‘அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்…’
1 min read‘அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்…’ இந்த ‘ஸலவாத்’தை முஸ்லிம் சேவையில் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் நிறைவடையும் போது ‘முஸ்லிம் சேவையின் நிறைவாக இனி ஸலவாத் ஓதக் கேட்கலாம்’ எனக் கூறி இந்த ‘ஸலவாத்’ ஒலிபரப்பப்படும்.
1972 இல் இருந்து இந்த ஸலவாத் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வந்துள்ளது.
பின்னர், 1978 ஆம் ஆண்டு ரமழான் மாதம் இரவு தராவீஹ் தொழுகையின் பின்னர் மருதானை ஜும்ஆப் பள்ளிவாசல் உட்பட பல பள்ளிவாசல்களில் இந்த ஸலவாத் ஓதப்பட்டுள்ளது.
இந்த அழகிய ‘ஸலவாத்தை’க் கேட்ட மர்ஹூம் Z.L.M. ஹாஜியார் அவர்கள் அந்த ஸலவாத்தை ஓதிய காரியை வானொலிக் கலையகம் அழைத்து வந்து ஒலிபதிவு செய்துள்ளார்.
அன்று முதல், அதாவது மர்ஹூம் Z.L. முஹம்மத் ஹாஜியார் காலத்தில் இருந்து தற்போது ஒலிக்கும் ‘ஸலவாத்’ முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிறது.
1978.08.17 ஆம் திகதி இந்த ‘ஸலவாத்’ ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு ஒலித்தட்டு இன்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுவடிக் கூடத்தில் பாதுகாப்பாக உள்ளது.
இந்த ‘ஸலவாத்’ காரி அஷ்ஷெய்க் இப்ராஹிம் அப்துர் ரஹீம் அல் மலீஹி அவர்களால் ஓதப்பட்டுள்ளது. எனவே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிறைவில் ஒலிக்கும் குரல் இந்த காரி அஷ்ஷெய்க் இப்ராஹிம் அப்துர் ரஹீம் அல் மலீஹி அவர்களுடையதாகும்.
இவர், எகிப்தில் உள்ள, மனூபியா எனும் இடத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு சிறந்த காரியாக இருந்துள்ளார். இவர் 1977 இல் இருந்து 1982 வரை பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.
ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டைக் கொண்டாடும் முகமாக இந்த ‘ஸலவாத்’ ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம் சேவையில் இது ஒலிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ‘ஸலவாத்’ தொடர்பான தகவலை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுவடிக் கூடம் சென்று (இன்று 25.07.2024) உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பகிர்கிறேன்.
இஸ்பஹான் சாப்தீன்
தயாரிப்பாளர்
முஸ்லிம் சேவை.
24 07 2024