அஸ்ஹாபுஸ் ஸுப்பா.
சீறாவில் இருந்து…..(2)
அஸ்ஹாபுஸ் ஸுப்பா.
நபி(ஸல்) அவர்களின் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய திண்ணை காணப்பட்டது. அத்திண்ணை ‘ஸுப்பா’ என அழைக்கப்பட்டது. கல்வி கற்பதிலும் அல்லாஹ்வை வணங்குவதிலும் தீராத ஆசைகொண்ட ஒரு குழுவினர் அங்கு வாழ்ந்துவந்தனர். இவர்கள் “அஸ்ஹாபுஸ் ஸுப்பா” (திண்ணைத் தோழர்கள்) என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் ‘முஹாஜிரூன்கள்’, அதாவது, நபி(ஸல்) அவர்களின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக ‘மக்காவை விட்டு மதீனா வந்தவர்கள்’. குடும்பமோ, போதிய உணவு உடையோ இவர்களுக்கு இருக்கவில்லை. குர்ஆன் ஓதுவதிலும் அல்லாஹ்வை நின்று வணங்குவதிலுமே தம் வாழ்க்கையை செலவு செய்தனர். பகல் வேளைகளில் நபி(ஸல்) அவர்களிடமும் மற்ற நபித்தோழர்களிடமும் இஸ்லாத்தை கற்பதில் கழித்தனர். சிலர், பகலில் பாதி நேரத்தை தம் அன்றாட செலவுகளை ஈடுசெய்ய தொழில் செய்தனர். காட்டில் விறகுவெட்டி மதீனாவாசிகளுக்கு விற்று வந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் ‘அஸ்ஹாபுஸ் ஸுப்பாஹ்’ களை மிகவும் நேசித்தார்கள். அவர்களுக்கு உணவு பரிமாறாது நபி(ஸல்) சாப்பிட்டது கிடையாது. தன்னிடம் எது உள்ளதோ அதை பகிர்ந்தளிப்பார்கள். அல்லாஹ்வின் அன்பையும் அவனது இஸ்லாத்தையும் போதிப்பார்கள். எப்போதும் அவர்களுக்கு ஆறுதலாகவே இருப்பார்கள்.
70இற்கும் 400இற்கும் இடையில் இவர்களின் தொகை இருக்கும். போதிய உணவோ, உடையோ இல்லாதிருப்பினும் தம் இல்லாமையை யாரிடமும் முறையிடமாட்டார்கள். நபி(ஸல்) மீது அன்பு வைத்தவர்களாக அவர்களிடம் கற்பதின் மூலமும் அவர்களுடனேயே இருப்பதனாலும் தம் எல்லாக் கஷ்டங்களையும் மறந்துவிடுவார்கள்.
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)