G.A.S நோய்க்குறி : சாதனங்களுக்கும் கருவிகளுக்கும் ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள்!
1 min readG.A.S நோய்க்குறி : சாதனங்களுக்கும் கருவிகளுக்கும் ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள்!
டிஜிட்டல் யுகத்தில் அதிகரித்து வரும் ஒரு நோய்க்குறி இது. GAS என சுருக்கமாக குறிப்பிடப்படும் இந்த நோய்க்குறி ‘Gear Acquisition Syndrome’ என விரிவாக குறிப்பிடப்படுகிறது.
இதனை, “சாதனங்களை கையகப்படுத்தும் நோய்க்குறி” என புரியும் வகையில் தமிழ்ப்படுத்தி சொல்லலாம். மருத்துவர்கள் முடிந்தால் இதற்கான சரியான தமிழ்ப் பெயரை சொல்ல முடியும்.
இங்கு நான் இந்த நோய்க்குறி தொடர்பான விடயத்தை ஊடகத்துறை சார்ந்து எழுத விழைகிறேன். வேறு துறைகளுக்கும் சில போது பொருந்தலாம்.
01
“ஒரு நபர் இருக்கின்றார். அவர் இணையத்தில் வருகின்ற அவரது துறைக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்குவார். எந்த நேரமும் இணையத்தில் அவற்றைத் தேடிக் கொண்டும் வாங்கிக் கொண்டுமே இருப்பார். அவரிடம் இல்லாத பொருள் இல்லை. ஒருநாள் நான் அவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது வாங்கிய பொருட்களுள் பாதிக்கும் மேல் பாவிக்கப்படாமலே இருந்தது. இவற்றை இன்னுமா நீங்கள் பாவிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் இவற்றை விட நல்லவை வந்துள்ளன. அவற்றை வாங்க எண்ணியுள்ளேன் என்றார்.”
02
“எனது நண்பர் ஒருவரிடன் நல்ல ஒரு கெமராவும், அதற்கு ஏற்றாற் போல் பல கருவிகளும் உள்ளன. அவற்றை அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தான் வாங்கினார். அவை இன்னமும் புதிது போன்றே இருக்கின்றன. ஆனால், அண்மைக் காலமாக அவர் எந்த தயாரிப்பும் செய்வதில்லை. ஏன் என்று கேட்டதற்கு இவற்றை விட இப்போ நல்ல கெமரா எல்லாம் சந்தைக்கு வந்துவிட்டன. எனக்கு தெரிந்தவர்கள் கூட புதிய கெமராக்களுக்கு சென்றுவிட்டார்கள். இத வைத்து நான் என்ன செய்ய, புதிய புதிய கெமராக்களை அப்பப்போ வாங்கிக் கொண்டால்தான் நல்ல தயாரிப்புகளை செய்யலாம் என்றார்”
இந்த 02 நபர்களது செயல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்த இருவரும் தமது துறைகளில் நவீன கருவிகளை கொள்வனவு செய்து தமது தயாரிப்புகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? உண்மை. எந்தத் தவறும் இல்லை. ஆனால், இதுவே ஒரு நோயாக மாறினால்?
தம்மிடம் உள்ள சாதனங்களில், கருவிகளில் எந்தக் குறையும் இல்லை. அவை காலாவதியானவையும் அல்ல. புதிதாக சந்தைக்கு வந்துள்ளவற்றால் செய்ய முடியுமான வேலையை அவற்றாலும் செய்ய முடியும். ஆனால், புதியவற்றின் மீது மோகமும் அவை இருந்தால் தான் நல்ல படைப்புகளை கொண்டு வர முடியும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். எனவே, அவற்றை வாங்குவதில் குறிக்கோளாக இருக்கிறார்கள். வாங்கினாலும் அவற்றை முழுமையாக பயன்படுத்துவதில்லை. இதற்கு அது வாங்கணும். இது தேவை என நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.
இப்படியானவர்கள் தான் இந்த நோய்க்குறி உள்ளவர்கள். முதல் சொன்ன இரு நபர்களும் கூட இப்படியான நிலைக்கு மாறலாம். எனவே, இந்த நோய்க்குறி வராமல் நம்மை பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
அது இல்லை, இது இல்லை, அது வாங்கணும், இது வாங்கணும் என அவற்றை வாங்க நினைத்து நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த வேலையும் செய்யமாட்டார்கள். வாங்க வசதி இருந்தால் வாங்கிக் குவிப்பார்களே ஒழிய முழுமையாக பயன்படுத்த மாட்டார்கள்.
எனவே, இந்த நோய்க்குறி வராமல் இருக்க என்ன செய்யலாம்..? இந்த நோய்க்குறி இருந்தால் அதில் இருந்து விடுபட என்ன செய்யலாம்..?
இஸ்பஹான் சாப்தீன்
ஊடக பயிற்றுவிப்பாளர்
14 05 2024