01. #தேசிய அறிவைப் (National Knowledge) பாதுகாத்தல்.
கடல் சூழ் அழகிய இத்தீவின் மக்கள் சஞ்சாரம் மிகத் தொன்மையானது. இம் மண் சுமந்துள்ள வளங்களைப் போல் அதன் புலமைச் சொத்து அல்லது அறிவுசார் சொத்தும் மிகப் பெறுமதியானது. ஆயினும் , நாம் அது பற்றிய பிரக்ஞையற்று வாழ்கிறோம்.
தேச அறிவு என்பது நம் இலங்கைத் தேசத்திற்கு உரித்தான அறிவைக் குறித்து நிற்கிறது. இயற்கையும் அனுபவமும் கொடுத்த அறிவின் வழியாய்ப் பிறந்த நம் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், கலாசாரம், அரசியல், சமூக அமைப்பு, வரலாறு, வழக்காறு, வழமை, வாழ்வொழுங்கு என பல இத்தேசத்திற்கே உரியவை. தனித்துவமானவை. இவற்றில் நம் தேசத்தின் புலமைச் சொத்துக்கள் நிரம்பி இருக்கின்றன.
இப்படியான நம் தேச அறிவை வாய் வழியாயும் வரி வழியாயும் அடுத்த தலைமுறைக்கு நகர்த்த நாம் என்ன செய்திருக்கிறோம்? இத்தேசத்திற்கே உரித்தான புலமைச் சொத்தை, அறிவைப் பற்றி எந்தளவு தெளிவோடு வாழ்கிறோம்?
நம் மண் பற்றி, நம் காற்று பற்றி, நம் கடல் பற்றி, நம் காடு பற்றி, நம் நதிகள் பற்றி, நம் பறவைகள் பற்றி, நம் விலங்குகள் பற்றி நம் மூதாதையருக்குத் தெரியாத எதை நாம் இறக்குமதி செய்யப் போகிறோம்?
நம் பாட்டி வைத்தியம் முதல் நம் பாட்டனின் பரிகாரம் வரை எத்தனை அறிவுச் செல்வங்களை நாம் மறந்துவிட்டோம். இத்தேசம் சந்தித்த அனர்த்தங்கள், ஆக்கிரமிப்புகள், ஆட்சிகள், யுத்தங்கள், வாழ்வொழுங்கு நமக்குக் கற்றுத்தந்த எந்த அறிவை நாம் நம் பாடநூல்களில் சேர்த்திருக்கிறோம்.
நம் மண் பற்றிப் பேசிய எந்தப்புலவனின், எந்த எழுத்தாளனின் எழுத்துக்களை உலகறியச் செய்திருக்கிறோம். அவை இம் மண் பற்றிப் பேசும் பதிவுகள். இம் மண்ணின் புலமைச் சொத்தல்லவா.
எத்தனை சிந்தனைகள், தத்துவங்கள், கண்டடைவுகள், படிப்புகள், படைப்புகள், நிர்மாணங்கள் இம் மண் சார்ந்து பிறந்திருக்கும். அனுபவங்களின் தொகுப்பே அறிவு. யாரோ தோற்றதும் யாரோ வென்றதும் யாரோ பட்டதும் யாரோ கண்டடைந்ததும், யாரோ சிந்தித்ததும் தானே இன்றைய அறிவு. அந்தப் பட்டறிவு தானே இன்றைய படிப்பறிவு.
எங்கோ ஒரு நிலத்தில் யாரோ ஒருவர் பெற்ற அனுபவத்தை அதன் வழி உருவாக்கிய அறிவை இறக்குமதி செய்யப் போராடுகிற நாம் ஏன் நம் நிலத்தின் அறிவை வளர்க்கவில்லை. ஏன் பாடநூலாக்கவில்லை.
இம் மண்ணில் ஒருவன் வாழ்ந்தான் என்றால் அவன் வாழும் போது ஏதாவது ஒன்றைப் பார்த்திருப்பான். தொட்டிருப்பான், கேட்டிருப்பான். நுகர்ந்திருப்பான், ஆய்ந்திருப்பான், அறிந்திருப்பான். அது இம் மண் பற்றிய அறிவில்லையா? இத் தேசத்தின் அறிவில்லையா?
நம் குளங்கள், கட்டடங்கள், கலாசாரம், உணவுமுறை, மருத்துவம், ஆடை முறை, வழமை, பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றன நம் தேச அறிவுக்கு சான்று பகர்வன. ஏன் இவற்றில் இருந்து பாடம் படிப்பதில்லை. இறக்குமதிச் சிந்தனைகளில் அதிகமானவை நம் காலநிலைக்கு, நம் பருவக்காற்று மழைக்கு நம் வயலுக்கு ஒவ்வாதவை என்பது ஏன் புரியவில்லை?
தவறுகளும், மோசமானவைகளும், மூடநம்பிக்கைகளும், காலாவதியானவைகளும் தவிர்த்து ஏனையவை என அடுத்த தலைமுறைக்கு நகர்த்த ஏதும் இல்லையா?
இந்த இலங்கையில் எங்கும் இல்லாத அறிவு இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. கலை, இலக்கியம், சிந்தனை, விஞ்ஞானம், நற்பண்புகள், நல்ல கலாசார விழுமியங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.
தவறு செய்தவர்கள் மட்டுமே வாழ்ந்த தேசமல்ல இது. மூட நம்பிக்கையாளர்கள் மட்டுமே வாழ்ந்த தேசமல்ல இது. காலத்தைத் தாண்டிய சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், நல்லவர்களும் நம் பாட்டன்மார்களிலும் பாட்டிமார்களிலும் இருந்திருப்பார்கள்.
கிரேக்கத்தில், ரோமில், பாரசீகத்தில், அறபுத் தீபகற்பத்தில் இருந்தது போல் ஒரு அரிஸ்டாட்டிலோ, உமரோ (ரலி), இத்ரீசியோ, இப்னு ஸீனாவோ(அவிசின்னா), உமர் கையாமோ போல் இம் மண்ணுக்குரிய தரத்தில் ஒருவராவது இல்லாமலா போயிருப்பார்? இம் மண்ணைத் தெரிந்த ஒரு புவியியலாலன், இச் சமூகத்தைத் தெரிந்த ஒரு சமூகவியலாளன், இம் மக்களைப் புரிந்த ஒரு உளவியலாளன், இம் மழையை, காற்றைத் தெரிந்த ஒரு அறிவியலாளன் இல்லாமலா இத்தேசம் கிடந்திருக்கும்?
இத் தேசத்தின் அறிவு, புலமைச் சொத்து குறித்தும் யோசிப்போம். இவற்றை அறிய, ஆய, ஆவண செய்ய, அடுத்த தலைமுறைக்கு நகர்த்த முயற்சிப்போம். இத் தேசத்துக்கே உரிய புலமைச் சொத்தை பாதுகாப்போம். இம் மண்ணின் அறிவைப் போசிப்போம்.
2016.04.23
தேசநேசன்.
இஸ்பஹான் சாப்தீன்.