நீயில்லாத நான்..!
1 min read
நம் நாட்காட்டி தனித்துவமானது
வாரம் மூன்று முறை
காதலர்தினம் வரும்
காலி கோட்டைக்குத் தெரியும்.
உன் கைக்குள் கைக்குட்டையாய்
என் மனசு நொருங்குகயில்
சுகமாய் இருந்தது
அந்த சிரித்த காலத்தில்.
நீ யாருக்காகவோ கணைத்ததால்
மனசு தூக்கியெறியப்பட்டது
காற்று கனத்ததால்
சருகைப் போல அந்தரத்தில்.
ஏக்கம் நிறைந்து
மனசு பலூனாய்ப்புடைத்து
வெடிக்கப் பார்க்கிறது
பெப்ரவரிகளை நினைக்கயில்.
ஆணிகுத்தி ஆராத
மேசை வடுவாய்
மனசுப் பரப்பெங்கும்
ஓசோனாய் ஓட்டைகள்.
இவ்வருட காதலர் தினத்தில்
உன் முதல் கடிதம் போல்
மசங்கிவிட்டது உலகமும்
நீயில்லாத நானும்.
காதலர் தினமென
கடலோரம் ஜோடிகள் சேர்கயில்
தாடி முளைத்த இக்கவிதை மட்டும்
ஒற்றைத் தென்னையாய்..
-தினகரன்-
2003