அந்தரே சீனி சாப்பிட்டது போல…
<குழந்தை-2>
‘அந்தரே’ அரச மாளிகையில் இருந்த ஒரு கோமாளி.
அரசனையும், பொதுமக்களையும் சிரிக்க வைப்பதே அந்தரேயின் வேலை.
ஒரு நாள், அந்தரே அரச மாளிகைக்குச் சென்றிருந்தான்.
அப்போது, மாளிகை முற்றத்தில் பாயொன்று விரிக்கப்பட்டு அதன்மீது சீனி போடப்பட்டிருந்தது. எதுவுமே அறியாதது போல் அரசனிடம் போய் ‘அரசே! பாய் நிறைய.. என்ன இது..?’ என்று கேட்டான். அந்தரேயை ஏமாற்ற நினைத்த அரசன் ‘ஆ.. இதுவா … வெள்ளை மணல்’ என்றார்.
அந்தரேயிற்கு சீனி சாப்பிடவேண்டும் போல் தோன்றியது.
அரசனோ மணல் என்று சொல்லிவிட்டானே.
சற்று நேரம் யோசித்து ஒரு திட்டத்தை தீட்டினான் அந்தரே.
உடனே வீட்டுக்குப்போய், மகனை அழைத்து காதில் ரகசியமாக ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் மாளிகைக்கு வந்தான்.
சிறிது நேரத்தின் பின் அந்தரேயின் மகன் ஒப்பாரி வைத்தபடி ஓடிவந்தான்.
அந்தரே பதட்டத்துடன் ‘என்ன மகனே…. என்ன நடந்தது..?’ என்று கேட்டான்.
‘அப்பா…! அம்மா இறந்துவிட்டாள். நாம் இனிமேல் உயிரோடு இருந்து என்ன பயன்’ அழுதபடி சொன்னான்.
‘ஆமாம்! நாம் இனிமேல் இருந்து என்ன பயன்.. உன் வாயிலும் மண்; என் வாயிலும் மண்’ என்று சொல்லியவாறு பாயில் புரண்டு புரண்டு சீனி சாப்பிட்டனர்.
அந்தரே நம்மை கலாய்க்கிறான் என்பது அரசனுக்குப் புரிந்தது.
அரசனும் சுற்றி இருந்தவர்களும் வயிறு குழுங்கச் சிரித்தனர்.