மயான விதைகள்.
மயான விதைகள்.
புது வருட வருகைக்காய்
பொன்கம்பளம்
விரித்துக் கொண்டிருந்த
அந்த டிசம்பர்
பனிப்பொழுதில்
அழைப்பிதழ் வழங்காமல்
வந்த திடீர் அலையே!
உன்னைக் காண
‘லவ் பர்ட்’ ஜோடிகள்
மாலைப் பொழுதுகளில்
வந்துபோன பாவத்திற்கும்,
என் கவிதாசுரபி
உன்னைப் பற்றி
கவி படித்த பாவத்திற்கும்,
இராட்சத உருவெடுத்த
அலையே!
ஜனவரியின் காலடியில்
வெடிக்கயிருந்த
பட்டாசுகளையும்
காற்றலையில்
கோலம்போடவிருந்த
மத்தாப்புகளையும்
எம் இதயத்தில்
பற்றவைத்துச் சென்ற
தீக்குச்சி அலையே!
நீ வந்துபோனதை
ஒரு வரலாற்றுக் கல்லிலும்
செதுக்கவில்லைதான்
ஆனால், எமதூர்
மயான விதைகள்
ஞாபகம் வைத்திருக்கின்றன
சுனாமி அலையே..!
இஸ்பஹான் சாப்தீன்.
2005.12.24
கவிதை அரங்கம்,
தினகரன்.