December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

முஸ்லிம் என்றொரு இனமில்லை. -கலாநிதி பல்லேகந்த ரதனசார மஹா தேரா்-

1 min read
சகவாழ்வு பற்றி பேசுகிறீர்கள். நாம் பல தசாப்தங்களாக இதற்காக வேலை செய்து வருகின்றோம். கவலையான விடயம் என்னவென்றால் வடக்கு மக்கள் வெளியேற்றப்பட்ட போது உடன் கொழும்பில் இருந்து விரைந்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற கிறிஸ்தவர்கள் வந்தார்கள். சிங்களவர்கள் வந்தார்கள். தமிழ் மக்கள் சிலர் வந்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் எவருமே வரவில்லை. ஒரு மௌலவியையோ சாதாரண ஒரு நபரையோ எவரையும் காணவில்லை. 1990 களில் நடந்ததை சொல்கிறேன். இப்படியான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் தனித்தே இருந்தது. முன்னர் அப்படியல்ல.

20160924_215605

14390858_1245423068815114_1864265685294900198_n

லோனா தேவராஜா எனும் வரலாற்றாசிரியரால் எழுதப்பட்ட ‘இலங்கையில் முஸ்லிம்கள்’ என்று ஒரு நூல் இருக்கின்றது. இதன்படி முஸ்லிம்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டில் இருந்து இலங்கைக்கு வந்தார்கள். குறிப்பாக ஆண்கள். இவர்கள் விகாரைகளில் தங்கி தம்பதெனிய அரசர்களிடம் யூனானி மருத்துவர்களாக பணியாற்றினார்கள். இலங்கைக்கு வந்து காணி,பூமிகளை வாங்கி இலங்கையர்களாகவே இருந்தார்கள். மதம் இஸ்லாமாக இருந்தது. வேறெந்த வித்தியாசமும் தெரியவில்லை. போர்த்துக்கேயர்கள் வந்த பிறகும் முஸ்லிம்கள் தான் அரச அனுமதியுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். கொழும்புக் கோட்டையிலே தங்கி குடிசைகளமைத்து பாக்கு, மாணிக்ககற்கள் போன்றவற்றை தோணிகளில் வெளிநாட்டிற்கு எடுத்து சென்றனர். அதே போல் அங்கிருந்தும் பல பொருட்களை கொண்டு வந்தனர். இவ்வாறு நல்லதொரு சகோதரத்துவத்துடன் பழகி வந்தார்கள்.

கிராமத்தில் இருந்தது விகாரைகள் மட்டுமே என்பதால் அதிக நேரம் விகாரைகளில் கழித்தனர். எங்களது சகவாழ்வு எந்தளவு தூரம் இருந்தது என்றால், வரலாற்றின்படி எமது மக்கள் அக் காலத்திலிருந்து இறைச்சி, மீன் சாப்பிட்டார்கள். இவர்கள் சொல்லும் பொய் போல் அல்ல. அவர்கள் வேட்டை இறைச்சி, மாட்டிறைச்சி, மீன் போன்றவையும் சாப்பிட்டிருக்கிறார்கள். இருப்பினும் முஸ்லிம்களின் வருகையின் பின் அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட விரும்புவதில்லை என்பதை பிக்குகள் புரிந்து கொண்டார்கள். இதனால், முஸ்லிம் நானாக்கள் வருகிறார்கள். நீங்கள் வீடுகளில் இறைச்சி சமைக்க வேண்டாம். பன்றி இறைச்சி அவர்கள் சாப்பிடுவதில்லை. உங்களுக்கு சாப்பிட வேண்டுமெனின் காடுகளுக்கு சென்று அங்கே சமைத்து சாப்பிடுங்கள். வீட்டுக்கு சட்டி பானைகளை கொண்டு வராதீர்கள் என விகாரைப் பிக்குகள் அறிவித்தார்கள். முஸ்லிம்கள் வியாபாரத்திற்கு கூட வீட்டிற்கு வர விரும்புவதில்லை என்பதால் வீடுகளில் பன்றி இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டோம். அதே போலவே தான் மாட்டிறைச்சியும் தமிழர்கள் சாப்பிட விரும்பாத காரணத்தால் அவர்கள் வாழும் பிரதேசங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டோம். இப்படித்தான் சகவாழ்வு ஆரம்பித்தது. விகாரைகளில் இருந்து ஆரம்பித்தோம்.

