“அந்தாதி”ப் பிரபந்தம்.
1 min readஅந்தாதி.
தமிழ் புலவர்களால் இயற்றப்பட்ட சின்னூல் வகைகளுள் ‘அந்தாதி’ப் பிரபந்தமும் ஒரு வகையாகும். அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். அந்தம் + ஆதி = அந்தாதி. அந்தாதி எனப்படுவது ஒரு பாடலில் முடியும் சொல்லை அடுத்த பாடலின் முதற்சொல்லாக வைத்துப் பாடுவது. முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி. அந்தாதி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே காணப்படுவது. இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை “அந்தாதித் தொடை” என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை “அந்தாதிச் செய்யுள்” என்றும் கூறுவர். தமிழ் இலக்கியப் பரப்பில் அந்தாதித் தொடை அமைப்பே அந்தாதிச் செய்யுள் அமைப்பிற்கு வழி காட்டியது எனலாம்.
அந்தாதியின் தோற்றம்.
இவ் அந்தாதிப் பிரபந்த முறைமை கி.பி 1ஆம் நூற்றாண்டின் இறுதியில் கி.பி 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, சங்க இலக்கியங்களிலேயே அந்தாதி அமைப்பு உண்டு. பதிற்றுப்பத்து நான்காம் பத்தினை இதற்குச் சான்றாகக் கூறலாம். சிலர் இது கி.பி 6ஆம் நூற்றாண்டில் தோன்றியதென்றும் கூறுவர். இம்முறைமையை பயன்படுத்தி முஸ்லிம் புலவர்கள் எப்போது முதன் முறையாகக் கையாண்டார்கள் என்பது பற்றிய தெளிவான தகவல் கிடைக்கவில்லை. பல சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குக் காரணராக விளங்கிய பக்தி இயக்கப் புலவர்களே அந்தாதி இலக்கியத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆகி உள்ளனர்.
அந்தாதி வகைகள்.
செய்யுள் வகை, பாடல்களின் எண்ணிக்கை, அவற்றில் அமைந்த அணி நலன்கள், பாடல்களை உச்சரிக்கும் செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு வகையினவாகப் பெருகி உள்ளன.
அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:
- ஒலியந்தாதி
- பதிற்றந்தாதி
- நூற்றந்தாதி
- கலியந்தாதி
- கலித்துறை அந்தாதி
- வெண்பா அந்தாதி
- யமக அந்தாதி
- சிலேடை அந்தாதி
- திரிபு அந்தாதி
- நீரோட்ட யமக அந்தாதி
சில எடுத்துக்காட்டுகள்:
மேற்குறிப்பிட்ட அனைத்து முறைவழிகளிலும் முஸ்லிம் புலவர்களும் ‘அந்தாதி’ களை இயற்றையுள்ளனர். இந்துத் தமிழ்ப் புலவர்களுக்கு நிகராக இவர்களும் அந்தாதிகளை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் புலவர்களின் தமிழ் புலமைக்கு சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
01. சேகுனாப் புலவர் பாடிய நாகை அந்தாதியில் முதற்சீர் நான்கு அடிகளிலும் மடக்கி வரக்கூடிய செய்யுள்களும் நான்கு அடிகளும் மடுக்கு உள்ள செய்யுள்களும் உள்ளன. நான்கு அடிகளும் ஒரேவித மடக்கு உள்ள செய்யுள் கீழே வருமாறு;
செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே
செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே
செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே
செய்வன மாதவ நாகையர் சீர்பதச் சேகரமே
இந் நான்கு அடிகளும் ஒரே கருத்துடையவை போன்று தோன்றினாலும் வெவ்வேறு கருத்துக்களை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
02. குலாம் காதிரு நாவலர் பாடிய திருமக்கா திரிபந்தாதியில் இரண்டாவது சீர் நான்கு அடிகளிலும் மடக்காக வரும் செய்யுள் வருமாறு:
உத்தமக்காவதி கம் சூழ்ந்து
நன்மையி னாங்குபரி
சுத்தமக்காவதி சாரம் செய்
நாதர் துணையடியைச்
சித்தமக்காவதி தாழ்மையினாடொறும்
சிந்தை செய்வோர்
தத்தமக்காவதி யாதும்
அடையும் தடையறவே.
இப்படியாக பல அந்தாதி நூல்களை முஸ்லிம் புலவர்கள் தமிழ் எழுத்துலகுக்கு வழங்கியுள்ளார்கள். முஸ்லிம் புலவர்கள் வழங்கியுள்ள அந்தாதிப் பிரபந்தங்களின் சிறப்பொற்றுமை என்னவென்றால் நூல்களின் பெயர்கள் பெரும்பாலும் ஊர்களின் பெயர்களை சுற்றியதாய் அமைந்திருப்பதே. எனது வாசிப்புக்கும் தேடலுக்கும் உட்பட்ட வகையில் இதுவரை வெளியாகியிருக்கும் அந்தாதி நூல் பட்டியலை கீழே தருகிறேன்.
அந்தாதி இலக்கியங்களின் பட்டியல்:
1. திரு மக்காத் திரிபந்தாதி – குலாம் காதிறு நாவலர்
2. திரு மதீனத்தந்தாதி – பிச்சை இப்ராஹீம் புலவர்
3. திரு மதீனத்து வெண்பா அந்தாதி – பிச்சை இப்ராஹீம் புலவர்
4. திரு மதீனத்து யமக அந்தாதி – பிச்சை இப்ராஹீம் புலவர்
5. திரு மதீனா பதிற்றுப்பத்தந்தாதி – பிச்சை இப்ராஹீம் புலவர்
6. திருக் கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி – செய்குத் தம்பிப் பாவலர்
7. திரு நாகூர்த் திரிபந்தாதி – செய்குத் தம்பிப் புலவர்
8. திரு பகுதாதந்தாதி – அருள்வாக்கி அப்துல் காதர் புலவர்
தொடரும்….
(இன்னும் பல எழுதியவர்களின் பெயர்களுடன் இன்னும் உள. சில காரணங்களுக்காக அவற்றை தணிப்பு செய்துள்ளேன்)
இஸ்பஹான் சாப்தீன்
றாபிதா கலமியா-2005
(நூற்றுக்கணக்கான பதிவுகளை ஆராய்ந்த பின் எழுதிய என் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பில் இருந்து இது ஒரு கட்டுரை. எனவே, உசாத்துணைகளை பதிய முடியவில்லை. பதிந்தால் அதுவே ஒரு கட்டுரையாகிவிடும்.)