December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

#முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமான நான்கு நிலைப்பாடுகள்.

1 min read

mpl1

-இஸ்பஹான் சாப்தீன்- www.isbahan.com

முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த கலந்துரையாடல் வலுப்பெற்று வருவதைக் காண்கிறோம். முன்னெப்போதும் இல்லாத அளவு எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருவதை அவதானிக்கிறோம். இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தும் அதன் உள்ளடக்கம் மற்றும் அமுலாக்கம் சார் குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடும் வெவ்வேறு நிறுவனங்களின் மூன்று அமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது இது குறித்து எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அண்மையில் மதச்சார்பற்ற சிந்தனைப் போக்குள்ள ஒரு நண்பர் இது குறித்து என்னிடம் வினவிய விதம் என்னை அதிகம் கவலைகொள்ளச் செய்தது. அத்தோடு சில தமிழ், சிங்கள, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் நண்பர்களும் இது குறித்து தெளிவு படுத்துமாறு கேட்டிருந்தனர்.

அவர்களுடன் கதையாடிய சில விடயங்களுடன் மேலதிக சில தகவல்களையும் இணைத்து உங்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.

#முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமான நான்கு நிலைப்பாடுகள்.

அந்த வகையில், இலங்கைச் சூழலில் முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமான நான்கு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அந் நான்கு நிலைப்பாடுகளையும் பிரதிநிதிப்படுத்துவோரும் உள்ளனர். அந்த வகையில் அந் நான்கு நிலைப்பாடுகள் குறித்தும் அந்நிலைப்பாடுகளில் உள்ள தரப்பினர்கள் பற்றியும் பார்ப்போம்.

01/ முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

இந்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள் சரீஆ சட்டம் இலங்கைக்கு அபாயகரமானது என்று நிறுவ முயற்சிக்கின்றனர். இன்னொரு பிரிவினர், இலங்கையில் ‘ஒரு சட்டம்’ தான் இருக்க வேண்டும். அந்த சட்டம் நாட்டில் உள்ள சகலருக்குமான பொதுச்சட்டமாக இருக்க வேண்டும். Personal Law என்கிற தனித்தனி இனங்களுக்கு என்று உரிய தனியார் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். இவர்கள், இக் கருத்தின் ஊடாக முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க முயல்கின்றனர். நேரடியாகவோ மறைமுகமாக முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற இந்த நிலைப்பாட்டில் உள்ளவர்களைப் பொறுத்தவரையில் பேரினவாதிகள், மேற்கத்தேய சிந்தனைப் போக்கில் உள்ள சிலர் மற்றும் மதச் சார்பற்ற சிந்தனைப்போக்கு கொண்டவர்கள் என்போர் உள்ளடங்குவர். இவர்கள் இம்முடிவை எடுக்க முற்பட முனைகின்ற போது இலங்கையில் உள்ள ஏனைய இரு தனியார் சட்டங்களையும் நீக்க அவ்வத்தரப்பினர் முன்வருவார்கள் என்றும் முஸ்லிம்கள் முன்வரமாட்டார்கள் என்றும் நம்புகின்றனர்.

02/ முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்த விதத்திலும் கைவைக்கக் கூடாது.

இலங்கை முஸ்லிம்களில் சொற்ப அளவான மக்கள் இந்நிலைப்பாட்டில் உள்ளனர். இச்சட்டத்தில் எவ்விதத்திலும் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வரப்படக்கூடாது என்று கூறுகின்றனர். அத்தோடு அதில் எந்தவித மாற்றமோ திருத்தமோ கொண்டுவர இடமளிக்கவும் கூடாது. இது எமது முதாதையர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வந்த ஒன்று. இது எமது மார்க்கச் சட்டம். எனவே இதில் மாற்ற நாங்கள் தயார் இல்லை. வேறு யாரையும் மாற்றவும் விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இவர்கள் உள்ளனர். சில பழமைவாதிகளும் முஸ்லிம் தனியார் சட்ட உள்ளடக்கம் சார்ந்த தெளிவான அறிவுப் பின்னணி இல்லாத சிலரும் சுயநலத்தை முன்னிறுத்திய சிலரும் இந்நிலைப்பாட்டில் உள்ளனர்.

03/ முஸ்லிம் தனியார் சட்டம் Western Right Based அடிப்படையில் மாற்றப்பட வேண்டும்.

இந்நிலைப்பாட்டைப் பொறுத்தவரை Western Right Based Approach ஐ அடிப்படையாக்க் கொண்டு அது பற்றி எழுதியுள்ள ஆதாரங்களை காட்டி இதனை மாற்ற வேண்டும் என்று போராடுகின்றனர். இவர்கள் இஸ்லாமிய Right based Approach இல் இருந்து பேசுவது குறைவு. அப்படிப் பேசினாலும் Western Approach ஐ நியாயப்படுத்தும் வகையில் இஸ்லாமிய மூல கிரந்தங்களில் இருந்து வழிந்து ஆதாரங்களை பெற முனைகின்றனர். இவர்கள் எப்படியாவது யாரை வைத்தாவது இதனை மாற்ற வேண்டும் என்று முனைகின்றனர். பெண்ணியவாதிகள் சிலரும் ஐரோப்பிய Agenda வுக்குக் கீழ் இயங்கும் ஒரு சில செயற்பாட்டாளர்களும் இந்நிலைப்பாட்டில் உள்ளனர்.

04/ முஸ்லிம் தனியார் சட்டம் சரீஆவின் நிழலில் நின்று திருத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதனை சட்டமாக்கி அமுலாக்க முயற்சித்தவர்கள் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் அவர்களுக்குக் கிடைத்த மூலங்களை வைத்தும் அறிவுப் பின்னணிகளை வைத்தும் இச்சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே, அது மீளவாசிப்பு செய்யப்பட்டு சரீஆவின் நிழலில் நின்று இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் மூலம் திருத்த முயற்களை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு அமுலாக்கப் பொறிமுறை நியாயமான அளவு மாற்றங்களுக்கு உற்படுத்தப்பட வேண்டும். இந் நிலைப்பாட்டில் பல முஸ்லிம் அறிஞர்களும் புத்திஜீவிகளும் காணப்படுகின்றனர். இந்நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில் கால வர்த்தமானத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகவே காணப்படுகிறது. இந்நிலைப்பாடே என் தனிப்பட்ட நிலைப்பாடுமாகும்.

2016.12.07

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed