திறமையுள்ளவர்கள் தமது திறமையை வெளிக்காட்ட முயற்சி எடுத்தால் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்.
1 min readதிறமையுள்ளவர்கள் தமது திறமையை வெளிக்காட்ட முயற்சி எடுத்தால் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்.
‘ஓவியம் வரைதல் என்பது ஒரு தியானம். அதற்கு அதிகம் பொறுமை தேவை.’ இந்த வாசகங்களை எங்கோ வாசித்த ஞாபகம். ஓவியக் கலைஞர் திருமதி ஸம்சியா கலீலை சந்தித்த போது இதனை அதிகம் உணர முடியுமாக இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை(06.08.2017) அவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்ற கொழும்பு-7, லயனல் வென்ட் காட்சிக்கூடத்தில் அவரைச் சந்தித்து உரையாடினேன். கடந்த நான்கு வருட காலப்பகுதிக்குள் தான் வரைந்த 38 ஓவியங்களை அவர் இங்கு காட்சிக்கு வைத்திருந்தார். ஆகஸ்ட் 3 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் இக் கண்காட்சி நடைபெற்றது.
Nature’s Odyssey-ii எனும் மகுடத்தில் இந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இது திருமதி ஸம்சியா கலீலுடைய இரண்டாவது கண்காட்சி. முதலாவது கண்காட்சி தனது 54 ஆவது வயதில் 2012 ஆம் ஆண்டு ஜூலை 14இ15இ16 ஆம் திகதிகளில் Nature’s Odyssey எனும் தலைப்பின் கீழ் கொழும்பு-3 நெழும்பொக்குண மாவத்தையிலுள்ள இலங்கை தேசிய கலாபவனத்தில் நடைபெற்றது. அதன்போது எண்ணெய் வர்ணத்தில் வரைந்த தனது 40இற்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைத்திருந்ததாக குறிப்பிட்டார்.
Odyssey என்றதும் ஹோமரின் கவிதைகளை நினைவுபடுத்தின. ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என்று கேட்க முற்பட்டபோது அவரே குறிப்பிட்டார். ‘ஒடிசி என்பது ஒரு பிரேஞ்சு மொழிச் சொல். இயற்கை சார்ந்த விடயங்களை குறிக்க பலரும் இச்சொல்லலை உபயோகிக்கிறார்கள்.’ இதே அர்த்தம் இக் கண்காட்சியிலும் இருந்த ஓவியங்களிலும் புலப்பட்டன.
இயற்கை சார்ந்த ஓவியங்களை மாத்திரம் தான் வரைவீர்களா என்று கேட்டதற்கு, ‘உருவங்கள் வரைவது குறைவு. மார்க்க வரையறைகளைக் கருத்திற் கொண்டு தான் இயற்கை சார்ந்த ஓவியங்களை அதிகம் வரைகிறேன். Figure Drawing மற்றும் Portrait போன்றவற்றை கற்ற போதிலும் அவை விருப்பம் குறைவு. இயற்கை காட்சிகளை வரைவதில் ரசனை சார்ந்த ஆர்வம் அதிகம்’ என்றும் எதிர்காலத்தில் Modern Art சார்ந்து வரைய முயற்சியெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவரது ஒவியங்களை பார்த்துக்கொண்டு செல்கையில் பெரும்பாலானவை Impasto Style சார்ந்தவையாக இருப்பதை அவதானிக்க முடிந்தது. Impasto என்பது ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பில் வர்ணப் பூச்சு அடர்த்தியாக உபயோகிப்பதைக் குறைக்கும். அதிகமான நிறங்கள் பல நிறங்களை கலவை செய்து பெறப்பட்டவை என்பது புரிந்தது. நேரடி நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவாகவே இருந்தது.
