காதர் சம்சுதீன் புலவர்.
1 min readகாலி-மண் மறக்காத மனிதர்-01
கார்மேகம் போல் கவிபாடிய கார்-பா-லெப்பைப் புலவர்.
‘கார்-பா-லெப்பைப்புலவர்’ இலங்கையின் தென் பகுதியில் உள்ள காலி மாவட்டத்தில் ‘சோலை’ எனும் அழகிய பிரதேசத்தில் 1885 ல் பிறந்தார். இவரின் இயற்பெயர் காதர் சம்சுதீன். ஆனால், கார்மேகம் போன்று கவிமழை பொழிந்து வந்ததால் கார்-பா-லெப்பைப் புலவர் என அழைக்கப்பட்டார். இவர் முஹம்மது லெப்பை மரைக்காயரின் புதல்வராவார். அப் பிரதேசத்தில் பலராலும் மதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே கற்ற இவர், இலங்கை வந்த தமிழ் நாட்டுப்புலவர்களுள் ஒருவரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதோடு மருத்துவமும் கற்றுத்தேர்ந்தார்.
பிற்காலத்தில் பேருவளையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா வலி அவர்களினதும், கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிமினதும் தொடர்பு இவருக்குக் கிட்டியது. இவருக்கும் செய்கு முஸ்தபா வலிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை அவர் எழுதிய கவிதைகளூடாகவே புரிந்து கொள்ளலாம். இவர் தாம் பாடிய “முபாரக் மாலை” எனும் நபி(ஸல்) வரலாற்று மாலையில் முஸ்தபா வலி அவர்களைப்பற்றிப் பாடும் போது…
“பட்டமிட்ட வச்சிரத்தை,
பாற்கடலின் ஆணிமுத்தை,
பட்சமிகு ஷைகு முஸ்தபா
ஹாஜியை மறவேன்.”
என்று பாடித் தம் நன்றிக் கடனை ஆற்றியுள்ளார். மேலும் அவர் மீது “முஸ்தபா மாலை” எனும் பெயரில் ஒரு புகழ் மாலையும் எழுதியுள்ளார்.