December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். -ஜயதிலக்க டி சில்வா-

1 min read

Jayathilaka de silva #உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும்.

-ஜயதிலக்க டி சில்வா-

(தலைவர் -உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கம்.
முன்னாள் ஆசிரியர் -டெய்லி நியூஸ், சண்டே ஒப்சேர்வர்)

தமிழ்: இஸ்பஹான் சாப்தீன்.

#உலக சமாதனத்திற்கு இருக்கும் சவால்கள் என்ன?

இன்று, உலக சமாதானம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. உலகில் நிலவும் சமநிலையற்ற தன்மையும் அசாதாரண நிலையுமே இதற்கு முக்கிய காரணம். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே உலகில் அதிகமாக உள்ளன. அல்லது, காலனித்துவத்தால் பாதிக்கப்பட்டு சுதந்திரமடைந்து புதிதாக வளர முற்படும் நாடுகளே அதிகம். ஆனால், காலனித்துவத்தை கையில் வைத்திருந்த சில பழைய நாடுகள், இன்றும், நவ காலனியத்தின் வாயிலாகவும் வேறு வழிகளிலும் ஆயுத மற்றும் படைப் பலங்களாலும் உலகையே கையகப்படுத்தி வைத்துள்ளன.

இன்று மத்திய கிழக்கு பூரணமாக அழிக்கப்பட்டு விட்டது. சிரியா, ஈராக், லிபியா போன்ற நாடுகளின் ஆட்சி பலவந்தமான முறையில் அழிக்கப்பட்டுள்ளது. தற்போது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும் யுத்தத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அளவுக்கதிகமாக அதிகரித்திருப்பதானது ஆரோக்கியமானதல்ல.

.அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தைக் கட்டியெழுப்ப இராணுவப் பலத்தைப் பயன்படுத்த இருமுறை யோசிக்காத ஒரு மனோநிலையில் தான் அவர் இருக்கின்றார். அது சாத்தியமாகாது என்பதுதான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இருப்பினும், இதில் ஒரு அச்சுறுத்தல் உள்ளது. அமெரிக்கா பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் அமெரிக்க மக்களை ஒருநிலைப்படுத்த வேண்டுமென்றால் இனவாதத்தை அல்லது இனத்துவேசத்தை பயன்படுத்தி பிற நாடுகளுக்கு எதிராக யுத்தத்திற்கு செல்லல். முதலாளித்துவத்தில் உள்ள ஒரு முறைதான் நெறுக்கடி ஏற்பட்டால் யுத்தத்திற்கான நிதியை அதிகரிப்பது.

மிகப் பயங்கரமான நிலையிலிருப்பது பலஸ்தீன் மக்களின் பிரச்சினை. பலஸ்தீன் மக்களை முற்றாக பலஸ்தீன் பூமியில் இருந்து விரட்டி ஐக்கிய நாடுகள் சபையைப் பயன்படுத்தி பலஸ்தீன் பூமியை இரண்டாக்கி, பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர்.

நான் நினைக்கின்றேன் செயற்கையான ஒரு அரசை உருவாக்கினர். அந்த அரசுக்கு ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக ஐ.நா வின் உதவியால் யுத்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அணு ஆயுதம்கூட அவர்களிடம் உள்ளது. அவர்கள், பலஸ்தீன் மக்களை அவர்களது நாட்டிலிருந்து பலவந்தமாக ஆயுத முனையில் துரத்தினர். இன்று பலஸ்தீனர்கள் தமது நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிவரும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப், இதற்குத் தீர்வாக ஓஸ்லோ ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட பலஸ்தீன் பூமியில் இரு அரசுகளை – அதாவது, அரபு பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் – நிர்மாணித்தல் என்ற கொள்கைக்கு எதிராக தனி அரசொன்றுக்கு செல்லத் தயார் என்று சொல்கிறார். அதாவது, இதுவரை உலகம் ஏற்றுக்கொண்டிருந்த ஒரு கொள்கையையும் மாற்ற முனைகிறார். தற்போது நடப்பவற்றைப் பார்க்கும் போது மிகக் கிட்டிய காலத்தில் பலஸ்தீன் மக்களுக்கு பலஸ்தீன் நிலம் எஞ்சாது. எனவே, மீண்டும் ஆரம்பத்திலிருந்த நிலைககுச் செல்ல வேண்டி ஏற்படும்.

#பலஸ்தீன் மக்கள் ஜனநாயக முறையில் போராடுகிறார்கள். ஆனால், இன்று ஜனநாயகத்திற்கும் சவாலான ஒரு நிலையே காணப்படுகிறது. எகிப்து தேர்தலின் முடிவு, பலஸ்தீனில் ஹமாஸின் வெற்றி போன்றவற்றுக்கு ஏற்பட்ட சவால்கள் இதனைக் காட்டுகின்றன. உங்கள் கருத்து?

ஜனநாயகம் என்றால் என்ன? ஹமாஸ் மக்கள் தேர்தலில் வெற்றிபெற்றதை அமரிக்கா உற்பட மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலுக்கு செல்லுங்கள், மக்கள் கருத்துக்கும் விருப்புக்கும் இடமளியுங்கள் என்றுதான் அதுவரை அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மறுபக்கம் திரும்பிநின்றார்கள். அவரவர் அவரவருக்கு ஏற்றமாதிரியாக ஜனநாயகத்தைப் பார்க்கிறார்கள். அது அவர்கள் இருக்கும் இடத்திற்கு அமைவாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் ஜனநாயகவதிகளாகத் தெரிவதில்லை. அவர்கள் ஹமாஸை ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்ட தீவிரவாதிகளாகவே பார்க்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள், ஹமாஸை புரட்சியாலார்களாகவும் போராளிகளாகவும் பார்க்கின்றனர். எனவே, ஆயுதம் ஏந்திய போராட்டத்தையும் ஜனநாயகத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஜனநாயகம் இருப்பதும் ஆயுதம் காரணமாகத்தான்.

ஜனநாயகத்தை காப்பாற்ற ஆயுதம் எடுக்க முடியுமென்றிருந்தால் ஐனநாயகம் மாற்றமடையும் போது ஜனநாயகத்தை வெற்றிகொள்ளவும் ஆயுதம் ஏந்துவதற்கு உரிமையுண்டு. வரலாற்று நெடுகிலும் மக்கள் இவ்வுரிமையை பயன்படுத்தியிருக்கிறார்கள். உலகம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

பிரஞ்சுப் புரட்சி, ஆயுதம் ஏந்தி நடந்தது. மன்னராட்சி தானாக வீழவில்லையே. கியுபா, சீனா ஏன் அமரிக்கா கூட ஆயுதம் ஏந்தித்தான் அதனை வீழ்த்தினார்கள். மக்கள் ஆயுதம் ஏந்துவது ஆசைக்காக அல்லவே. இயலாத கட்டம் வரும்போதுதான் ஆயுதம் ஏந்துகிறார்கள். எதுவாக இருந்தாலும் அந்நிலைக்குத் தள்ளப்படுவது ஜனநாயகம் இல்லாமல் போகும் போதுதான். சாதாரணமாக ஜனநாயகம் இல்லாமல் போகும்போது ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலை ஏற்படுகிறது. இல்லையென்றால் அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாது.

பலஸ்தீன் மக்களுக்கு இந்நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலிடம் உள்ள யுத்த பலத்தை எதிர்கொள்ள அவர்களால் முடியாது. எனவே, இவர்கள் உலக நாடுகளின் உதவிகளுடன் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உதவி இல்லாவிட்டால் போராடி வெல்ல முடியாது. அணுஆயுத ஏவுகணைகள் உள்ள நாட்டுடன் போராடுவதாயின் அவற்றைத் தாமும் பெற்றுப் போராட வேண்டும். அவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது தவறு.

#ஆனால், உலகமே அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்கிறதே?

