கண்டதும் கேட்டதும் 02 – சைக்கிள் ரிக்ஷா
1 min readகண்டதும் கேட்டதும் 02
சைக்கிள் ரிக்ஷா.
பங்களாதேஷில் சர்வ சாதாரணமாக காணக்கூடிய வண்டி தான் இந்த சைக்கிள் ரிக்ஷா. குறிப்பாக டாக்காவின் முக்கிய போக்குவரத்து ரிக்ஷா வண்டிகளை மையப்படுத்தியே உள்ளது. பழைய டாக்கா போன்ற நகரங்கள் இந்த சைக்கிள் ரிக்ஷாக்களால் நிரம்பி வழிவதைக் காணலாம்.
பங்களாதேஷில் சுமார் 1/2 மில்லியன் ரிக்ஷாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு இந்த சைக்கிள் ரிக்ஷா போக்குவரத்து முறையை மையப்படுத்தி பல தொழில் துறைகள் உருவாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால், 19.6 மில்லியன் பேரின் ஜீவனோபாயம் இந்த சைக்கிள் ரிக்ஷா போக்குவரத்து முறையை ஒட்டியே காணப்படுகிறது.
மூன்று சக்கரங்களைக் கொண்ட இந்த சைக்கிள் ரிக்ஷாக்கள் மனிதர்களால் செலுத்தப்படுகிறது; மனிதர்களால் இழுத்துச் செல்லப்படுகிறது. பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயணத்துக்காகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் காட்சி மனதில் ஒருவகை கவலையை உருவாக்கியது. இருவர் தாராளமாக இதில் பயணம் செல்லலாம். குடும்பம் சகிதம் பயணம் செய்வதையும் சர்வசாதாரணமாக அவதானிக்கலாம்.
டாக்காவில் 1938 ஆம் ஆண்டு இந்த ரிக்ஷா முறை பயன்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 1941 இல் சைக்கிள் ரிக்ஷாக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததாம். அதன் பிறகு தான் ரிக்ஷாக்களை ஜோடனை செய்யும் முறை தொடங்கியுள்ளது. பின்னர், 1950 களில் ரிக்ஷாக்களின் அனைத்து பகுதிகளையும் அலங்கரிக்கும், வர்ண ஓவியம் வரையும் முறை உருவாகியுள்ளது.
இன்று டாக்கா சைக்கிள் ரிக்ஷாக்களின் நகரமாக உள்ளது. பல கண்கவர் வர்ண சித்திர மற்றும் ஜோடனை முறைதான் டாக்காவில் ஓடும் சைக்கிள் ரிக்ஷாக்களின் விசேட அம்சம். இதனால், ஆயிரக்கணக்கான ரிக்ஷாக்கள் பாதையில் பயணிப்பதை தூரத்தில் இருந்து பார்ப்பதே ஒரு அழகான காட்சியாக இருக்கும்.
இந்த சைக்கிள் ரிக்ஷா ஓவியம் ஒரு தனித் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. பங்களாதேஷுக்கே உரிய ஒரு பாரம்பரிய கலையாக இது பார்க்கப்படுகிறது. இக்கலை ‘ரிக்ஷவ்சித்ரா (Rickshawchitra)’ என்று அழைக்கப்படுகிறது. இதனை UNESCO கூட பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலையாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் இந்த ரிக்ஷா முறை அருகிச் சென்றாலும் ஒரு சில நாடுகளில் மாத்திரமே இம்முறை இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அதில் பங்களாதேஷின் சைக்கிள் ரிக்ஷா போக்குவரத்து முறை உலகளவில் தனிக் கவனம் பெற்றுள்ளது. இன்று பங்களாதேஷில் புதிய போக்குவரத்து முறைகள் வந்துள்ளதால் இந்த சைக்கிள் ரிக்ஷாக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.