இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு: அறிமுகம்
01. இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு:
அறிமுகம்.
முஸ்லிம் புலவர்களால் இயற்றப்பட்ட தமிழ் மொழியிலான இலக்கியங்களையே ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள்’ என அடையாளப்படுத்துவர். (அவற்றில் முற்று முழுதாக இஸ்லாமியக் கருத்துக்கள் பொதிந்துள்ளனவா, இல்லையா என்பது மற்றொரு விடயம்) முஸ்லிம் தமிழ் புலவர்களால் இயற்றப்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் எண்ணிலடங்காதவை. தமிழ் இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரபந்த வகைகள் காணப்படுகின்றன. அவ்வனைத்து வகைகளையும் பயன்படுத்தி முஸ்லிம் தமிழ் புலவர்களால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகள் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. இதனைத்தான் கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலே(1999) இப்படிக் கூறி பெருமைப்பட்டார்.
“நாமே இஸ்லாத்தை தமிழாக்கியவர்கள்
தமிழை இஸ்லாமாக்கியவர்கள்
மக்கா அரபிக்கு
மங்கைத் தமிழை
நிக்காஹ் முடித்தவர்கள்
சும்மா முடிக்கவில்லை
ஈராயிரம் மஹராய் ஈந்தே
மணமுடித்தோம்.”
இவ்வாறு முஸ்லிம் புலவர்களால் இயற்றப்பட்டு வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புகள் அனைத்தையும் ஆய்ந்தறிந்து பார்த்தால் முஸ்லிம் புலவர்கள் தமிழ் மொழியை எந்தளவுக்கு வளப்படுத்தி இருக்கிறார்கள் என்பது புரியும்.
முஸ்லிம் புலவர்களின் தமிழ் இலக்கிய பங்களிப்பை கீழ்வருமாறு பகுத்து நோக்கலாம்.