புன்னகை (SMILE)
1 min readகுழந்தைகள் புன்னகைப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா….?
கை, கால் அசைத்து எங்கெங்கோ பார்த்தபடி புன்னகைப்பார்கள்.
அப்போதெல்லாம் நான் ஆச்சரியமாகப் பார்ப்பேன்.
ஒரு நாள், என் உம்மாவை அழைத்துக் கேட்டேன்.
‘எதற்கு உம்மா, இந்தக் குழந்தைகள் வானத்தைப் பார்த்துப் புன்னகைக்கிறார்கள்….?’
என் உம்மா சொன்னார்;
‘குழந்தைகளுக்கு மலக்குகள் பூ காட்டுகிறார்கள்.
அதைப் பார்த்துப் புன்னகைக்கிறார்கள்.’
நான் நம்பினேன்.
சிலபோது, அது உண்மையாகவும் இருக்கலாம்.
புன்னகைக்கு அர்த்தம் ஆயிரம் இருக்கலாம் அல்லவா..?
“Smile can speak thousand of words”
“புன்னகை ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசும்” என்பார்கள்.
அர்த்தங்களைத் தாண்டிய உடல் மொழி புன்னகை.
மனிதர்களுக்கு மட்டுமே முடிந்த இப்புன்னகையைத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர்…
நண்பர்கள் இல்லையென்று கவலைப்படுகிறவர்களே….!
புன்னகைத்துப் பாருங்கள்…!
பட்டாம் பூச்சிகளாய் நண்பர்கள் உங்களைச் சுற்றி சிறகடிப்பர்.
மலர்கள் இதழ் விரித்தாலே மயங்குகிறது நம் மனம்.
மனிதர்கள் இதழ் விரித்தால் சொல்லவும் வேண்டுமா…?
புன்னகை பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய அமிர்தம்.
உணர்வுகளை பலப்படுத்துவதில் புன்னகைக்கு அதிக பங்கு இருக்கிறது.
எந் நகை இல்லாவிட்டாலும் புன்னகை இருக்க வேண்டுமென்பது எனது நிலைப்பாடு.
நபி(ஸல்) அவர்கள் புன்னகைப்பதில் மன்னனாக இருந்தார்கள்.
அதனால்தான் நல்ல மனிதர்கள் நண்பர்களாகக் கிடைத்தார்கள்…
அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்(ரலி):
நபிகளைவிட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை என்கிறார்.
(திர்மிதி, அஹ்மத்)
ஒரு மனிதனை,
“நான் உன்னை அங்கீகரித்துவிட்டேன்” எனச் சொல்லும் திறன் புன்னகைக்குத்தான் இருக்கிறது.
இதயத்துள் ஒருவர் நுழைய வேண்டுமாயின் புன்னகை வாசல் திறந்திருக்க வேண்டும்.
உறவுக்கான அழைப்பு புன்னகை,
புன்னகை பகைக்கு எதிரி,
நட்புக்கு நண்பன்.
புன்னகைக்கத் தூண்டும் மதம் உலகிலேயே இஸ்லாம் ஒன்றுதான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உன் சகோதரரின் முகத்தைப் பார்த்துப் புன்னகைப்பதும் ஸதகாவாகும்’
புன்னகை ஸதகா(தர்மம்) ஆகும்.
ஸதகா நன்மை சேர்க்கிறது.
ஒரு விவாத அரங்கில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சொன்னார்:
“புன்னகையை மலிவாக்குங்கள்”
அப்போது Dr.ஸாகிர் நாயக் இப்படிச் சொன்னார்:
“புன்னகையை இலவசமாக்குங்கள்”
நானும் சொல்கிறேன்…!
புன்னகை செய்யுங்கள்!
உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
“முகத்தின் பசுமை புன்னகையில் தங்கியுள்ளது” என மருத்துவமும் சொல்கிறது.
இஸ்பஹான் சாப்தீன்
வைகறை-இஸ்லாமிய குடும்ப சஞ்சிகை
2009 ஜூலை- செப்டம்பர்
இதழ்-15
பக்கம்-11