திருமதி ஸம்சியா கலீல் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். வேம்படி பெண்கள் மேல்நிலைப் பாடசாலையில் கல்வி கற்றவர். கணிதப் பிரிவில் உயர்தரம் கற்றவர். 1980 இல் தனது 23 வயதில் திருமணம் முடித்தது முதல் கல்கிசையில் வசித்துவருகிறார். 60 வயதை நெருங்கியுள்ள நிலையில் தற்போது ஒரு சர்வதேச பாடசாலையில் சித்திரப் பாட ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஐந்து வயது முதல் ஓவியம் வரைவதில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் தன்னை வேறு துறையில் கற்கும்படி கூறியதால் பாடசாலையில் கற்கும் போது சித்திரத்தை ஒரு பாடமாகக் கற்க முடியவில்லை என்றும் அதன் பின்னர், இளமைப் பருவத்திலும் இதனை ஒரு துறையாக கற்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், ஓவியம் வரையும் ஆர்வம் குறையவில்லை என்றும் சுயதேடலாலும் நூல்களை பார்த்து பயிற்சி எடுத்தும் தன்னை வளர்த்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
‘ஓவியங்கள் எனக்கு, ஒருவகையில் குழந்தை மாதிரி. ஓவியங்களுக்கு பெயர்களும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் ஓவியங்களை வாங்கிச் செல்லும் போது கவலையாக இருக்கும். ஒரு ஓவியத்தை வரைய சுமார் 24 மணி நேரம் தேவை. வீட்டு வேலைகளுக்கு மத்தியில் நேரம் கிடைக்கும் போது அவற்றை வரைகிறேன். சில ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒருமுறை எனக்கு பிடித்தமான ஒரு ஓவியத்தை ஒருவர் வாங்கிச் சென்றார். எனக்கு கவலையாக இருந்தது. உடனே அதே போன்று ஒன்றை மீண்டும் வரைந்தேன். அதுவும் விற்பனையானது. மூன்றாவதாக அதே போன்று இன்னுமொரு ஓவியம் வரைந்தேன். சிறிய சில வேறுபாடுகள் இருந்தன. முதல் ஓவியத்தை வாங்கிச் சென்றவர் இம்முறை அதே போல் இன்னொரு ஓவியம் இருப்பதைக் கண்டு அவர் வாங்கிய ஓவியத்தை கொண்டு வந்து குடும்பம் சகிதம் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். என் திறமைக்கு கிடைக்கும் இப்படியான அங்கீகாரங்கள் எனக்கு அதிக சந்தோசத்தைத் தருகின்றன.
இவரது தந்தையின் உற்சாகமும் வழிகாட்டலுமே முதன்முதலில் ஓவியம் வரைவதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது. தந்தையும் ஓவியங்கள் வரையக் கூடியவர். அவருக்கு அரச உத்தியோகம் கிடைக்கும் வரை ஓவியங்கள் வரைந்துவந்துள்ளார். பிறகு அவர் பயன்படுத்திய Sketch Books ஐ வைத்து தாம் வரையப் பழகியதாகவும் அதனைக் கண்ணுற்ற தந்தை சிறிய விடயமாக இருந்தாலும் உற்சாகமூட்டி தேவையான உபகரணங்களை கொண்டு வந்து தருவதாகவும் அதுவே இந்தளவு தூரம் வருவதற்கு காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.
தனது தந்தையே இவருடைய முதல் குரு. தனது 51 ஆவது வயதில்தான் இத்துறை சார்ந்த அறிவைப் பெரும் வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிடும் இவர் ஆர்வம் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை உறுதியாகக் குறிப்பிடுகிறார். சித்திரக் கலையை முதலில் கலாசூரி ஜயசிரி கமகேயிடம் ஒருவருடம் கற்றுள்ளார். பின் தனது தோழி கொடுத்த தகவலின் படி 2009ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கலா பவனத்தில் இணைந்து சில வருடங்கள் முறையாக இக் கலையை கற்றுள்ளார். தனது ஆர்வத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று இலங்கையில் ஓர் தேர்ச்சி பெற்ற ஓவியராகத் திகழ்கிறார் திருமதி ஸம்சியா கலீல்.
