December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

மதத் தலைவர்களே எம்மைப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

1 min read

ven-thilakaratna

சர்வமத சமாதானப் பேரவையானது ஐந்து மதத் தலைமைகளை ஒன்றிணைத்து 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிக்குகள், பிதாக்கள், குருக்கள், மவ்லவிமார்கள் மற்றும் பஹாயி மத்த்தலைவர்கள் இதில் உள்ளடங்குவர்.

மதத் தலைவர்களுக்கு மத்தியில் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கும் தேசிய பிரச்சினைகளில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காகவும் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இராணுவத்தினருக்கும் LTTE யினருக்கும் இடையிலான மோதல்களின் போது அவ்விரு சாராருக்கும் மத்தியில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில வேலைத்திட்டங்கள் இந்நிறுவத்தினூடாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிறுவனம் ‘எகமுது லங்கா’ United Lanka என்ற ஒரு வேலைத்திட்டம் மூலமாக பல மாவட்டங்களிலும் இருந்து உயர்தரம் கற்கும் மாணவர்களை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டி. ஒரு கருப்பொருளை வைத்து, அதுபற்றி ஐந்து மதங்களும் எதனைப் போதிக்கின்றன என்பதை மதத் தலைவர்கள் மூலம் தெளிவுபடுத்தும் பணியை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.

இதன் மூலமாக மாணவர்களுக்கு மத்தியில் இருக்கும் இன, மதங்கள் மீதான அவநம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் களைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சமகால நிலவரங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இதனை தற்போதும் சர்வமத சமாதான பேரவையானது முன்னெடுத்து வருகின்றது.

அத்தோடு, நாட்டில் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது இனப்பிரச்சினையாகவோ மதப்பிரச்சினையாகவோ இருக்கலாம். உடன் செயற்படும் விசேடமான அணி (Special Tasks Force) ஒன்று உள்ளது. முரண்பாடு உள்ள இடத்துக்குச் சென்று அது பாரிய பிரச்சினைகளாக உருவெடுக்க முன் சம்பந்தப்பட்ட மக்களுடன் கதைத்து தீர்த்து வைக்க ஐந்து மதத் தலைவர்களும் உடன் செயற்படும் வகையில் இந்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

அரசினாலோ அல்லது வேறு அதிகார அமைப்புகளாலோ மக்களுக்கு ஏதும் அநீதிகள் நிகழவிருந்தால் அவற்றுக்கு எதிராக தைரியமாக குரல்கொடுக்கும் அமைப்பாகவும் சர்வமத சமாதானப் பேரவை திகழ்கிறது.

#சகவாழ்வுக்கான சவால்கள்.

“சகவாழ்வுக்கு இரண்டு விடயங்களே சவால்களாக இருக்கின்றன. ஒன்று, அரசியல்வாதிகளின் ஆதிக்கம். இரண்டு, சில மதத் தலைவர்களின் ஆதிக்கம். இவ்விரு சாராரின் நடவடிக்கைகளால்தான் அதிகமான இனப்பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. மதங்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன.

மதத் தலைவர்களே எம்மைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் அல்லது தமது மதத்துக்குள் மாத்திரம் செயற்படுவதற்கு எம்மை சிறுவயதில் இருந்தே மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். எமக்கு மற்றவர்களுடன் பழக இதனால் இடமளிக்கப்படவில்லை.

எனவே, இதிலிருந்து விடுபட வேண்டும். மதத் தலைவர்கள் என்ற வகையில் எமது பிரச்சினைகளுக்கு எமது பாரம்பரிய மதப்போதனைகளின் படி தீர்வு காண முடியாது. எமது மதங்களுக்கு இடையிலேயே சமாதனம், நல்லிணக்கம் கிடையாது என்பதே இதற்கான முதன்மைக் காரணமாகும்.

மதம் என்பது மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஓர் அமைப்பொழுங்கு. அவற்றின் மூலம் ஓர் உயர் விளைவைப் பெற முடியாது. எச்சரிக்கையைப் பெற முடியாது. விசேட மாக அரசியல் தலைவர்கள் மத்த் தலைவர்கள் தத்தமது ஒழுக்க போதனைகளைப் பார்த்தால், அதன் படி வாழ்ந்தால் அங்கு சகவாழ்வை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும். நாம் எம் ஒவ்வரிடமும் உள்ள ஒழுக்கப் போதனைகள் அடங்கிய கொள்கைகளில் உடன்பட்டிருக்கிறோம். எனவே, அவ்வந்த மதங்களின் பிரதான போதனைகளை மதித்து செயல்பட்டோமானால் சகவாழ்வைக் கட்டியெழுப்ப ஏதுவாக அமையும்.

அதுபோன்று எமது பேரவையின் எதிர்பார்ப்பு சகவாழ்வை கட்டியெழுப்புவதாகும். மதங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தல். அதற்காக நாம் எமது மதங்களில் இருந்து விலகி அல்லது மத அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று ஒழுக்கப் போதனைகளை நோக்கி கவனங்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு வரும் சகோதர சகோதரிகள் என மனிதத்துவத்திற்கு மதிப்பளித்து மனிதாபிமானத்தை முற்படுத்தி செயற்பட முடியுமாக இருந்தால் அதனை செய்ய முடியுமாக இருக்கும்.

முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் எடுத்துக்கொண்டால் எமது பழைய ஏற்பாட்டில் உள்ள பல விடயங்கள் குர்ஆனில் உள்ளன. புதிய ஏற்பாட்டில் உள்ள பல விடயங்களும் குர்ஆனில் இருக்கின்றன. முஹம்மது நபி வருகை தந்து ஹதீஸ் மூலம் ஒழுக்க போதனைகளை முன்வைத்திருக்கிறார்கள்.

எனவே, தொண்மையான பிணைப்புகள் காரணமாக முஸ்லிம்கள் கிறித்தவ ர்கள் இடையே ஓரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியுமாக இருக்கும். பல்வேறு பிரச்சனைகள் வரலாற்றில் ஏற்பட்டிருந்தாலும் நாட்டில் உள்ள பிரச்சனைகளின் போது ஒருமித்து குரல் கொடுக்க முடியுமாக இருக்கும்.

விசேடமாக அண்மையில் கொழும்பில் நடந்துமுடிந்த உலக இஸ்லாமிய மாநாடு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. வழமைக்கு மாற்றமாக இம்முறை சகல மதத்தினரையும் அழைத்திருந்தார்கள். இம்முறை தேரர்கள் எட்டுப் பேர் அளவில் வருகை தந்திருந்தார்கள். உரையாளர்களாகவும் தேரர்கள் வருகை தந்திருந்தார்கள். கிறித்தவ பீடங்களை பிரதிநிதித்துவப் படுத்தி fathars மற்றும் sisters வருகை தந்திருந்தார்கள். இது நல்லதொரு முன்னேற்றம். நாம் எதையும் மறைத்து செய்தால் மக்கள் சந்தேகம் கொள்வார்கள். ஆனால் நாம் வெளிப்படையாக செய்தால் எல்லா மதத்தலைவர்களுக்கும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற தெளிவு கிடைக்கும். இப்படியான செயல்களாலேயே சகவாழ்விற்கான வழிகள் கிடைக்கின்றன.

நான் கண்டியில் வசிப்பவன். அங்கு வசிக்கும் முஸ்லிம் சமூகத்துடன் பழகுகிறேன். அவர்களது பரம்பரைப் பெயர்கள் சிங்களத்திலேயே காணப்படுகிறது. “முதியன்ஸலாகே” அல்லது “கெதர” என முஸ்லிம் பெயர்களுடன் இணைந்து சிங்களப் பெயர்களே காணப்படுகின்றன. கடந்தகால மனிதர்கள் எந்தளவு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்தே புரிகிறது. அரபு நாடுகளில் இருந்து ஆண்கள் மாத்திரமே வந்தார்கள். இங்குள்ள இலங்கைப் பெண்களை திருமணம் முடித்ததால் பாதி அறபி பாதி சிங்களம். பாதி அறபி பாதி தமிழ். இப்படி ஒரு நிலைதான் இருந்தது. பிக்குகளும் மவ்லவிமாறும் தனது சமூகத்துக்கு இவற்றை சொல்லிக்காட்ட வேண்டும். நாம் இலங்கையர் வேறு வேறு இனத்தவரல்ல என்று கூற வேண்டும்.

சில அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள் உதாரணமாக இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் கிரிக்கெட் விளையாடும் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இலங்கை அணிக்கு இப்படி ஆதரவு வழங்குவதில்லை. எனவே, இங்கு ‘அறபுமயமாக்கம்’ நடக்கிறதோ என பேரினத்தவர்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

சதாம் ஹுசைனின் யுத்த காலத்தில் சதாம் சதாம் என கோசம் எழுப்பிக்கொண்டு கொழும்பில் பாதைக்கு இறங்கினார்கள். உண்மையில் இது எமக்கு சம்பந்தமில்லாத ஒரு விடயமாகும். இப்படி நடந்துகொள்வதால் பேரினத்தவரிடம் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கும். இதை இல்லாமல் செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் தாம் இலங்கையர் என்ற வகையில் வாழ வேண்டும். ஒரு சிறிய உதாரணத்தைக் கூறுகிறேன் நான் கண்டிப் பிரதேசத்தில் வசிப்பவன் என்ற வகையில், அறபு நாடுகளுக்கு சென்று வந்த சில பெண்களிடம் முகம்மூடி கருப்புடை அணியும் ஒரு கலாச்சாரம் அண்மைக்காலமாக ஏற்பட்டு ள்ளது. இது அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் சிங்களவர் மத்தியில் பாரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதன் மூலம் வெவ்வேறு தப்பான காரியங்கள் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. இப்படி கொலையும் செய்திருக்கிறார்கள். எனவே, இவற்றை தவிர்த்து நடப்பதே சிறந்தது” எனத் தெரிவித்தார்.

(சர்வமத சமாதானப் பேரவையின் இணைத் தலைவர் பிதா W. திலகரத்ன மீள்பார்வைக்கு வழங்கிய கருத்துக்களில் இருந்து.)

இஸ்பஹான் சாப்தீன்
2016.09.09

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed