பல குழந்தைகளது முகங்களைச் சுமந்த ஒரு பதாகை புதிதாக பொருத்தப்பட்டிருக்கிறது.
வாழ்த்துக்கள் என பெரிதான எழுத்துக்கள். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களது பெயர்களும் புள்ளிகளும் புகைப்படங்களுக்குக் கீழ் போடப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் ஒருவரது புகைப்படம் போடப்பட்டிருக்கிறது. அதற்குக் கீழால் பிரபல ஆசான், பலநூறு மாணவர்களை சித்தியடையச்செய்த ந
ல்லாசான் எனும் அடைமொழியுடன் அவர் பெயர் போடப்பட்டிருக்கிறது. அடுத்த வருடத்திற்கான புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆரம்பம் என்பது அதன் கீழ் உள்ள முக்கிய தகவல்.பல பெற்றோர்கள் புத்தகப்பையை ஒரு தோளில் சுமந்துகொண்டு மறுகையால் குழந்தைகளை பிடித்திழுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தனர். சிலர் வாகனங்களில் வந்து குழந்தைகளை இறக்கிவிட்டுச் சென்றனர். சில தாய்மார் குழந்தைகளை வாயிலுக்குள் தள்ளிவிட்டு குழந்தைகள் வெளிவரும் வரை காத்திருக்க இடம் தேடிக்கொண்டிருந்தனர். எப்படியோ பலநூறு குழந்தைகளை காண முடியுமாக இருப்பதோடு அதே அளவு பெற்றோர் பாதுகாவலரையும் காணமுடியுமாக இருந்தது.
இந்தக் காட்சியை நீங்கள் உங்கள் ஊர்களிலும் காணலாம். இதெல்லாவற்றையும் விட அந்த பிரபல ஆசான் சொன்ன விடயம் மிக முக்கியமானது. ஒரு நாள் எனது வகுப்பை ஆரம்பித்து நடத்திக்கொண்டு செல்லும்போது ஒரு தாய் பதட்டத்தோடு அவசர அவசரமாக வகுப்புக்குள் நுழைந்து பின் வருசையில் அமர்ந்து கொண்டார். எனக்கு மிகவும் சங்கடமாகவும் பயமாகவும் இருந்தது. ஏதாவது பிரச்சனை யோ அல்லது என் கற்பித்தலில் ஏதும் பிழை காண வந்திருக்கிறாரோ என்றெல்லாம் யோசித்தபடி ஒருவாறு பாடத்தை நடத்தி முடித்தேன். பாடம் முடிந்ததும் குறித்த தாயிடம் விவரம் கேட்டேன். அதற்கு அத்தாய் என் குழ்ந்தை தொடர்ந்து உங்கள் வகுப்புக்களுக்கு தவறாமல் வருவாள். இன்று அவளுக்கு சுகமில்லை. அவளால் வர முடியவில்லை. அதனால்தான. நான் வந்தேன். இன்று நீங்கள் கற்பித்ததை வீட்டில் உள்ள அவளுக்கு நான் கற்பிக்க வேண்டும். எப்படியோ அவள் இப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என அத்தாய் எனக்குத் தெரிவித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் இந்த மனோநிலையில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். இதனை மையமாக வைத்துத்தான் இப்படியான டியூசன்கள் சம்பாதிக்கின்றன.இன்று, கேட்ட ஒரு செய்தி, சில பகுதிகளில் சித்தியடைந்த பிள்ளைகளின் பெற்றோர் பாடசாலை அதிபருக்கும் கற்பித்த குறித்த ஆசிரியருக்கும் பெருந்தொகை காசு கொடுக்க வேண்டுமாம். சில இடங்களில் பாடசாலைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த குறித்த ஆசிரியருக்கு பாடசாலை அபிவிருத்திக் குழு காசு வழங்குமாம். இவற்றை பார்க்கும் போது புலமைப்பரிசில் பரீட்சை குழந்தைகளின் பரீட்சை கிடையாது என்பது புரியும். பெற்றோர்களது, பாடசாலைகளது கௌரவத்திற்காகவும் கல்விக் கடைகளது இலாபத்திற்காகவும் குழந்தைகள் பலிக்கடாவாக்கப்படுகிறார்கள் என்பது புரியும். இந்தப் பரீட்சை உண்மையில் தரமான ஒரு பரீட்சை. ஆனால், ஐந்தாம் தரக்குழந்தையின் குழந்தைமையை புறக்கணித்து இயந்திரத்தனமாக குழந்தைகளை கொடுமைப்படுத்தும் இந்நிலை காரணமாக இப்பரீட்சையில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு கிடையாது.உளவியல் ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் கடுமையான முறையில் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்வும் சாவும் இதில்தான் தங்கியிருப்பதுபோல் கல்விக்கடைகள் குழந்தைகளை அழுத்துகின்றன. மாதிரிப்புத்தகங்களும் பயிற்சிக்கையேடுகளும் என ஒரு மாபியா செயற்படுகிறது. இந்தப்பரீட்சையில் சித்தியடைந்த குழந்தைகள் தூக்கிக் கொண்டாடப்படுகிறார்கள். சித்தியடையாத மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். தண்டிக்கப்படுகிறார்கள். இன்று பல குழந்தைகளது முகத்தை காணும் போது கடும் கவலையாக இருந்தது. பல பெற்றோர் நடந்துகொண்ட விதம் கோபத்தை ஏற்படுத்தியது.புலமைப்பரிசில் பரீட்சைக்காக கடும் முயற்சி எடுத்துப் படித்தும் சித்தியடையாமல் போகிற போது அக்குழந்தை முயற்சியில் பலனில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவதாலும் இந்தப்பரீட்சை எழுதும் வரை பெற்றோர் கொடுத்த கரிசணை அதன் பின் குறைவடைவதாலும் பல மாணவர்களின கற்றலில் பின்னடைவு ஏற்படுவதை அவதானிக்க முடியுமாக உள்ளது.எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளை பார்க்கின்ற பார்வையிலும் இப்பரீட்சையை எதிர்கொள்கின்ற விதத்திலும் மிகச் சரியான நிலைப்பாட்டோடு நடந்துகொள்வது அவசியமாகும். வெளிவந்திருக்கும் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எந்தக்குழந்தைக்கும் தாழ்வுமனப்பான்மையை, கவலையை ஏற்படுத்தாதிருக்கட்டும். பெற்றோர்களது கற்பித்தல் மீதான அக்கறை எல்லை மீறாது இருக்கட்டும். மாணவர்களது கல்வி நடவடிக்கைகளில் எப்போதும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமச்சீரான கரிசனை இருக்கட்டும்.