‘வீட்டில் நான் வரைந்த இரண்டு ஓவியங்களை தொங்கவிடுவதற்கு முறையாக கற்க வேண்டும் என்றுதான் வகுப்புகளுக்கு சென்றேன். கண்காட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கவில்லை. அப்போது, இலங்கை கலா பவனத்தில் கற்றுக்கொண்டிருந்தவர்களுள் நான் மட்டுமே ஒரு முஸ்லிம் பெண்மணி. அங்கிருந்த பணிப்பாளர் ஒருவர் நீங்கள் கண்காட்சி ஒன்று செய்தால் என்ன என்று கேட்டார். ஒரு ஓவியம் வரைவதற்கே கடினமாக இருக்கும், 50 வயதுக்குப் பிறகுதான் முறையாக கற்கவும் ஆரம்பித்திருக்கிறேன் இப்படியிருக்கயில் நான் எப்படி கண்காட்சி செய்வது என்று யோசித்தேன். நான் சேர்ந்து ஒரு மாதத்தில் ஓவியப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போட்டியில் வீட்டில் பயிற்சிக்காக வரைந்த ஒரு ஓவியத்தை கொண்டுபோய் காட்சிக்கு வைத்தேன். அதற்கு பரிசொன்று கிடைத்தது. அந்த படத்தை விற்காமல் ஞாபகார்த்தமாக பாதுகாத்து வருகிறேன்.
இதைவைத்து தந்தையும் உற்சாகமூட்டவே எனக்கும கண்காட்சி செய்யும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இரண்டாது முறையாக தனியாக கண்காட்சியை நடாத்துகிறேன். பயிற்சியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று எண்ணுகிறேன்’ என தனது கண்காட்சிப் பயணத்தைப் பற்றி விவரிக்கிறார் திருமதி ஸம்சியா கலீல்.
அது தவிர வருடம்தோரும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘கலா பொல’ எனும் பெயரில் நடைபெரும் கண்காட்சியில் 2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தனது ஓவியங்களை காட்சிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இலங்கையை விட வெளிநாடுகளில் அதிகமான Art Galleries காணப்படுகின்றன. ஆனால், இலங்கையில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்வதே கடினமான ஒரு விசயம். ஓவியங்களை ஒரு இடத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பதே ஒரு கடினமான வேலை. வேளிநாடுகளுக்கு கொண்டு செல்வது இதைவிட கடினமாக இருக்கும். அத்தோடு Art Galleries எங்களுக்கு ஏற்றவையாகவும் இருக்கவேண்டும். இருப்பினும் வெளிநாட்டில் எனது ஓவியக் கண்காட்சி ஒன்றை நடாத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உள்ளது’ என தனது எதிர்காலக் கனவு பற்றி மனம் திறந்தார்.
‘திறமையுள்ளவர்கள் தமது திறமையை வெளிக்காட்ட முயற்சி எடுத்தால் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும். முஸ்லிம் பெண்கள் இந்தத் துறைகளை திறமையிருந்தும் தெரிவு செய்வது குறைவு. ஆசையோடு ஒரு வேலையை செய்தால் அதில் மகிழ்ச்சி இருக்கிறது. தொழுகை நேரம், நோன்பு காலம், அன்றாட வீட்டு வேலைகள், வைபவங்கள், பயணங்கள் எல்லாவற்றையும் செய்துகொண்டுதான் இதனைச் செய்கிறேன். ஓவியம் வரைவதற்காக மேற்சொன்னவற்றை விடுவதில்லை.
ஓவியங்கள் வரைவதால் குடும்பம் சார்ந்தோ சமூகம் சார்ந்தோ இதுவரை எந்த தடையும் வரவில்லை. ஆதரவு வழங்குதே அதிகம். இந்தத் துறைக்கு வருபவர்களுக்கு எனது இந்த வார்த்தைகளே போதுமானவை’ என இளம் தலைமுறையினருக்கு தனது செய்தியை முன்வைத்தார் திருமதி ஸம்சியா கலீல்.
-இஸ்பஹான் சாப்தீன்-
மீள்பார்வை இதழ் 375 (18.08.2017)