றமழான் : சுய மாற்றத்தின் மாதம்.
றமழான் : சுய மாற்றத்தின் மாதம்.
புனித றமழான் பிறந்திருக்கிறது. வருடத்தில் ஏனைய பதினொரு மாதங்களை விட றமழான் மாற்றமான ஒரு மாதம். அதே போல் மாற்றத்திற்கான ஒரு மாதம்.
றமழான் மாதம் வந்துவிட்டால் பிரபஞ்சத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. வானில் பல மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
பூமியிலும் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறுகின்றன. உலகலாவிய ரீதியில் முஸ்லிம்களது வாழ்வொழுங்கிலும் பாரிய மாற்றங்கள் இடம் பெறுகின்றன. சாப்பாட்டு முறை, உறக்கம் மற்றும் பல விடயங்களில் இம்மாற்றம் ஏற்படுகிறது. இப்படிப் பௌதீக ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.
றமழான் வந்துவிட்டால் நம் வீடுகளில் பல மாற்றங்களைச் செய்கிறோம். பணியிடங்களிலும் அப்படித்தான். இவை பௌதீக ரீதியாக நாம் செய்யும் மாற்றங்கள். அதேபோல் நம் உளப்பாங்கில் நம் நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இதனையே றமழான் எதிர்பார்க்கின்றது.
முன்னூற்று அறுபத்தைந்து நாட்களில் முப்பது நாட்களை அல்லாஹ் நம்மை மாற்றிக்கொள்வதற்கான பயிற்றுவிப்புக் காலமாக அமைத்திருக்கிறான். இம் மாதத்தில் சுயமாற்றம் நிகழ்வதற்கான சாத்தியங்களும் அதிகம் காணப்படுகின்றன. ஆகுமானவை பல தடுக்கப்பட்டு அவற்றினூடாக பல உள்ளார்ந்த மாற்றங்களே இலக்குகளாக உள்ளன என்று குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகின்றன. எனவே, உடல், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தால் சுயமாற்றம் சாத்தியமாகும்.
ஒரு மனிதன் தன் உளப்பாங்கில் நடத்தையில் மாற்றம் வர வேண்டும் என விரும்பி செயற்படுகிறானோ நிச்சயமாக மாறலாம். அலகுர்ஆன் இதனை உறுதிப்படுத்துகிறது. இதற்கான பயிற்சிக்காலமாக இந்த 30 நாட்களைக் கொண்ட றமழான் மாத்த்தை அல்லாஹ்வே ஏற்படுத்தித் தந்திருக்கின்றான்.
உளவியலும் இதனை உண்மைப்படுத்துகிறது. ஒரு மனிதன் தன்னளவில் குறித்த ஒரு செயல் தன பழக்கத்தில் வர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் முப்பது நாட்கள் தொடர்ந்து குறித்த செயலை செய்தால் அது அவனுக்கு பழக்கமாகிவிடும் என தற்கால உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படியான சுய மாற்றத்திற்கான பயிற்சிக் காலமாக நாம் றமழானை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்த்து குறிப்பிட்ட ஒரு செயலையோ, நடத்தையையோ, மனப்பாங்கையோ நாம் இந்த றமழானில் இலக்காக எடுத்துக்கொண்டால் நிச்சயம் அவ்விடயத்தில் சுயமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.