கண்டதும் கேட்டதும் 01 – ஹஸ்ரத் ஷாஹ் ஜலால் சர்வதேச விமான நிலையம்
1 min readகண்டதும் கேட்டதும் 01
ஹஸ்ரத் ஷாஹ் ஜலால் சர்வதேச விமான நிலையம்.
பங்களாதேஷ், டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் தான் இந்த ஷாஹ் ஜலால் சர்வதேச விமான நிலையம். இது பங்களாதேஷின் மிகப்பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் 802 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
தற்போது விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதையும் புணர்நிர்மானம் செய்யப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விமான நிலையத்துள் நுழைந்ததும் ‘மூஜீப்பின் தேசத்திற்கு உங்களை வரவேற்கிறோம்’ (Welcome to the Land of Mujib) என்ற பதாகைகளைக் காணலாம்.
இந்த விமான நிலையம் டாக்காவின் வட பகுதியில், நகர மையத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள குர்மிடோலாவில் அமைந்துள்ளது.
இது 1980 இல் இருந்து செயல்படத் தொடங்கியது. முன்பு டாக்கா சர்வதேச விமான நிலையம், ஸியா சர்வதேச விமான நிலையம் போன்ற பெயர்களில் அறியப்பட்டது. தற்போது, பங்களாதேஷ் சூபி ஞானியான ஷா ஜலால் (றஹ்) அவர்களின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விமான நிலையங்களை குறிப்பிட சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை, சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (International Air Transport Association) உறுதிப்படுத்துகிறது. இது IATA குறியீடு என்று அழைக்கப்படும்.
அந்தவகையில், இந்த விமான நிலையத்தின் இட அடையாளங்காட்டி (IATA location identifier) அல்லது இடக் குறியீடு (Location Code) “DAC” ஆகும். இது “டாக்கா” என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த DAC என்பதை இந்த விமான நிலைய ஆவணங்களில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
பங்களாதேஷ் 26 மார்ச் 1971 இல் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்னரே இந்த இடத்தில் விமான தளம் காணப்பட்டாலும் 1981 இல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஸியாவுர் ரஹ்மானினால் இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.