ஸலாம் சொல்வோம் (GREETING)
1 min read‘ஸலாம்’ சொல்வதில்
போட்டி போட்டுக் கொண்டார்கள்.’
எதற்காக இந்தப் போட்டி?
இரு மனிதர்கள் முகமனுக்காய் பரிமாறும்
ஒரு வாசகத்திற்காக போட்டி போடுவதா?
என் இந்து நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு கிடைத்தது.
பழக்கத்தில்,
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ கூறி பேச ஆரம்பித்தேன்.
‘நீ இப்போது என்ன சொன்னாய்’
என்று கேட்டான்.
‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’
என்பது அதன் பொருள் என்றேன்.
நண்பன் சொன்னான்;
‘எவ்வளவு அற்புதமான ஒரு வாசகம்,
இனி நானும் அப்படித்தான் சொல்வேன்’
என்றான்.
யோசிக்க ஆரம்பித்தேன்..!
உண்மையில்,
அற்புதமான ஒரு வாசகம்.
சுவர்க்க வாயிலில் அமரர்கள் நம்மை வரவேற்கும்
வாழ்த்து வாசகம்.
உறவைப் பலப்படுத்த சிறந்த வாசகம்.
‘முரண்பட்ட இருவரில்
ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர்
உங்களில் சிறந்தவர்’
என்பது நபி வாக்கு.
‘முரண்பாடுகள் இதயத்திலிருந்தே தொடங்குகின்றன.
சமாதானமும் இதயத்திலிருந்தே தொடங்க வேண்டும்’
என்பர்.
இதனாலோ..,
இரு இதயங்கள்
சந்திக்கும் போதே
சாந்தி வாசகம் பகிருமாரு கூறுகிறது இஸ்லாம்.
‘உங்களில் அறிந்தவர்களுக்கும்
அறியாதவர்களுக்கும் ஸலாத்தைப் பரப்புங்கள்’
என்பதும் நபி மொழி’
(முஸ்லிம்)
முகமன் கூறச் சொல்லித்தரும் மதம் உலகிலேயே இஸ்லாம் ஒன்றுதான்.
மனித உறவைப் பலப்படுத்த இவ் அற்புத வாகத்தை விட வேறு எதைச் சொல்ல முடியும்!
நம்மைச் சூழவுள்ள முகமன் வாழ்த்துக்களை கவனித்துப்பார்த்தேன்.
“வணக்கம்” என்பது “வணங்குதலின்” வார்த்தை.
“வணங்குதல்” இறைவன் ஒருவனுக்கு உரியது.
அப்படியாயின் வணக்கம் இறைவனுக்கு மட்டும் தானே சொல்ல வேண்டும்.
மனிதனுக்கு மனிதன் எப்படி வணக்கம் சொல்ல முடியும்.
“ஆயுபோவன்” என்பார்கள்.
“ஆயுபோவேவா” என்பது மறைந்திருக்கும் பொருள்.
“ஆயுள் அதிகரிக்க வாழ்த்துகிறேன்” இதன் தமிழ் அர்த்தம்.
இதயத்தில் சாந்தியும் இகத்தில் சமாதானமும் இன்றி ஆயுள் அதிகரிக்க வாழ்த்துவதா?
Good என்பதோடு அவ் அப் பொழுதில் Morning என்பதையோ Evening என்பதையோ இணைத்து வாழ்த்துகிறோம்.
ஒவ்வொரு பொழுதையும் நல்லதாக இருக்க வாழ்த்துவதை விட ஸலாம் அற்புதமான வாசகம் தானே!
கோபத்தோடு போய், ஸலாம் கேட்டு சாதுவான நிலைமையை வாழ்வில் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
முரண்பாட்டை நீக்கும் மூலிகையாக ஸலாம் இருப்பதை நான் நம்புகிறேன்.
நீங்கள்?
அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறதே!
“அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால் ‘ஸலாம்’ (சாந்தி உண்டாகட்டும்) எனக் கூறுவார்கள்.” (சூரதுல் புர்கான்: 63)
நன்றி நண்பா!
உண்மையில் ஸலாம் அற்புதமான வாசகம் தான்!
“உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’
ஸலாம் சொன்னேன்…
அழகாக பதில் சொல்லிப்பாருங்கள்.
உறவு பலப்படும்.
உள்ளம் சாந்தப்படும்.
எல்லாவற்றையும் விட நன்மையும் கிடைக்கும்.
இதனாலேயே நபித்தோழர்கள் போட்டி போட்டார்கள்.
இஸ்பஹான் சாப்தீன்.
வைகறை-இலாமிய குடும்ப சஞ்சிகை
2010 ஏப்ரல்-ஜூன்
இதழ் 18
பக்கம்-4