Mobile Journalism ‘கைப்பேசி ஊடகவியல்’ என்றால் என்ன?
1 min readகைப்பேசி ஊடகவியல் என்பது இன்று அதிகம் பேசப்படுகின்ற ஒரு துறையாகும். எல்லாத் துறைகளையும் போலவே இன்று ஊடகவியலிலும் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் தான் நாம் இந்த கைப்பேசி ஊடகவியலையும் நோக்குகின்றோம்.
தொடர்பாடலுக்காக கண்டு பிடிக்கப்பட்ட தொலைபேசி இன்று பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களையும் தாண்டி பலதரப்பட்ட சேவைகளையும் உள்வாங்கி ‘கையடக்க திறன்பேசிகளாக’ (Smart Phone) சந்தையை ஆக்கிரமித்துள்ளது. அந்த வகையில் ஏனைய தொடர்பாடல் சாதனங்களான வானொலி(Radio), தொலைக்காட்சி(TV), பத்திரிகை(E paper) போன்ற அடிப்படையானவையும் இன்று இந்த திறன்பேசிக்குள் அடங்கிவிட்டன.
அதேபோல், இவற்றுக்கான உள்ளடக்கங்களை உருவாக்கும் கருவிகளாகக் காணப்படும் தட்டச்சுக்கருவி(Keyboard), நிழற்படக்கருவி(Camera), வீடியோ கருவி(Video Camera), குரல்பதிவுக் கருவி(Voice Recorder), பக்க வடிவமைப்பு மென்பொருள்(Page Layout Software), அசையுரு உருவாக்க மென்பொருள்(Animation Software), வீடியோ செம்மையாக்கல் மென்பொருள்(Video Editing Software), புகைப்பட செம்மையாக்கள் மென்பொருள்(Photo Editing Software) என தனித்தனியாக காணப்பட்டவையெல்லாம் இன்று கையடக்க திறன்பேசிகளுக்குள் செயலிகளாக(Apps) வந்துவிட்டன. எனவே, திறன்பேசி என்பது, தொடர்பாடலுக்கான ஊடகமாகவும்(Communication tool), ஊடகங்களுக்கான பலவகையான உள்ளடக்கங்களை தயாரிக்கும் (Media Content Creation tool) கருவியாகவும் காணப்படுகின்றது.
எனவே, இன்று ஊடகவியலில் கையடக்க திறன்பேசியின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. இதனால், ஊடகவியல் துறையில் கையடக்க திறன்பேசிகள் விளைபயன்களை அதிகம் தருவதால் வினைத்திறனுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இன்று ‘கைப்பேசி ஊடகவியல்’ தனித்துறையாக வளர்ந்து வருகிறது.
எனவே, ஊடகவியல் குறித்த தெளிவும் திறன்பேசியினை அதற்காக எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்ற அறிவும் கையடக்க தொலைபேசி ஊடகவியலாளர்களுக்கு இன்றியமையாதவைகளாகும். பாரம்பரிய பிரதான நிலை ஊடகங்கள் (Mainstream media) கூட இன்று பல்லூடக உள்ளடக்கங்களை (Multi Media Content) உருவாக்கி இணையத்தளங்களாகவும் (Websites) இயங்கி வருகின்றன. அதுதவிர, சமூக ஊடக மேடைகளையும் (Social media platforms) ஆக்கிரமித்து வருகின்றன. இதன் விளைவால் தனித்தள ஊடகங்கள் கூட்டு ஊடகங்களாக (Convergence Media) மாறி தம்மை தக்கவைத்துக் கொள்ள முயற்சி எடுத்து வருகிறன. எனவே, இன்று எந்த வடிவத்தளத்தில் குறித்த பிரதான நிலை ஊடகம் இயங்கினாலும் பல்லூடக உள்ளடக்கங்களை உருவாக்கி இணையத்திலும் தம்மை இணைத்துக் கொண்டு இயங்குகின்றன.
இதனால், ஊடகவியலாளன் (Media Person) என்பன் இன்று பல்லூடக உள்ளடக்க தயாரிப்பாளனாகவும் (Multimedia content creators) இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிலையாக மாறிவிட்டது.
இணைய வேகத்தில் ‘செய்திகள் செக்கனில் செத்துவிடுகின்றன’. எனவே, இன்று தனித்தனி சாதனங்களை வைத்துக் கொண்டு உள்ளடக்கங்களை முன்வைப்பதைவிட வேகமாக ஒரே சாதனத்தைக் கொண்டு சகலதையும் செய்ய முடியும். அதற்கு திறன்பேசி சிறந்த ஒரு சாதனமாகும். எனவே, இவற்றினடியாகத்தான் இன்று ‘கையடக்க தொலைபேசி ஊடகவியல்’ தனத்துறையாக வளர்ச்சி கண்டுள்ளது.
இங்கு, கையடக்க திறன்பேசி மூலம் ஊடகவியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாலும் நிலையங்கள் தரித்தின்றி நகர்ந்தபடியே சகல ஊடக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமாக இருப்பதாலுமே இது ‘கையடக்க தொலைபேசி ஊடகவியல்’ என்று அழைக்கப்படுகிறது. எனவே, கையடக்க திறன்பேசி பற்றிய அறிவு மற்றும் தொடர்பாடல் பற்றிய தெளிவு என்பன இன்று ஊடகத்துறையில் இயங்குவோருக்கு மிக மிக முக்கியமானவை.