December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

ரமழான் : மாற்றத்தின் மாதம்.

1 min read

Isbahan Sharfdeen

ரமழான் வந்துவிட்டது. ரமழான் மாதம் என்பது மாற்றத்தின் மாதமாகும். இந்த மாதத்தில் பல்வேறு விசேட அம்சங்கள் இருந்தாலும் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது மாற்றமாகும். மாற்றம் எனும்போது, இங்கே தனி மனித மாற்றம், குடும்ப மாற்றம், சமூக மாற்றம் போன்ற சகலதும் இதிலே உள்ளடங்குகின்றது.

இலங்கையைப் பொருத்தவரையில் கடந்த பல வருடங்களாக ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு அசம்பாவிதங்களும் அனர்த்தங்களும் ஏற்படுவதை நாம் கண்டு வருகின்றோம். பலரும் இதனை பல்வேறு கோணங்களில் நோக்குகிறார்கள். ஆனால், இப்படியான விடயங்கள் இடம்பெற்ற காலப்பகுதியை தொடர்ந்து ரமழான் வருவதென்பது நமக்கு இறைவன் ஏதோ ஒரு செய்தியை கொண்டு வருகிறான் என்பதை உணர்த்தி நிற்கின்றது.

இப்படியான அனர்த்தங்கள், அசம்பாவிதங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. நாம் விட்ட தவறுகளை சீர்தூக்கிப் பார்க்க ரமழான் அமைகின்றது. நம்மால் இடம்பெற்றிருக்கின்ற தவறுகள் தப்புகளுக்காக மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் இறைவனை நெருங்குவதற்கு இப்படியான அனர்த்தங்களை தொடர்ந்து ரமழான் வருகின்றது. இப்படியாக நாம் இதனை பார்ப்பது மிகவும் பொருத்தமானது.

எனவே, இவற்றினடியாக எமது றமழானை எதிர்நோக்குவது நம்மை, நம் குடுப்பத்தை, நம் சமூகத்தை முன்னேற்றம் மிக்க மாற்றத்தை நோக்கி நகர்த்த ஏதுவாக அமையும். இறைவனை நோக்கி நெருங்குவதனூடாக அந்த எதிர்பார்க்கும் மாற்றங்களை கொண்டு வர முடியும்.

முதலாவது, நான் என்னை மாற்றிக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். ஆன்மீக ரீதியாக, அறிவு ரீதியாக, உடல் ரீதியாக என்னில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இறைவனுடனான தொடர்பு, மற்ற மனிதர்களுடனான உறவு, மற்ற உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகளுடனான எனது உரிமைகள் என்பவற்றில் நான் விட்ட தவறுகள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். அவற்றிலிருந்து ஆரோக்கியமான நிலைக்கு மாற நான் என்ன என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும். அதற்காக திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒரு மனிதன் அவனாக மாறாத வரை இறைவன் மாற்ற மாட்டான்.

எனவே, இதனை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். உளவியலாளர்கள் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான ஒரு செய்தி தான் ஒருவர் தனது அன்றாட வாழ்வில் புதிய ஒரு பழக்கத்தை தொடர்ந்து (அண்ணளவாக) முப்பது நாட்கள் விருப்பத்துடன் செயல்படுத்தி வந்தால் அது அவருக்கு வழக்கமாகி விடும் என்பது. எனவே, எமக்கு முப்பது நாட்கள் முன்னே இருக்கின்றன. அவற்றை நாம் நம்மில் இன்ன இன்ன மாற்றங்கள் வரவேண்டும் என்ற நோக்கங்களை வகுத்துக் கொண்டு விருப்பத்தோடு செயல்படுத்தினால் நிச்சயமாக அந்த மாற்றத்தை கண்டுகொள்ள முடியும்.

இரண்டாவது, குடும்ப ரீதியாக பல்வேறு தவறுகள் நமது கடந்த காலங்களில் இடம்பெற்று இருக்கலாம். பல விசயங்கள் குடும்பக் கட்டமைப்புக்குள் மாறவேண்டியிருக்கலாம் அவற்றை மறுபரிசீலனை செய்து அவற்றை சீர் செய்ய திட்டமிட வேண்டும். நம் உறவுகளில் அன்பு குறைந்துள்ளது. நாம் உரையாடுவது குறைந்துள்ளது. நாம் ஒருவருக்கொருவர் அங்கீகாரம் வழங்குவது குறைந்துள்ளது. நம் மத்தியில் வெளிப்படைத்தன்மை குறைந்துள்ளது. இவற்றை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. எனவே, குடும்பத்துக்குள் முன்னேற்றமிக்க மாற்றங்கள் ஏற்பட இந்த ரமழானை பயன்படுத்துவோம்.

மூன்றாவது, ஒரு சமூகம் என்ற வகையிலும் மாற வேண்டியுள்ளது. சில வழிகெட்ட விசமிகளின் தீவிரவாத செயற்பாட்டால் தற்போது, நாம் மீள சீர்பெற வேண்டிய கட்டாய நிர்ப்பந்தந்துக்கு ஒரு சமூகமாகவே தள்ளப்பட்டிருக்கின்றோம். எனவே, இதனை சமூக நிலைமாறுகால சந்தர்ப்பமாகவே பார்ப்போம். சமூக கூட்டுச் சிந்தனைக்கான காலமாக ரமழானை பயன்படுத்துவோம். விழுந்திருக்கும் இடைவெளியை சமூகமாக நாம் முன்னெடுக்கும் மாற்றங்களால் மாத்திரமே இடைநிரப்பு செய்யலாம். எனவே, எங்கெங்கு, எப்படி மாற்றம் நிகழ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள இந்த ரமழானில் முயற்சி கொள்வோம்.

எனவே, ரமழான் என்பது மாற்றத்தின் மாதமாகும். அந்த மாற்றம் தனிநபர், குடும்ப, சமூக தளங்களில் ஏற்பட வேண்டும். நீங்கள் மாறா விட்டால் ஏனைய சமூகங்களை கொண்டு மாற வைப்பான். இதுவே, உலக நியதி. தக்வா உள்ளவர்களாக மாறுவதற்காகவே முன்பிருந்த சமூகங்களுக்கு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்களுக்கும் நோன்பு விதிக்கப்பட்டிருப்பதாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. தக்வா என்ற சொல்லுக்கு இறையச்சம் என்ற பொருள் இருப்பதற்கு மேலதிகமாக ‘சுயமாக செயல்பாட்டை முன்னெடுக்கும் தன்மையைப் பெறல்’ என்ற விளக்கத்தையும் சில அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். எனவே, வந்துள்ள ரமழானை நம்மில் மாற்றங்களை கொண்டு வர சிறந்த காலமாக பயன்படுத்திக்கொள்வோம். ‘மாற்றம் என்ற ஒன்றே உலகில் மாறாத விதி’ என்பதை உணர்ந்து செயல்படுவோம்!

06/05/2019

இஸ்பஹான் சாப்தீன்
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

#Ramadan2019 #SaveLanka #Change #Writer #IsbahanLk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.