உலகம் என்றால்? எப்போதும் இரு உலகங்கள் காணப்படுகின்றன. ஒன்று ஆட்சியாலர்களின் உலகம். மற்றையது பாதிக்கப்பட்டவர்களின் உலகம். தாம் இருக்கும் நிலைக்கு ஏற்ப தான் நல்லது கெட்டது தீர்மானிக்கப்படுகிறது. எல்லாப் பிரச்சினைகளிலும் அப்படித்தானே.

உதாரணமாக, சைட்டம் ஐ எடுத்தால், சைட்டம் இன் தலைவருக்கு சைட்டம் நல்லது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு அது கெட்டது. அவர்கள் இருக்கின்ற இடங்களில் இருந்து பார்க்கும் போது இரு வேறு பக்கங்கள். எனவே, ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே, ஜனநாயகம் பற்றிப் பார்க்கும் போது எப்போதும் ஒப்பீடுசெய்து பார்க்க வேண்டும். இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அடிமை முறையை விட இன்றைய நிலை ஜனநாயகமானது. முன்னேற்றமடைந்துள்ளது. இன்று அடிமைகள் இல்லையே. இருப்பினும் சம்பள அடிமைகள் உள்ளனர். சம்பளத்திற்கு வேலை செய்யும் அடிமைகள் உள்ளனர். வேறு ஒரு வடிவில் அது உள்ளது. எனவே, எப்போதும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

எதிர்காலத்தில் நீதியான ஒன்றைப் பற்றி சிந்தித்தால் தற்போதுள்ள நிலை மோசமானது. இந்த ஜனநாயகம் போதாமையுடையது. எப்படியும் போதாமை தெரிகிறதே. ஜனநாயகம் குறைவு என்பதால்தானே நாடுகள் மோதிக்கொள்கின்றன. தேர்தலில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்றொன்றுள்ளது. தற்போது மேற்கில், இந்த ஜனநாயகம் போதாமையுடையது என்பதால் பங்குபற்றுகை ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள். அதாவது நாட்டை பரிபாலிப்பதில் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்பது.

எமது நாடுகளில் அப்படியல்லவே, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்கள் தமக்கு தேவையான வகையில் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள மக்கள் ஏதும் தேவையென்றால் பாதையில் இறங்கிப் போராட வேண்டும். அதிகமாக பாதைக்கு இறங்கினால் தீவிரவாதிகளாகிவிடுகிறார்கள்.

#இப்படி சிரியாவிலும் மக்கள் பாதைக்கு இறங்கினார்கள். கொத்துக்கொத்தாக அவர்களை கொன்று குவித்தனர். இதுபற்றி யாரும் கதைக்கவில்லையே?

உண்மையில் சிரியாவில் என்ன நடந்தது? பாருங்கள்! எகிப்தில் இன்று ஜனாதிபதி யார்? எகிப்தின் முன்னால் ராணுவப்படை பலனாய்வுப் பிரிவின் தலைவர்தான் ஜனாதிபதி. அமரிக்காவினால் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டவர். எப்படி வந்தார்? வந்தது Orange Revaluation பாதையால். எகிப்து மக்கள் பாதைக்கு இறங்கும் போது சி.ஐ.ஏ தமக்கு சார்பான மக்களை இறக்கி புரட்சியை வேறு பக்கம் திருப்பிக்கொண்டது. இறுதியாக தமக்கு வேண்டிய ராணுவ ஆட்சியை அல்லது அதனை போன்ற ஒரு ஆட்சியை நிறுவிக்கொண்டது. Muslim Brotherhood தான் வந்தது ஆனால் Muslim Brotherhood ஐ விட இவர்கள் பலமாகியுள்ளனர். Muslim Brotherhood உம் தற்போது இடதுசாரிகளாகியுள்ளனர்.

