கந்தூரியை முன்னிறுத்தி சில கருத்தாடல்கள்.
1 min readமுன்னுரை:-
இவ்வுலகப் பரப்பிலே பலதரப்பட்ட மனிதக் குழுமங்கள் சமூகங்களாக வாழ்ந்து வருகின்றன. அந்த ஒவ்வொரு சமூகங்களும் தம்மை தனித்துக்காட்டும் பல பிரத்தியேக அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்தை அடுத்த சமூகத்திலிருந்து வேறு பிரித்துக்காட்டும் இத்தனித்துவ அடையாளங்கள் அழிந்து போகின்ற போது அந்த குறித்த சமூகமும் அழிந்து போய்விடும்.
சமூகம் என்பது ஏதாவது ஒரு காரணியில் ஒன்றிணையும் இனக்குழுமத்தையே அர்த்தப்படுத்துகிறது. இதனை அபுல் ராஹிப் அல் இஸ்பஹான் “மதத்தால் அல்லது காலத்தால் அல்லது இடத்தால் அல்லது ஏதாவது ஒரு விடயத்தால் ஒன்றிணைக்கப்படும் இனக்குழுமமே (உம்மத்) சமூகம் எனப்படுகிறது. அவ்வாறு ஒன்றிணைக்கும் காரணி சுய நிர்ணயத்தின் அடியாகவோ அல்லது புற அழுத்தங்களாலோ ஏற்பட்டாலும் சரியே”* என வரைவிலக்கணப் படுத்துகின்றார். இதனையே வேறு விதமாகக் கூறுவதாயின் கோட்பாடு, சட்டவியல், மதம், கூட்டுமனப்பாங்கு, ஒழுக்கவியல், கலாச்சாரம், பண்பாடு, கலைகள், இலக்கியம் என்பவற்றில் தனியாக அடையாளங் காணப்படும் ஒரு இனக்குழுமம் எனலாம்.