December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

“Oddamavadi – The untold story” பார்க்கக் கிடைத்தது.

1 min read

ஒரு தனி மனிதனின் உளவியல் பாதிக்கப்பட்டால் அந்த மனிதனை மீட்டெடுக்கலாம். ஆனால், ஒரு சமூகத்தின் உளவியல் பாதிக்கப்பட்டால் அந்த சமூகத்தை மீட்டெடுப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

கடந்த தசாப்தம் முஸ்லிம் சமூகத்தின் உளவியல் அதிகளவு பாதிப்புக்குள்ளான ஒரு தசாப்தமாக இருந்தது. அந்த பாதிப்புகளில் இருந்து மீள இன்னும் பல தசாப்தங்கள் எடுக்கும் என்பதில் ஐயமில்லை.

பல சம்பவங்கள் சரித்திரங்களாக மாற்றப்பட்ட அவலம் கடந்த தசாப்தத்தில் நிறையவே நடந்தேறின. அவை, சொற்களுக்குள் அகப்படுத்த முடியாதவை.

நேரம் பார்த்து ஓரம் கட்டும் முறை என்பது வன்மத்தின் உச்சம் என்பேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த விரும்பாதவன் நான். வார்த்தைகள் கூட உளவியலை தீர்மானிக்கும் என்பதை பலமாக நம்புகிறேன்.

நாட்டுப் பிரஜை, தாய் நாடு என்கிற உணர்வுகளுக்கான எதிர் உணர்வுகள் மேற்சொன்ன வார்த்தைகள். வார்த்தைகளாய் வரும் உளவியல் தாக்கங்கள். சமூக உளவியலில் இவை ஏற்படுத்துகிற தாக்கங்கள் தலைமுறை கடந்தும் நகர்த்தப்படுவை.

‘அந்நியமாக்கல்’ என்பது ஒரு மேலாதிக்க மனோநிலையின் ஒரு உத்தி. இந்த உத்தி ஒரு புறம் இருக்க ஒரு சமூகமே இந்த உணர்வை வரிந்து ஏற்றுக் கொண்டு பயணிப்பது என்பது ஆரோக்கியமானதல்ல.

இது எனது நாடு, நான் இந்த நாட்டுப் பிரஜை, எல்லோரும் சக பிரஜைகள், அதையும் தாண்டி அனைவரும் என் போன்ற மனிதர்கள் என்று ஒவ்வொருவருக்கும் பார்க்க முடியுமாயின் எவ்வளவு அழகாக இருக்கும்.

இனம், மதம், மொழி என்கிற அடையாளத்துக்குள் ‘மனிதம்’ மறைந்து போவது எத்துணை பெரிய அபத்தம். ‘மனிதம்’ காக்கும் அரசியல் மலராத வரை அடையாளங்கள் அவசியமாகும் போது உந்து காரணிகளாகவே பார்க்கப்படும்.

ஒரு சிலரின் அவசியத்திற்கு சக பிரஜைகள் ஓரங்கட்டப்படுவது எந்தவிதத்திலும் நியாயம் காண முடியாது. ஆனால், அந்த ஒரு சிலரின் அவசியத்திற்கு அது நடந்ததை வரலாறு மறக்காது. நடந்த பலதில் ஒன்று இந்த ஆவணப்படம் மூலம் பதிவாகியிருக்கிறது.

தயாரிப்பு Aman Ashraff. இது சகலரும் பார்க்க வேண்டிய ஒரு ஆவணப்படம். நிச்சயம் இது யாருக்கும் ஒத்தடமாக இருக்காது. ஆனால், நிச்சயம் கொஞ்சமேனும் ஆறுதல் தரும். ‘சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம’ இருந்த நிலையைத் தாண்டி சொல்லிவிட்ட பிறகு வரும் ‘சொல்லிவிட்டோம்’ என்ற ஆறுதல் இருக்கிறதே, அந்த ஆறுதல் நிச்சயம் கிடைக்கும்.

ஆக, ஒரு விடயத்தில் ஒரு சிலரின் தேவைக்கு ஒட்டுமொத்த முறைமையும் கேள்விக்குள்ளான கதையை பதிவு செய்திருப்பதன் மூலம் ஒரு பெருமூச்சை விட்டேனும் கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்.

– மௌத்தாக பயமில்லை. ஆனால், இப்ப மௌத்து வந்து விடக் கூடாது என ஒரு சமூகமே உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த வலி மிகுந்த நொடிகள்…

– கைக்கெட்டும் தூரத்தில் பிள்ளை, குறைந்தது கண்ணுக்கெட்டிய தூரத்தில் வைத்தேனும காட்டியிருக்கலாமே என்கிற ஆதங்கம்…

– தந்தையின் இறுதிக் கடமைகளைக் கூட செய்ய முடியாத கையாலாகாத நிலையில் பெருக்கெடுத்த கண்ணீர்…

– தாயின் ஜனாஸாவை எரிக்காமல் ஓட்டமாவடியிலேனும் அடக்கக் கிடைத்ததே என்கிற பெருமூச்சு…

– நினைத்த மாத்திரத்தில் போய்ப் பார்க்க முடியாத தூரத்தில் ‘ஓட்டமாவடி’ மஜ்மா நகர்…

என, வலிகளைச் சுமந்து கொண்டு நகர்ந்து செல்லும் இதே நாட்டுப் பிரஜைகளின் ‘குரல் வறுமையை’ நீக்க இப்படியான ஆவணங்கள் இன்னும் வர வேண்டும். இனியேனும் வரும் என எதிர்பார்க்கலாம்.

இஸ்பஹான் சாப்தீன்

ஊடக பயிற்றுவிப்பாளர்.

06 08 2024

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.