ஈராக் தான் அந்த வலயத்திலேயே முன்னேறிய ஒரு நாடு. அதாவது, விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறிய ஒரு நாடு. அது அழிக்கப்படடுவிட்டது. அதற்கு மதமும் மதத்திலுள்ள பிரிவுகளுமே பயன்படுத்தப்பட்டது. சுன்னி, ஷீஆ பேதத்தைப் பயன்படுத்தி பிறகு குர்திஷை பயன்படுத்தி நாட்டை துண்டாடப் பார்த்தார்கள். அப்படியே துண்டாடிவிட்டனர்.

சிரியாவுக்கும் இந்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், சிரியா இன்றும் தப்பித்தே வருகிறது. ரஷ்யா தலையிடாவிட்டால் சிரியாவும் இந்நேரம் துண்டாடப்பட்டிருக்கும். இது இந்நாடுகளில் எல்லா இடங்களிலும் உள்ள ஒர் அச்சுறுத்தல்.

#இவைபற்றி கதைப்பவர்கள் குறைவு தானே. குரலற்றவர்களாகத்தானே இருக்கிறார்கள்?

அப்படி சொல்ல முடியாது. குரலற்றவர்கள் என்றால் இன்று உலகில் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டிருப்பார்கள். பலஸ்தீன், மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்கள் எமது நாடுகளில் எங்களுக்குத் தெரிவதில்லை. இப்படியான நீதிப் போராட்டங்களுக்கு பங்களிப்புச் செய்ய வெகுஜன போராட்ட அமைப்புகள் எமது நாட்டில் இல்லை. ஆனால், ஐரோப்பாவில் காணப்படுகின்றன. அமெரிக்கவில் காணப்படுகின்றன.

அமெரிக்காவில் இப்படியான யுத்தங்களுக்கு எதிரான மக்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். வியட்னாம் யுத்தத்திற்கு அமரிக்காவில் எந்தளவு எதிர்ப்பு வந்ததென்பது எங்களுக்குத் தெரியும். இங்கிலாந்து மக்கள் இவற்றுக்கு எதிர்ப்பு. இங்கிலாந்து மக்கள் மத்திய கிழக்குக்கு ராணுவத்தை அனுப்புவதற்குக் கூட தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எமது நாடுகளில் இவற்றில் பலவீனம் உள்ளது.

எமது நாட்டை எடுத்துப் பார்த்தால் எமது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது பெரும் புரட்சிகள் செய்தல்லவே. மீள்நிர்மாண அடிப்படையில். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் இங்கு இலங்கைக்கு தானாகக் கிடைத்தது. அன்றிருந்த தலைவர்கள், பின்னால் சென்று, அவர்களைப் பின்பற்றி கோட்டுசூட்டுப்போட்ட ‘கறுப்புவெள்ளையர்கள்’ போலத்தானே இருந்தார்கள். அதனால், இப்படிப் போராடுவதற்கு நீண்ட காலம் செல்லும்.

இன்று உலகம் ஒரு கிராமமாகிவிட்டது என்று எல்லோரும் கதைக்கிறார்கள். அப்படியென்றால் எல்லோருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனியொரு உலகமாகியுள்ளது. எனவே, பிரிந்திருக்க முடியாது. பிரிந்திருந்தால் நாம் இடரில் விழுவோம். அழிந்துவிடுவோம்.

பலஸ்தீனிலாக இருக்கலாம் அமரிக்காவிலாக இருக்கலாம் கனடாவிலாக இருக்கலாம் ஈராக்கிலாக இருக்கலாம் அவர்கள் போராடும் போது அவர்களைத் தனிமைப்படுத்த முடியாது. காரணம் இது ஒரு உலகம். எனவே, பிற நாடுகளின் உதவியில்லையென்றால் அவர்கள் தோற்றுவிடுவார்கள். அப்போது நமக்கும் அதுதானே நடக்கும்.

பலஸ்தீனிலாக இருக்கலாம் அமரிக்காவிலாக இருக்கலாம் கனடாவிலாக இருக்கலாம் ஈராக்கிலாக இருக்கலாம் அவர்கள் போராடும் போது அவர்களைத் தனிமைப்படுத்த முடியாது. காரணம் இது ஒரு உலகம். எனவே, பிற நாடுகளின் உதவியில்லையென்றால் அவர்கள் தோற்றுவிடுவார்கள். அப்போது நமக்கும் அதுதானே நடக்கும்.பலஸ்தீனிலாக இருக்கலாம் அமரிக்காவிலாக இருக்கலாம் கனடாவிலாக இருக்கலாம் ஈராக்கிலாக இருக்கலாம் அவர்கள் போராடும் போது அவர்களைத் தனிமைப்படுத்த முடியாது. காரணம் இது ஒரு உலகம். எனவே, பிற நாடுகளின் உதவியில்லையென்றால் அவர்கள் தோற்றுவிடுவார்கள். அப்போது நமக்கும் அதுதானே நடக்கும்.

நாம் தனிமைப்பட்டால் அழிந்துவிடுவோம். நம்மைக் காப்பற்றிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ வேண்டிய ஒரு தேவை நமக்கு இருக்கிறது. நாம் உதவிசெய்தால் தான் அவர்கள் நமக்கு உதவ முன்வருவார்கள். நம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்தால் தான் அவர்கள் எமக்கு ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் வருவார்கள். பலஸ்தீன் பிரச்சினை, மியன்மார் பிரச்சனை, நமீபியா பிரச்சனை, போடரிகோவில் நடந்த சுதந்திரப் போராட்டம் அல்லது பிரசீலில் நடந்த மாணவர் போராட்டம் போன்ற இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருக்கின்றன. காரணம் பாதிக்கப்பட்ட சகலரும் ஒன்றிணைவது ஓரிடத்தில்தான்.

இன்று, உலகை ஆட்சி செய்வது கம்பனிக்காரர்கள். IMF, Word Bank, உலக சந்தை போன்றனவே பொருளாதாரத்தை கையாள்கின்றன. பொருளாதாரத்தின் படியே ஏனைய அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. அரசியலையும் இதுதான் தீர்மானிக்கிறது. கலாசார த்தையும் இதுவே தீர்மானிக்கிறது. Hollywood எல்லா இடங்களுக்கும் பாய்ந்து செல்கிறது. Bollywood உடன் போட்டிபோடுகிறது. எனவே, நாம் ஒதுங்கியிருக்க முடியாது. நாம் உலகில் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறோம். நாம் Hollywood ஐ Bollywood ஐ ஏற்றுக்கொள்கிறோம். MacDonald’s இல் வாங்குகிறோம். இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டுவிட்டு இதை மாத்திரம் இல்லை இது நமக்கு அவசியமில்லை என்கிறோம். மனிதர்களின் பிரச்சினைகளுக்காக போராடுவதற்கு தயாரில்லை. அதிகாரத் தலைமைகளது அழுத்தங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இருக்கின்றோம். மக்களுடைய பிரச்சினைகளுக்கு எம்மால் சேர முடியாதுள்ளது.

எனவே, மாற்றம் வர வேண்டும். இந்த மாற்றம் எமது நாட்டு மக்களின் அறிவில் இருந்து ஏற்பட வேண்டும். ஊடகம்தான் இந்த மாற்றத்தை கொண்டுவர முடியும். அதற்காகவே, உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கம். எமது நாட்டு மக்களுக்கு உலக விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உலகில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதற்கும் பிற நாடுகளில் மேற்கொள்ளப்படும் நீதிப் போராட்டங்களில் எமது பங்களிப்பை வழங்குவதற்கும் நீதிப் போராட்ட அமைப்புகளுடன் நல்லுறவைப் பேணவதற்குமே இவ்வமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இது எங்களுக்காக நாம் செய்யும் ஒரு செயற்பாடு. எமது முதல் எட்டாக பலஸ்தீன் மக்களின் போராட்டம் குறித்து எதிர்வரும் 13ஆம் திகதி 4.30 மணிக்கு லக்‌ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிகழ்வில் அரசியல், மத, இன வேறுபாடுகளின்றி சகலரும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம். இது எமது முதல் எட்டுதான்.

இன்றைய மீள்பார்வையில்…..

Jayathilaka de silva1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.