December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

AI Journalism (செயற்கை நுண்ணறிவு ஊடகவியல்)

1 min read

AI Journalism என்பது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. அதுவும் அதிக மாறுதல்களை வேகமாக உள்வாங்கி வளரும் ஒரு துறை. இத்துறையில் பல பரீட்சார்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல வெற்றியளித்துள்ளன. இனி, ஊடகத்துறையில் அதிக சம்பளம் தரும் ஒரு துறையாக இது இருக்கும்.

Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) என்பது முன் திட்டமிடப்பட்ட செயலி (Application) மற்றும் தானியங்கு (Automated) முறை என்கிற இரண்டின் கூட்டில் வளர்ந்த ஒரு துறையாகும். இவை இரண்டையும் இத்துறைக்கு அடிப்படைகளாக சொல்ல முடியும்.

குறியாக்கம் (Coding) மூலம் முன்கூட்டி வழங்கப்படும் கட்டளைகளை (Command) அடிப்படையாகக் கொண்டு தானாக இயங்கும் (Automated) தன்மை கொண்ட பொறியன்கள் (Robots) மூலம் வேலைகளை இலகு படுத்துவதே இந்த செயற்கை நுண்ணறிவு.

இந்த செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்ட பாய்ச்சல் தான் “இயற்கை மொழி செயலாக்க மாதிரிகள்” என்பது. இவை எழுத்து (Text) மற்றும் பேச்சு (Voice) மொழிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளின் விளைவுகளின் வெற்றியே. இதனைக் குறிக்க நாம் GPT (Generative Pre-trained Transformer) என்று கூறுகிறோம். அப்படியென்றால், ‘உருவாக்கல் திறன் கொண்ட முன் பயிற்சி பெற்ற மாற்றி’ என தமிழ்ப் படுத்த முடியும்.

“Robot சுயமாக செய்திகளை எழுதுகிறது. எழுதியதை ஒரு குரலில் Robot வே வாசிக்கிறது” என்று யாரும் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதனை இலகுவாகப் புரிய உங்களுக்குத் தெரிந்த இந்த இரண்டு உதாரணங்களையும் வைத்துச் சொல்கிறேன்.

நீங்கள் கைபேசியில் ஒரு வாக்கியத்தை Type செய்யும் போது ஒரு சொல்லின் முதல் எழுத்தை Type செய்த உடனே அடுத்த எழுத்துக்களாக இந்த இந்த எழுத்துக்கள் வரலாம் என சில சொற்களை மேலே ஒரு பகுதியில் தானாக காண்பிப்பதைக் கண்டிருப்பீர்கள் அல்லது ஒரு சொல்லை நீங்கள் Type செய்த உடன் இந்த வாக்கியத்தில் அடுத்து இந்த சொற்கள் வரலாம் என சில சொற்களை காண்பிப்பதைக் கண்டிருப்பீர்கள். இது எழுத்து மொழி சார்ந்த ஒரு உதாரணம்.

Google Map பில் நீங்கள் அடைய விரும்பும் விலாசத்தை வழங்கி, அதனைப் பார்த்துக் கொண்டு பயணம் செய்கிறீர்கள். முன் சந்தியால் வலதில் திரும்ப வேண்டும். இவ்வளவு தூரத்தில் உள்ள இந்த சந்தியின் வலது பக்கம் திரும்பவும் (Turn Right) என்று ஒரு பெண் சொல்கிறாள். அப்படி சொல்லும் குரல் எப்படி இடத்திற்கு ஏற்ப தானாக உருவாகி சொல்கிறது? இது குரல் மொழி சார்ந்த ஒரு உதாரணம்.

இவற்றின் வளர்ச்சியே GPT. இப்போது இலகுவாக புரிந்து கொள்வீர்கள். இந்த GPT பல தேவைக்கு ஏற்ப பல வகையான செயலிகளை வடிவமைத்து வழங்கியுள்ளன. அரட்டைக்கு (Chat), மொழி பெயர்ப்புக்கு (Translate), எழுத்தில் இருந்து குரலுக்கு (Text to Voice) மற்றும் நிழற்பட செம்மையாக்கம் (AI Photo Editing) போன்றன எப்போதோ வந்துவிட்டன. இவற்றின் வளர்ச்சிதான் இப்போது பேசும் AI Journalism.

இந்தப் பின்னணியில் தான் செயற்கை நுண்ணறிவு ஊடகவியல் (AI Journalism) எனபதை நோக்க வேண்டும். ஊடகவியல் என்று வரும் போது இந்த செயற்கை நுண்ணறிவு பல அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் தரவல்லது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சில கேள்விகளைக் கேட்டு AI Journalism பற்றிக் குறிப்பிடப்பட்டால் தெளிவாகப் புரியும் என நினைக்கிறேன்.

🔹 ஒரு செய்தி ஆக்கத்தை (News Article) ஒரு Robot உருவாக்குகிறது என்றால் அதன் உள்ளடக்கம் சார்ந்த மதிப்பு என்னவாக இருக்கும்?

🔹 யாரோ உருவாக்கிய ஒரு தீங்கு தரும் செய்தி Algorithm அடிப்படையில் Viral ஆகிறது என்றால் அதன் பாதிப்பு என்னவாக இருக்கும்?

🔹 இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து மாத்திரம் ஒரு தொகுப்பு உருவாகிறது என்றால் அதன் சார்பு நிலை எந்தப் பக்கம் இருக்கும்?

🔹 நீங்கள் Type செய்து கொடுக்கும் செய்தியை ஒரு Robot திரையில் தோன்றி வாசித்தால் இனி செய்தி வாசிப்பாளர்களின் நிலை என்னவாகும்?

🔹 ஒரு வானொலி முழுக்க முழுக்க GPT முறையில் இயங்கினால் இனி அறிவிப்பாளர்களின் நிலை என்ன?

🔹 நிழற்படம் எடுக்கும் போதே செம்மையாக்கம் செய்து பதிவானால் அதன் உண்மை நிலை என்ன?

🔹 குற்றம் செய்யும் Robot க்கு நமது முகங்கள் கொடுக்கப்பட்டால் நம் நிலை என்ன?

கேட்க என்னிடம் இப்படி எண்ணிலடங்கா கேள்விகள் உள்ளன. இவை சில கேள்விகளே. ஆனால், இவைதான் இன்று AI Journalism என வளர்ந்து வருகிறது. சகலருக்கும் புரியும் படியான சிலதையே இங்கு தொட்டுக் காட்டியுள்ளேன். AI Journalism குறித்த பரந்த துறையைப் பற்றி அறிய ஒரு பீடிகையாகவே இந்த ஆக்கம். தொடர்ந்து அடுத்தடுத்த AI Journalism தொடர்பான ஆக்கங்களில் சந்திக்கிறேன்.

இஸ்பஹான் சாப்தீன்

ஊடக பயிற்றுவிப்பாளர் (Media Trainer)

12.06.2023

#chatgpt#aijournalism#ArtificialIntelligent#chatbots#IsbahanLk#TrainerLk#LK#radiogpt#GPT

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.