முஸ்லிம்களுக்கு பெண்கள் இல்லாத காரணத்தால் சிங்கள பெண்களை மணமுடிக்கச் சொன்னோம். ஆயினும் அப் பெண்கள் முகமூடி அணிய ஆரம்பிக்கவில்லை. சம்பிரதாய முஸ்லிம் பெண்கள் போல் சேலை அணிந்து சேலை நுனியால் தலையை மறைத்துக் கொண்டனர். அதே போல் முஸ்லிம் ஆண்கள் சாரம் அணிந்து சேர்ட் அணிந்து தலையில் தொப்பி போட்டுக் கொண்டார்கள். சிங்கள மக்களை போலவே தான் இருந்தார்கள். வித்தியாசத்திற்கு இருந்தது மார்க்கம் மட்டுமே. வேறு எந்தவொரு பேதமோ வித்தியாசமோ இருக்கவில்லை. இப்போது அண்மையில் ஆரம்பித்திருக்கும் அராபிய மயமாக்கம் காரணமாக முஸ்லிம் களும் ஒரு இனமாக மாறப் பார்க்கின்றனர். முஸ்லிம் எனறொரு இனம் உலகில் இருக்கவில்லை. ஆனால் இஸ்லாம் என்ற ஒரு மதம் இருக்கிறது. இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கே முஸ்லிம் என்கிறோம்.

உலகில் இஸ்லாத்தை பின்பற்றும் நாடுகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் வாழ்பவர்கள் இந்தியர். கிருகிஸ்தானில் வாழ்பவர்கள் கிருகிஸ்தானியர்கள். உஸ்பெக்கிஸ்தானில் இருப்பவர்கள் உஸ்பெக்கிஸ்தானியர்கள். அரேபியாவில் இருப்பவர்கள் அராபியர்கள். மலேசியாவில் இருப்பவர்கள் மலாயர்கள் ஆனால் இவர்கள் பின்பற்றுவது இஸ்லாம். பங்களாதேசில் இருந்து சிங்களவர்கள் வந்தார்கள். எஞ்சியவர்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் சிங்களவர்கள். அவர்கள் முஸ்லிம் இனத்தவர்களல்லர். யாரோ, ஸாஹிரா கல்லூரியிலோ எங்கேயோ கற்பித்தார்கள். நாங்கள் வேறு இனம் என்றும், வேறு மதம் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். அதிஷ்டவசமாக மொழி அழிந்துபோய்விட்டது. உங்களுக்கென்று ஒரு மொழியில்லை. உங்களின் இப்போதைய மொழி இந்தியா மலபாரில் இருந்து வந்த தமிழ் மொழி. குர்ஆன் மாத்திரமே அரபு மொழியில் உள்ளது. டி.பி ஜாயா போன்றோர் சுதந்திரத்திற்காக போராடினார். இருப்பினும் 1930/40 களில் இருந்து முஸ்லிம்கள் சிங்கள பௌத்த மக்களுடன் இருக்கவில்லை. தூரமாக ஆரம்பித்தனர். அன்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த குரோதம் இப்போது உச்ச நிலையில் இருக்கின்றது.

மற்ற விடயமாக, அறபு நாடுகளில் ஆரம்பமான கடுமையான நடவடிக்கைகளைக் கூறலாம். இஸ்லாமிய மதத்தின் பெயரால் மனிதர்களை கொலை செய்ய ஆரம்பித்தார்கள். குர்ஆனின் படி அல்லாஹு அக்பர் எனச் சொல்லிச் சொல்லி கழுத்தை அறுக்கிறார்கள். இனி இதை எப்படி நினைப்பது?

நீங்கள் அறியாவிட்டாலும், இன்று உலகில் உள்ள விமானநிலையங்களால் நுழையும் போது பெயர் முஸ்லிமாக இருந்தாலோ முஹம்மத் என்ற பகுதி பெயருடன் இருந்தாலோ மணிக்கணக்கில் விசாரிக்கிறார்கள். அவதானிக்கிறார்கள். கடும் சிரமம். முஸ்லிம் என்றில்லை. என்னைக்கூட ஒரு பௌத்த பிக்குவாக சென்றாலும் இது முஸ்லிம் ஆடையா என்று சந்தேகப்படுகிறார்கள். பெரும்பாலும் நான் குவைட் வழியாகத்தான் செல்வேன். ரஷ்யா விமான நிலையத்தில் புதினமான முறையில் பயப்படுகிறார்கள். சகலரையும் நிறுத்தி விசாரித்துத்தான் அனுப்புகிறார்கள். இது இன்றைய முஸ்லிம்களின் நிலை. ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது? சில கலீபாக்களுக்கு தேவையானபடி குர்ஆனுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். இந்த விளக்கங்களை நம்பியவர்கள்தான் இன்று உலகில் இருக்கிறார்கள்.

இம்முறை நோன்பில், சென்ற மாதம் நான் ரஷ்யாவில் கஸகஸ்தான் பள்ளிவாயல்களில் தங்கியிருந்தேன். அப்போது முப்தி சொன்னார். எமது மதத்தில் ஒரு கொசுவைக் கொல்லக்கூட அனுமதியில்லை. நாம் அகிம்சைவாதிகள். ஆனால், தவறான முறையிலெல்லாம் மாடுகளைக் கொலை செய்கிறாரகள், இங்கு இருப்பவர்கள் தவறான விளக்கங்களைக் கொடுத்ததே காரணம். இறைச்சி, மீன் எல்லாம் சாப்பிடுகிறோம். ஆனால், இந்த மாதிரியாக மாடுகளை அறுக்கச் சொல்லவில்லை. மாடு அறுப்பதை எம்மால் நிறுத்த முடியாது. மதம் காரணமாக அல்ல அறுக்கிறார்கள். மனிதர்களின் தேவைக்காகவே அறுக்கிறார்கள். மதத்தின் படி பார்த்தால் அறுக்க முடியாது.

நான் கஸகஸ்தான் இமாமிடம் அங்குள்ள மதப்போதனை வகுப்பில் ஆறு மாதங்கள் இஸ்லாத்தைப் படித்தேன். எல்லா சூராக்களையும் அவற்றின் விளக்கங்களையும் வாசித்திருக்கிறேன். மக்காவிலிருந்து மதீனா வரையிலான யுத்தங்கள், முகம்மத் நபி அவர்களின் போதனைகள் என சகலதையும் கற்றிருக்கிறேன். அவற்றைக் கற்க அதிக விருப்பம். காரணம், உணவுப் பிரச்சனைகள் பற்றிய விவாக பிரச்சினைகள் பற்றிய தீர்ப்புகள், சட்டதிட்டங்கள் என்பன குர்ஆனின் போதனைகளில் இருந்தமையே.

எம்மிடம் இருந்த எல்லாவற்றுக்கும் அவரவர்க்கு ஏற்றாற்போல் விளக்கங்களை கூறினார்கள். தங்களுக்கு விருப்பமான வகையில் பொருள் கொடுத்தார்கள். புத்த மதத்திலும் அப்படித்தான். கிறித்தவம் மற்றும் கத்தோலிக்கத்திலும் அப்படித்தான் நிகழ்ந்தது. இங்கிலாந்து ஹென்றி மன்னனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய அவசியமான போது சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டன. ரஷ்ய மன்னனுக்கு திருமணம் முடிக்க அவசியமான போது பள்ளித் திருச்சபையின் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. புத்த மதத்திலும் ஏதாவது செய்ய முற்படும்போது மதத்தில் உள்ளதை மறைத்து மாற்றிக் கொண்டார்கள். தற்போதுள்ள இறைச்சி மீன் பிரச்சனைகளும் அப்படித்தான். இஸ்லாம் மதமும் இப்படித்தான் மாற்றப்பட்டுள்ளது.

தொடரும்….

2016.09.23 மீள்பார்வை

-இஸ்பஹான் சாப்தீன்-

(Anas Abbas, Mifrah Musthafa மற்றும் Isbahan Sharfdeen ஆகியோர் இவரை சந்தித்தோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed