இலஞ்சத்தை குற்றமாகக் கருதுங்கள்!
1 min readகடந்த இரு வருடங்களில் ஊடகங்கள் அளிக்கை செய்த செய்திகளை பட்டியலிட்டுப் பார்த்தால் ஊழல், இலஞ்சம், துஷ்பிரயோகம் சார்ந்த செய்திகளே முதலிடத்தில் இருப்பதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் கூட இலங்கைச் சூழலில் இலஞ்சம் மற்றும் ஊழல் சார் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காது விரவி இருப்பதையே இவை உணர்த்துகின்றன. அமைச்சர்கள் முதல் சாதாரண அரச ஊழியன் வரை இவற்றுடன் தொடர்பு பட்டிருப்பதை செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனை குறைப்பதற்கு நல்லாட்சி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
*இலங்கையில் இலஞ்ச ஊழல் தொடர்பான சட்டம் எப்போதிருந்து அமுலில் உள்ளது?
இலங்கை பிரித்தானியரின் கீழ் இருந்த போது 1883 களில் தண்டனைச் சட்டத்தின் ஒரு குற்றமாகவே இலஞ்சம் காணப்பட்டது.
இலஞ்சம் அதிகரித்ததால் 1931 களில் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு இச் சட்டத்தை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக எல்.எம்.டி.த சில்வா ஆணைக்குழு, எம்.டப்ள்யு.எச்.த சில்வா ஆணைக்குழு, கெனமன் ஆணைக்குழு ஆகியன பல வாத விவாதங்களை மேற்கொண்டு இலஞ்சம் தொடர்பான பிரத்தியேக சட்டம் 1954 இல் கொண்டுவரப்பட்டது.
அந்தவகையில் 1954 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சட்டமாக இலஞ்ச சட்டம் அமுலுக்கு வந்தது. இதன்படி இலஞ்சம் சம்பந்தமாக விசாரணை செய்யவும் வழக்குத் தொடரவும் சட்ட மா அதிபருக்கே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
நான்கு வருடங்களுக்குப் பின் 1958 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் படி இலஞ்சம் தொடர்பான திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. இத் திணைக்களம் குற்றவியல் விசாரணை ஆணைக்குழுவின் உதவியுடன் விசாரணை செய்து சட்ட மா அதிபருக்கு விசாரணை அறிக்கையை அனுப்பிவைத்தது. இந்த முறை 1994 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுயாதீனமாக இயங்க வழியமைப்பதாக 1994 இல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தார்கள். அதன் பலனாக இலஞ்சம் தொடர்பான சட்டத்திற்குப் பதிலாக 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின்படி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழு (CIABOC) உருவாக்கப்பட்டது. இதனுடன் 1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலம் ஊழல் தொடர்பான குற்றம் சட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
17 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம்(1997) மூலமும் 19 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம்(2015) வழியாகவும் (CIABOC) ஆணைக்குழுக்கு தற்றுணிவாக விசாரணை செய்யும் மற்றும் வழக்குத் தொடரும் அதிகாரங்களை பெற்றுக் கொடுத்தது. இம்முறையே இன்று வரை நடைமுறையில் உள்ளது.
*இலஞ்சம் என்றால் என்ன?
பணத்துடன் சம்பந்தப்பட்டவை மாத்திரமே இலஞ்சம் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இலஞ்சம் என்பது பணத்துடன் மாத்திரம் தொடர்பான ஒரு விடயமல்ல. ஒரு பரிசு வழங்கலாம், பதவியொன்று வழங்க முடியும், தொழில் ஒன்று வழங்க முடியும், அதே போன்று வேறு ஏதோ வகையில் இன்பம் ஒன்றை வழங்குவதாகக் கூட அமையலாம். பாலியல் மூலம் இன்பம் வழங்குவது கூட இந்நாட்டின் சட்டப்படி இலஞ்சமாகவே கணிக்கப்படுகிறது.
*இது எப்போது குற்றமாக மாறும்?
அரச சேவையில் உள்ள ஒருவர், அரச சேவையாளர் என்ற வகையில் ஒரு உத்தியோக பூர்வ செயலினை ஆற்றுவதற்கு அல்லது தவிர்ந்திருப்பதற்கு ஏதேனும் சன்மானத்தை கேட்பாராயின் அல்லது பெறுவராயின் அது இலஞ்ச குற்றமாகவே அமையும்.
*யார் இந்த அரச ஊழியர்?
நீதிமன்ற அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பாராளுமன்ற அமைச்சர்கள் என சகல உயர் மட்ட அதிகாரிகளும் கீழ் மட்ட அரச ஊழியர்களும் இதில் உள்ளடங்குவர். சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் மூன்றாவதாக ஒரு நபரை நியமித்தே இலஞ்சம் பெறுகிறார்கள். குறித்த திரைக்கு பின்னால் உள்ள அதிகாரிக்காகவே மூன்றாம் நபர் இலஞ்சம் பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்த முடியுமாக இருந்தால் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பூரண சட்ட அனுமதியுண்டு. அந்த சந்தர்ப்பத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட மூன்றாவது நபர் இலஞ்சம் பெற உதவினார் என்றும், அதிகாரி இலஞ்சம் பெற்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்படும். அதற்கான போதிய சாட்சி தேவை.
*இலஞ்ச மற்றும் ஊழல் வழக்குகளில் நாம் முகங்கொடுக்க வேண்டிய படித்தரங்கள்.
பல சந்தர்ப்பங்களில் இலஞ்சம் பெறும் போதோ வழங்கும் போதோ பிடிப்பது கடினம். காரணம், யாராவது முறைப்பாடு செய்ய வேண்டும். முறைப்பாடு வந்தால் முறைப்பாட்டு ஆணைக்குழு அதனை எழுதிக்கொள்ளும். முறைப்படுபவருடன் கதைக்கும். பின்னர்; ஆதாரங்களுடன் பிடிப்பதற்கான உபாய நடவடிக்கை ஒன்று ஏற்பாடு செய்யப்படும். இதில் ஆணைக்குழுவில் உள்ள பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவர். அவர்கள் முன்னிலையிலேயே இதற்கான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அடையாளம் இடப்பட்ட பணத்தாள்கள் வழங்கப்படும். இவை இலஞ்சம் பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டால், இலஞ்சம் பெற்றார் என உறுதிசெய்யப்படும். இப்படிப் பிடிபட்டால், முறைப்பாடு செய்தவரும், உபாய தூதுவராக செயற்பட்டவரும் சாட்சியாளர்களாக மாறுவர். எனவே, எப்போதும் முறைப்படுபவரின் சாட்சியும் எதிர்பார்க்கப்படுகிறது.
*பெரும்பாலான வழக்குகளில் என்ன நடக்கின்றது?
முறைப்பாடு செய்தவர் சாட்சி சொல்ல வேண்டும் என்ற வகையில் அவர் காலம் கடந்து செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிப்பார். இது அவரை அறியாமலேயே நடக்கும். காலம் கடப்பதால் வரும் வெறுப்பு, அலைய வேண்டிய நிலை என்பன இதற்குக் காரணம். அல்லது அவர் இலஞ்சம் பெற்று ஒதுங்கிக்கொள்வார். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் குற்றம் சாட்டியவருக்கும் இடையில் உள்ள தொடர்பு எப்படியானது என்பது தெரியாது. இப்படி இலஞ்சம் பெற்று மாறிய சந்தர்ப்பங்களும் உண்டு.
நீதிமன்றத்தில் வைத்து நீதிபதிக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது உபாய தூதுவர் சொல்கின்ற விடயத்துக்கும் முறைப்பாடு செய்தவர் சொல்கின்ற விடயத்துக்கும் குறிப்பிடத்தக்க முக்கிய வேறுபாடு ஏதும் இருந்தாலோ உடன் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே கொள்ளப்படுவார். நீதிமன்றத்தில் எழும் சந்தேகத்தின் பலன் எப்போதும் குற்றம் சாட்டப்பட்டவருக்கே சாதகமாக அமையும். இது திட்டமிட்டு பிடிக்கும் சந்தர்ப்பங்களில் நடைபெறும் முறை.
திட்டமிட்டு பிடிக்க முடியாத சந்தர்ப்பங்களும் உள்ளன. ஒருவர் இலஞ்சம் கொடுத்து பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து தான் குறித்த நபருக்கு இலஞ்சம் கொடுத்ததாகச் சொல்கிறார். அப்படி இலஞ்சம் கொடுத்தார் என்று சொன்ன மாத்திரத்தில் ஒரு நபரை சந்தேக நபராக மாற்ற முடியுமா? ஆணைக்குழு இதனை விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு ஆணைக்குழு திருப்திப்பட்டால் மாத்திரமே இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும். முறைப்பாடு செய்பவர் சொல்வது உண்மையா பொய்யா என்று பார்க்கும்;. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு கொண்டு போய் வழக்குத் தொடர குறைந்தபட்ச சாட்சி அல்லது உண்மைத்தன்மை உள்ளதா எனப் ஆராயும்;. அப்படியெதுவும் இல்லையென்றால் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லாது. எனவே, நீதி மன்றத்துக்கு வந்தவையெல்லாம் ஆணைக்குழு விசாரணைகளின் பின் தகுந்த ஆதரங்களுடன் வந்தவையாகவே இருக்கும்.
சில சந்தர்ப்பங்களில், முறைப்பாடுகள் கிடைப்பதில்லை. திட்டமிட்டு பிடிக்கவும் முடியாது. ஆனால், சாதாரண குடிசையில் வாழ்ந்த ஒரு அதிகாரி திடீரென மாளிகையில் வாழ்கிறார் என்றால். இப்படியான சந்தர்ப்பங்களில் குறித்த அதிகாரி இலஞ்ச அல்லது ஊழலில் ஈடுபட்டுள்ளார் எனத் தீர்மானித்து விசாரணை நடத்தப்படும். 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கப்படி சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை அதிகாரிகள், பதவிநிலை தரத்திற்கும் மேலான அரசாங்க அலுவலர்கள் போன்றோர் வருடாந்தம் இவற்றை வெளிப்படுத்த வேண்டும். இதனை விசாரிக்க பூரண அதிகாரம் உண்டு. ஆனால், பெரும்பாலானவர்கள் தனது வருமானத்திற்கு கூடிய சொத்துக்களை வேறு நபர்களின் பெயர்களிலேயே வைத்திருக்கிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் இதனை உறுதிப்படுத்த சாட்சிகளை முன்வைப்பது அவசியமாகிறது.
இஸ்பஹான் சாப்தீன்
www.isbahan.com
15.12.2016 (மீள்பார்வை)