கவனம்!!
கவனம்!!
எம்மிதயம் துளைக்கும்
ஒவ்வொரு தோட்டாச் சப்தமும்
எம் தக்பீர் சப்தத்தை
குழைக்காது ஒருபோதும்..
சுடுவதாயின் சுடு!
ஆயினும் எம் சப்தம்
நின்றுவிடுமென்று
நீ நினைத்துவிடாதே!
சப்திக்கும் இம்மேளத்தில்
நிரம்பியிருப்பது
வெறும் காற்றென
நீ நினைத்து விடாதே
காற்றானதொரு புயலிது!
பூண்டோடு எமை
ஒழிக்க நினைக்கலாம்
புனித பூமியை
அழிக்க முடியுமா?
நீ காசால் செய்வதை
நாம் மனசால் செய்வோம்.
கனரக ஆயுதமானாலும்
கல்லொன்று போதும் நமக்கு..
கல்லைக் கண்டதும்
குலை நடுங்கும்
உம் காக்கிச்சட்டைக்கும்
கல்லைத்தொட்டதுமே
காணாமல் போகும்
நாய்களுக்கும்
என்ன வித்தியாசம்?
உனதுயிர் குறித்த
உனது நிலைப்பாடும்
எமதுயிர் குறித்த
எமது நிலைப்பாடும்
வித்தியாசமானதென அறி!
மரங்கள் கூட
உன் முதுகில்
முள்ளாய்க் குத்தும்
ஒரு நாள்,
பேசப்படாததையும்
பேசிவிடும்
கவனம்!
தேசம் பிடித்து
எல்லையிடலாம்,
தேகம் பிடித்து
கொள்ளையிடலாம்,
மோகம் பிடித்த உனை
ஒரு நாள்
சோகம் பிடிக்கும்
கவனம்!
கேவிக்கேவி அழப்போகும்
உன் நிலை குறித்து
எமக்கு
சிரிப்புத்தான் வருகிறது.
ஊதி அணைக்க
நினைக்கிறாய்(?)
ஊதியணைக்கும்
சுடரல்ல இது..
ஊத ஊத எரியும் சுடர்
இது ஈமானிய சுடர்.
2007.02.26
கலையக மேடையில் வாசிக்கப்பட்டது.
இஸ்பஹான் சாப்தீன்