கைத்தொலைபேசி இல்லாத ஒரு உலகம்.
1 min readகையடக்கத் தொலைபேசி இல்லாத உலகுக்கு போக வேண்டும். அங்கேதான் பாசாங்கற்ற மனிதர்களை சந்திக்கலாம். ஒவ்வொரு விசாரிப்பிலும் உயிர் இருக்கும். ஈரம் இருக்கும். அப்போதுதான், மௌனமும் நிசப்தமும் நிச்சலனமும் கூட உள்ளத்தைத் தொடும். சினுங்களும், கெஞ்சலும், கொஞ்சலும் ரிங்டோனாகிப் போய்விட்டதால் உறவுகள் வரண்டுபோன உடன்படிக்கைகளாகிவிட்டன. தொடர்புகளை உருவாக்கிய அளவுக்கு தொலைபேசி உறவுகளை நெறுக்கமாக்கவில்லை.
விரல்நுனிகள் அதிகம் தேய்ந்துவிட்டன. அழுத்திய இலக்கங்கள் மறுமுனையில் உயிரற்ற குரல்களை கேட்கச் செய்கின்றன. வார்த்தைகளில் எந்த உணர்ச்சிகளும் தொனிப்பதில்லை. முப்பது நாளில் படித்த மொழிகள் போல் எல்லோரும் ஒரேமாதிரி கதைக்கிறார்கள். எங்கள் ஊர் ஈரப்பலா மரம், பொதுக்கிணறு, சுக்குக்கோப்பி, நாட்டுக் கோழி, ஆட்டுக்குட்டி என எதுவுமே நம் சந்திப்புக்களில் விசாரிக்கப்படுவதில்லை. விசாரிக்க சந்திப்பதும் இல்லை.
எம் ஊர் மனிதர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள். நானும் கூட மாறியிருக்கிறேன். சிலபோது விஞ்ஞானத்தால் சபிக்கப்பட்டுவிட்டோம் போல் தோன்றுகிறது. சந்திக்கும் மனிதர்களுடன் பேச வார்த்தைகள் தட்டுப்பாடாய் இருக்கிறது. ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச முடியாத கையாலாகாத நிலை தொற்றிவிடுகிறது. பல வருடங்கள் கதைத்தாலும் தீர்ந்துவிடாத தகவல்களை சுமந்துகொண்டிருக்கிறோம். அதிவேக தகவல் பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். இருப்பினும் சகமனிதனுடன் பேச எந்தத் தகவலும் உடன் பொருத்தமாய் கிடைப்பதில்லை. அல்லது மௌனங்களை கலைத்துக்கொள்ள ஏதேதோ பேசிக் கொள்கிறோம். இது ஒவ்வொருமுறையும் தனிமையை விடக் கொடுமையாய் இருக்கிறது.
எந்த விசாரிப்பிலும் ஈரம் இல்லை. விசாரிப்புகளும் ஒருவகையான ரெடிமேட் ரகமாய் இருக்கின்றன. அவற்றுக்கப்பால் நாம் விசாரித்துவந்த எதுவும் விசாரிக்கப்படுவதில்லை. சுகமா? என்றால் ‘சுகர்’ என்ற பதிலோடு எல்லாம் முடிந்துவிடுகிறது. அப்போதொரு காலத்தில், நம் ஊர்களில் அதிகாலையில் எத்தனை மனிதர்களை சந்தித்து அலவலாவி விட்டு பணியிடம் சென்றிருப்போம். அந்த ஒவ்வொருவரினதும் விசாரிப்பும், தோளைத்தொட்டுப் பேசிய வார்த்தைகளும் இன்னும் உள்மனதில் பத்திரமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இன்று, ஆயிரம் பேரைத் தெரியும். ஆனால், ஊர் தந்த அந்த ஐந்து பேரின் நெருக்கத்தை தர லாயக்கில்லை. ஆயிரம் பேருடன் தொடர்பு. ஆனால், அந்த ஐந்து பேரின் உறவுபோல் எந்த உறவும் இல்லை. சமூக வலைப்பின்னலில் நேர்கோட்டு மனிதர்களே அதிகம் இருக்கிறார்கள். கவலையில்லாத மனிதர்கள். புகைப்படங்களில் சிரித்த முகங்களைத்தான் காணமுடியுமாக இருக்கிறது. நான் உட்பட எல்லோரும் ஒரு கண்ணால் பார்க்கும் ஒரு உலகைப் படைத்துக்கொண்டிருக்கிறோம்.
இலக்கணச் சுத்தத்துடன் கூடிய கதைகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ஆனால், என் குழந்தைக்குச் சொல்ல எனக்கு மட்டுமே தெரிந்த எந்தக் கதையும் என்வசம் இல்லை. ஏனெனில், எமக்கு இயந்திரங்களுடன் இருக்கும் நெருக்கம் மனிதர்களுடன் இல்லையே. ஓப்பனை செய்து பந்தலில் உட்கார வைத்த பெண்ணைப்போல எல்லோரும் குனிந்த தலை நிமிராது கைவிரல் நடுக்கத்துடன் இருக்கிறார்கள். பக்கத்தில் உள்ள மனிதனுடன் கதைக்கப் பயத்தில் தொலைபேசியை அழுத்திக்கொண்டிருக்கும் பலரை அன்றாடம் சந்திக்க வேண்டி இருக்கிறது. இருவர் பேசுவது நம் காதுகளுக்கு கேட்டுவிட்டால் எரிச்சல் வருகிறது. முடிந்தளவு காதுகளை சங்கீதத்தால் அடைத்துக் கொள்ளப் பார்க்கிறோம். பஸ்ஸில் பல மணிநேரம் தன்னுடன் பயணிக்கும் பக்கத்து இருக்கை மனிதனை அறிந்துகொள்ளும் பழக்கம் நம்மிடம் அறவே இல்லை.
நம் தொலைபேசியில் உள்ள தொடர்புப் பட்டியலில் அதிக இலக்கங்கள் அழைக்கப்படாதவைகள். நூற்றுக்கணக்கான தொடர்பாடல் செயலிகளை உபயோகிக்கிறோம். வைபரில் தூங்கி வட்ஸ்எப் இல் விழிக்கிறோம். குழந்தையோடு கொஞ்ச நேரமில்லை. மனைவியுடன் உரையாட நேரமில்லை. தொலைபேசியை அழுத்திக் கொண்டே சாப்பிடுகிறோம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு பதில் சொல்கிறோம். கண்ணைப் பார்த்துப் பேச கடினமாக உள்ளது. நெருக்கமாக்க வந்த தொலைபேசிகளால் உறவுகள் தூரமாகி வருகின்றன. உறவுகளை புதுப்பிக்க சில மணிநேரம் தொலைபேசிகளை அணைத்துவிட்டால் என்ன? நேரடியாக சந்தித்து உரையாடினால் என்ன? இந்த விடுமுறையை மனிதர்களுடன் கழிக்க நினைக்கிறேன். புதிய தொடர்புகளை, மன்னிக்கவும்! உறவுகளை ஏற்படுத்த எணணுகிறேன்.
நீங்கள்?
இஸ்பஹான் சாப்தீன்.
2017.04.08
— feeling peaceful.