உம்மா கொன்டவனுக்கு ஊர்ல பாதி
1 min readகாலி மக்களின் மனவாசம்
முதுமொழி-02
நேற்று, ஒரு வாய்ச்சண்டை பார்க்க நேர்ந்தது. சண்டைக்கு காரணம் என்னவென்று சுற்றியிருந்து பலருக்குத் தெரியாது. இருபக்கத்திலிருந்தும் வார்த்தைகள் மட்டும் வரம்பு மீறி பாய்ந்து கொண்டிருந்தன. தொடக்க பிரச்சனை என்னவென்று எனக்கும் தெரியாது. ஆனால் தொடங்கப்போகும் பல பிரச்சினைகள் என் முன் விழுந்துகொண்டிருந்தன. இரு தரப்பினரதும் வாய் வழியாக…
நம்மைச் சுற்றியுள்ள அதிகப்படியான பிரச்சினைகளுக்கு நம் இரண்டு தாடைகளுக்கும் மத்தியில் உள்ள எலும்பற்ற ஒரு சதைத்துண்டே காரணம்.
சரி, விடயத்துக்கு வருவோம்.
பற்றி எரிந்து கொண்டிருந்த வாய்ச்சண்டையை (சமாதானப்படுத்த?) இடைக்கிடையே புகுந்து எண்ணை ஊற்றி அணைக்க முயற்சி எடுத்துக் கொண்டருந்த ஒரு வெள்ளைசாளியை அனுகினேன். அவரோ முழுக்கதையையும் எனக்கு ஒப்பித்துவிட்டார். அவர் விவரித்த பிரகாரம், இது, இரு தரப்பு வாக்குவாதம் அல்ல, இரு நபர் சம்பந்தப்பட்ட வாக்குவாதம் என்பது புரிந்தது. அது மட்டுமன்றி குற்றவாளி யார் சுத்தவாளி யார் என்பதும் தெட்டத்தெளிவாகவே புரிந்தது. அப்படியிருந்தும், ஏன் இரு நபர்களுக்கும் சரி சமனான ஆதரவாளர்கள்?
யார் சரி, யார் பிழை என்று தெளிவாகவே விளங்கியதென்றால் எதற்கு இவ்வளவு வாக்குவாதம். சரியின் பக்கமே மக்கள் நிற்கவேண்டும். பிழையின் பக்கம் இவர்களுக்கு என்ன வேலை. இங்கோ, சரிக்கும் பிழைக்கும் சமனான ஆதரவாளர்கள் இருக்கிறார்களே. ஏன் இப்படி? ஒரே குழப்பம்.
முன்னர், இப்படியான சம்பவங்களை கூறி சலித்துக்கொள்ளும் போதெல்லாம் என் அப்பா இப்படிச் சொல்லி பெருமூச்சு விடுவார். ‘இதுகுதான் செல்லுர உம்மா கொன்டவனுக்கு ஊர்ல பாதி என்டு’. இப்போதுதான் எனக்கும் அர்த்தம் புரிகிறது.
நம்மை பெற்றெடுத்த தாய்க்கு நாம் அளவிட முடியாத அளவு கண்ணியம் வைத்திருக்கின்றோம். அந்த தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்று சொன்னார்கள் நபி(ஸல்) அவர்கள். எல்லா சமூகங்களும், எல்லா மனிதர்களும் வேறு எதற்கும் கொடுக்காத அளவு முக்கியத்துவத்தை தாய்க்கு கொடுத்திருப்பதை நாம் காண்கிறோம். அப்படி கண்ணியத்தோடு பார்க்கும் பெற்றெடுத்த தாயை ஒரு மகன் கொன்றால் அவனுக்கு என்ன முடிவு? இந்த சமூகம் அவனை வெறுக்குமா ஆதரிக்குமா? சற்று யோசித்துப் பாருங்கள்..
அவனுக்கு ஆதரவாக எவனாவது ஒருவன் வாய் திறப்பானா? வாய் திறப்பது ஒரு புரம் இருக்க அவனை மனிதனாகவே பார்க்க மாட்டார்கள். ஏனெனில், இது தெளிவாகவே மன்னிக்க முடியாத குற்றம். இது பிழை என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும்.
அப்படியிருந்தும், பெற்ற தாயை கொன்றவனுக்கும் ஆதரவாக ஊரில் பாதிப்பேர் இருப்பார்கள் என்கிறார் நம் அப்பா.
அப்பா, “உம்மா கொன்டவனுக்கு ஊர்ல பாதி” என ஒரு சமூக தத்துவத்தை ஒரே வரியில் சொல்லியிருக்கிறார். எது பிழை, எது தவறு, எது குற்றம் என நன்றாகத் தெரிந்திருந்தும் அதை ஆதரிக்கும் கூட்டங்களை அப்பா நிறைய தடவைகள் கண்டிருக்கிறார் போலும்.
இப்படியான பல வாக்குவாதங்களை, சண்டைகளை, மோதல்களை நீங்களும் காணலாம். சரிக்கும் பிழைக்கும் சமனான ஆதரவாளர்கள் இருக்க சரியின் பக்கம் நீங்கள் நின்றால், உங்களை அறியாமலே சிலபோது நீங்கள் விரக்தியை உணர்வீர்கள். “என்ன இது” என்று நீங்களே சலித்துக் கொள்வீர்கள். அல்லது, சரியின் பக்கம் நின்ற நீங்களே எது சரி எது பிழையென்று குழம்பிவிடுவீர்கள்.
இது, இன்று நேற்றுள்ள பிரச்சினையல்ல. சத்தியத்துக்கு ஆதரவாய் பாதிபேர் இருந்தால் அசத்தியத்துக்கும் ஆதரவாய் சரி பாதிபேர் இருப்பார்கள். அப்படி நீங்கள் சந்தித்திராவிட்டால்… ஊரில் ஒரு கெட்ட வேலையை தொடங்கிப்பாருங்கள். விரைவில் சந்திப்பீர்கள்… கெட்ட வேலையை முன்னெடுக்க உங்களோடும் சில சுய’நலன்விரும்பிகள்(?) (நீங்கள் அழைக்காமலே/இது பிழை என்று நீங்களே சொன்னாலும்) இணைவார்கள். அதேபோல், நீங்கள் சமூகத்தில் ஒரு ‘நல்ல செயற்பாடை’ தொடங்க முனைந்தால் அதனை தடுக்கவும் சில சமூக’நலன்விரும்பிகள்(?) கிளம்புவார்கள்…
அப்பாவுக்குத் தெரிந்த இந்த விடயத்தை நன்கே தெரிந்து வைத்திருந்தால் சமூக வாழ்க்கையில் நாம் சந்தித்த பல அசத்திய எதிர்க்குழுக்கை நகைத்துக்கொண்டே பயணித்திருக்கலாம். பயணத்தில் சலிப்பும், சந்தேகமும் ஏற்பட்டிருக்காது.