முத்தம் (KISS)
1 min readமுத்தம் என்பதை இரு இதழ்களைக் குவித்து ஒரு மென்தோலில் பதிக்கையில் ஏற்படும் ‘இச்’ என்ற சத்தம் என்றே நினைத்திருப்பீர்கள்.
நானோ,
‘முத்தம் அன்புணர்ச்சியின் மொத்தம்’ என்கிறேன்.
தன் குழந்தையை முதன் முதலில் காணும் தாயின் மகிழ்ச்சியை அளவிட முடியுமா..?
அவள் தன் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறாள் என்பதைக் கண்டிருக்கிறீர்ரகளா?
அத்தனை அன்பையும் மொத்தமாய்க் கூட்டி முத்தமாய்த்தானே வெளிப்படுத்துகிறாள்.
இப்போது சொல்லுங்கள்!
முத்தம் அன்புணர்ச்சியின் மொத்தம் என்பது சரிதானா?
யாருக்கு யார் முத்தமிட முடியும் என இஸ்லாம் வரையறைகளை விதித்துள்ளது.
அவற்றை நாம் மறந்து விடக்கூடாது.
புனிதமான உறவுகளில் முத்தமிடல் ஆபாசத்தின் குறுக்கீடு என நினைக்கிறோம்.
அது பாசத்தின் குறியீடு என்பதை மறந்து விடுகின்றோம்.
ஒரு தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் முத்தத்தில் பாசம் இருக்கும்.
அதே தாய் தன் சகோதரிக்கு முத்தமிடும் போது அங்கே நேசம் இருக்கும்.
அதே தாய் தன் கனவனுக்கு முத்தமிடுகையில் அங்கே காதல் இருக்கும்.
கொடுக்கின்றவரைப் பொருத்து முத்தத்தின் பெறுமதி வேறுபடுகிறது.
நபி அவர்கள் குழந்தைகளுக்கும் தனது மனைவிமாருக்கும் முத்தமிடுபவராக இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் ஹஸன்(றழி) அவர்களை முத்தமிட்ட போது அங்கிருந்த அக்ரஃ பின் பி எனும் ஹாபிஸ் எனும் ஸஹாபி:
“எனக்குப் பத்துப் பிள்ளைகள் இருக்கின்றனர்.
நான் எவரையும் முத்தமிட்டதில்லை.” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்:
“இரக்கம் காட்டாதவர் இறக்கம் காட்டப்பட மாட்டார்.” (புஹாரி) என்று கூறினார்கள்.
ஒரு முறை கலீபா உமர்(றழி) அவர்கள் ஒரு குழந்தையை முத்தமிடுகிறார்கள்.
அதனைக் கண்ட ஒரு அரச அதிகாரி,
“அமீருல் முஃமினீனே, நீங்கள் குழந்தைகளை முத்தமிடுவதா?“ என ஏளனமாகக் கேட்கிறார்.
உமர் றழி அவர்கள்,
“குழந்தைகளுக்கே அன்பு செலுத்தத் தெரியாத நீங்கள் எப்படி நாட்டு மக்களுக்கு அன்பு செலுத்தப் போகிறீர்கள்.” என்று கேட்டது மட்டுமன்றி, பதவியிலிருந்தும் அவ்வதிகாரியை நீக்கிவிடுகிறார்கள்.
முத்தமிடுவதில் இத்தனை இருக்கின்றதா?
ஆம் மனைவியை முத்தமிடுவதையே ஆபாசமாகப் பார்க்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படியான கனவான்களே!
நபி(ஸல்) அவர்களிடம் உங்களுக்கு நல்ல முன்மாதிரி இருக்கிறது.
அன்பை வெளிக்காட்ட, உறவைப் பலப்படுத்த நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு வுழூ செய்த நிலையிலும் ஆயிசா நாயகியை முத்தமிட்டிருக்கிறார்கள்.
நோன்பு நோற்ற நிலையிலும் கூட முத்தமிட்டிருக்கிறார்கள்.
‘சத்தத்தால் சாதிக்க முடியாததை முத்தத்தால் சாதிக்க முடியும்.‘ என்பார்கள்.
வீடுகளில் இதனை அவதானிக்கலாம்.
உங்கள் குழந்தையின் குழப்படிகளை சத்தமிட்டு திருத்துவதைவிட முத்தமிட்டு திருத்துவது மிகச் சிறந்த பலனைத் தரும்.
முத்தம் சிலபோது மாத்திரையாகிறது.
அதன் சக்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பாய்கிறது.
உணர்வுகளை உயிர்ப்பிக்கிறது.
குருதிச் சுற்றோட்டம் வேகமடைவதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
சின்ன வயதில் விளையாடிய ஒரு விளையாட்டு உங்களுக்கு ஞாபகமிருக்கும்.
ஒரு கடதாசி மேற்பரப்பில் இரும்புத் துகள்கள் சிதறியிருக்கின்றன.
அதன் கீழ்ப்பகுதியில் ஒரு காந்தத்தைப் பிடிக்கிறீர்கள்.
என்ன நடக்கும்?
சடுதியாக எல்லாத் துகள்களும் ஒரே புள்ளியில் குவிவதைக் கண்டிருப்பீர்கள்.
இப்படித்தான் முத்தமும் உடலில் ஏற்படும் அனைத்து உணர்வுகளையும் ஒன்றினைத்து விடுகிறது.
இதனால் மூளை நிதானமடைகிறது.
உடல் உற்சாகமடைகின்றது.
இந்நேரத்தில் பெறப்படும் முடிவுகள் சிறந்தவையாகவே இருக்கும்.
உறவுகளை வளப்படுத்த இஸ்லாம் வலியுறுத்தியுள்ள வழிகளில் முத்தமும் ஒன்றாகும்.
முத்தம் அன்புணர்வின் மொத்தம் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.
உணர வேண்டாமா?
இஸ்லாமிய வரையறைகளை மறந்துவிடதீர்கள்.
இஸ்பஹான் சாப்தீன்.
வைகறை-இலாமிய குடும்ப சஞ்சிகை
2010 ஜனவரி- மார்ச்
இதழ் 17
பக்கம்-4