தனித்துவமான பரிசு
சீறாவில் இருந்து…..(8)
தனித்துவமான பரிசு
நபி(ஸல்) அவர்களை, அவரது தோழர்கள் மிகவும் நேசித்தார்கள். தம்மை விட, தம் குடும்பத்தார், சொத்து செல்வங்களை விட நபி(ஸல்) அவர்களை நேசித்தார்கள். நபி(ஸல்) அவர்களை எப்போதும் எல்லா நிலைகளிலும் பின் தொடர்ந்தார்கள். எந்தளவுக்கெனில், நபி(ஸல்) அவர்கள் நகம் வெட்டும் போதும், முடி வெட்டும் போதும் அவற்றை சேகரிப்பார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்களின் ஞாபக சின்னங்களாகவும் பரக்கத்தாகவும் பாதுகாத்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் கடமை. அன்று, குர்பான் கொடுத்து முடித்த நபி(ஸல்) அவர்கள் தமது தலை முடியை வெட்ட ஆரம்பித்தார்கள். ஸஹாபாக்களோ, நபி(ஸல்) அவர்களின் முடியை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் அவர்களை சுற்றி அமர்ந்திருந்தார்கள். தோழர்கள் தம்மீது வைத்துள்ள அபரிமிதமான அன்பை அன்றும் நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். வெட்டிய தம்முடியில் கொஞ்சம் எடுத்து அபூ தல்ஹா அல் அன்ஸாரி(ரலி) அவர்களுக்கும் அவரது மனைவி உம்மு ஸாலிமா(ரலி) அவர்களுக்கும் கொடுத்தார்கள். பிறகு தமக்கருகில் அமர்ந்திருந்தவர்களுக்கு வழங்கினார்கள். இறுதியாக, இந்த தனித்துவமான பரிசினைப் பெற கூடியிருந்த ஸஹாபாக்களுக்கும் எஞ்சியிருந்த முடியை பகிர்ந்தளிக்குமாறு நபி(ஸல்) அவர்கள், அபூ தல்ஹா(ரலி)யை கேட்டுக்கொண்டார்கள்.
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)