பரக்கத்தான ‘கபன்’ துணி.
சீறாவில் இருந்து…..(9)
பரக்கத்தான ‘கபன்’ துணி.
ஒருவர் நபி(ஸல்) அவர்களின் அவைக்கு வந்து அழகான பருத்தியாலான போர்வைத் துணி ஒன்றை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். நபி(ஸல்) அவர்களும் தேவையோடு இருந்ததால் தட்டிக்கழிக்காது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள்.
அந்நேரம் அங்கு வந்த ஒரு நபித்தோழர் நபி(ஸல்) அவர்களின் மேனியில் போர்த்தியிருந்த அப்போர்வையைக் கண்டதும் ‘எவ்வளவு அழகான ஒரு போர்வை யாரஸூலல்லாஹ்’ எனக்கூறி வியந்தார்.
நபி(ஸல்) அவர்களும் ‘உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என பதிலுக்குக் கொடுத்துவிட்டார்கள்.
அந்த நபித்தோழரும் மிக்க மகிழ்ச்சியோடு எடுத்துச்சென்றார்.
நபி(ஸல்) அவர்களுக்கு இந்த பருத்தித்துணி அவசியமான ஒன்றெனத் தெரிந்தும் இவர் மோசமாக நடந்து கொண்டாரே, எந்த வித நன்றியும் இன்றி எடுத்துச்சென்று விட்டாரே என மற்ற நபித்தோழர்கள் கோபப்பட்டனர். அந்த நபித்தோழரை பின்தொடர்ந்து சென்று கேட்டும்விட்டனர். “நபி(ஸல்) அவர்களுக்கு அவசியமான ஒரு பொருளை பெறுவதற்கு உங்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லையா?”
“நபி(ஸல்) அவர்களுக்கு அவசியம் தேவையான ஒரு பொருளென்று எனக்கு நன்றாகத் தெரியும், தெரிந்துதான் கேட்டுப் பெற்றுக்கொண்டேன். இது எனக்கு மிகவும் அவசியமான ஒரு பொருள். இது எனக்குக்கிடைத்த பரக்கத்தான ஒரு பரிசு. என் கபனுடைக்காக இதனை நான் பாதுகாப்பாக வைக்க வேண்டும், நான் மரணித்தால் என் குடும்பத்தினர் இந்த பரக்கத்தான (நபி நாகயத்தின் மேனி பட்ட) பருத்தித் துணியால் என்னுடலை சுற்றி கபனிட்டு அடக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் நான் அப்படி நடந்துகொண்டேன்.” என அந்த நபித்தோழர் பதிலுரைத்தார்.
இந்தப்பதிலை எதிர்பார்க்காத மற்ற நபித்தோழர்கள், நபி(ஸல்)அவர்களின் மீது இந்த நபித்தோழர் வைத்திருந்த அளவில்லா அன்பை எண்ணி ஆச்சரியப்பட்டனர். (அபூ தாவுத்)
(ஸஹாபாக்கள் நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) மீது அன்பு வைத்தது எப்படி?)