December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

இலக்கிய மாதம் வந்துவிட்டது.

1 min read

செப்டம்பர் மாதம் வந்துவிட்டால் இலக்கிய வாதிகளுக்கும் வாசகர்களுக்கும் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனை யாளர்களுக்கும் பருவகாலமாகத் திகழ்கிறது. இலங்கைச் சூழலில் இப்படி ஒரு மாதம் ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இம்மாதத்தையொட்டி நாட்டின் பல இடங்களில் புத்தகக் கண்காட்சிகளும் புத்தக அங்காடிகளும் ஏற்பாடு செய்யப்படுவதைக் காணலாம். தரமான இலக்கியப் படைப்புகளுக்கான விருது வழங்கல் விழாக்கள் இடம்பெறுவதும் அடுத்து வரும் ஒக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாக ஒதுக்கப்பட்டிருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இதில், BMICH புத்தக் விற்பனைக் கண்காட்சி, கொடகே புத்தகக் கண்காட்சி மற்றும் பிரதேச ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற கண்காட்சிகளைக் குறிப்பிடலாம். இவை, புத்தக விற்பனையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சிறந்த சந்தைகளாக்க் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் தரமான தமிழ் மொழி நூல்களை காணக்கிடைக்காதது வருத்தமளிக்கிறது.

முன்பு குறிப்பிட்டது போல, புத்தகங்களை மதிப்பீடு செய்து எழுத்தாளர்களை கௌரவப்படுத்தும் வகையிலான விருது வழங்கும் விழாக்கள் நடாத்தப்படுவதும் முக்கியமான ஒரு விடயமாகும். இதில், கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு நடாத்தும் அரச இலக்கிய விருது விழா, கொடகே நிறுவனம் நடாத்தும் கொடகே விருது விழா, சரசவியின் விதுதய விருது விழா மற்றும் நாவல்களுக்கு மாத்திரம் விருது வழங்கும் ஸ்வர்ன புஸ்தக விழா போன்றவற்றை குறிப்பிடலாம்.

இதில், மிக முக்கியமானது கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு நடாத்தும் அரச இலக்கிய விருது விழாவாகும். இலக்கிய மாதத்தை முன்னிட்டு இவ் விழாவுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் A.M.A Bandara, மற்றும் அரச இலக்கிய ஆலோசனைக் குழுத் தலைவர் Jayasumana Dissanayake ஆகியோரை சந்தித்து இது குறித்து உரையாடினோம்.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய இலக்கிய துணைப் பேரவை 1952 ஆம் ஆண்டு 18ஆம் இலக்க இலங்கை கலைப் பேரவைச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய இலக்கியத் துணைப் பேரவையினாலேயே இலக்கியம்சார் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் முக்கிய கடமை சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் நாட்டின் இலக்கியத் துறைக்கு பங்களிப்பதாகும்.

மிக முக்கிய மான விடயம் அரச இலக்கிய விழாவை நடாத்துவதாகும். வருடா வருடம் இவ்விழா நடாத்தப்பட்டு வருகிறது. (2016) இம்முறை 59வது தடவையாக நடைபெறும் மேற்படி விருது வழங்களின் போது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, பாடலாக்கத் தொகுப்பு, அறிவியல் புனைக்கதை, நாடகம், புலமைத்துவ ஆய்வுசார் படைப்புகள், நானாவிதம், இளையோர் இலக்கியம், சிறுவர் இலக்கிய ம், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதை, மொழிபெயர்ப்பு கவிதை, மொழிபெயர்ப்பு நாடகம், மொழிபெயர்ப்பு புலமைத்துவ மற்றும் அறிவுசார் படைப்புகள் என 15 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

வெளிவரும் நூல்களில் 5 பிரதிகளை சுவடிக்கூடத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது அறிந்த்தே. இப்படி சுவடிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூல்களில் சிறந்தவற்றை தேசிய இலக்கிய துணைப் பேரவை பணங்கொடுத்து வாங்கி, அவற்றில் மதிப்பீட்டுக்கு தகுதிபெற்ற நூல் பட்டியலை உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்படும். பெயர் பட்டியலில் உங்கள் நூல் இடம்பெறாவிட்டால், விழா வருடத்துக்கு முந்தைய வருடத்தில் முதல் பதிப்பாக வெளிவந்த 48 பக்கங்களுக்கு குறையாத நூலின் மூன்று பிரதிகளை அனுப்பி வைக்குமாறு கோரி பத்திரிகைகளில் அறிவித்தல் விடுக்கப்படும். ஜனவரி மாதம் இவ் அறிவித்தல் வெளியாகும்.

1500இற்கு மேற்பட்ட சிங்கள மொழி மூல நூல்களும் 100இற்கும் 150இற்கும் இடைப்பட்ட ஆங்கில மொழி நூல்களும் 275இற்கும் 300இற்கும் இடைப்பட்ட தமிழ் மொழி மூல நூல்களும் போட்டிக்கு கிடைக்கப் பெறுகின்றன. இவற்றை மதிப்பீடு செய்வதற்காகவும் தெரிவு செய்வதற்காகவும் ஊவா தவிர்ந்த மற்ற எல்லாப் பல்கலைக்கழகங்களும் இணைந்து கொள்வதோடு ஜூரிக்கு தகுதியான இலக்கியப் புலமையாளர்களும் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். தமிழ் மொழி மூல நூல்கள் மூன்று சுற்றுக்களின் பின் தெரிவு செய்யப்படுவதோடு, ஆங்கில மற்றும் சிங்கள நூல்கள் 4 சுற்றுக்களின் பின் தெரிவு செய்யப்படுகின்றன.

இது தவிர தேசத்திற்கு இலக்கியப் படைப்புகளை வழங்கி தமது வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்காக அர்ப்பணித்த தமது வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் சாகித்திய ரத்னா விருது ஒவ்வொரு முறையும் சிங்கள, தமிழ், ஆங்கில மும்மொழிகளிலும் மூன்று இலக்கியவாதி களுக்கு வழங்கப்படுகிறது. இம்முறை தமிழுக்கு டொக்டர் ஜெபநேசன் பிதாவுக்கும், சிங்களத்திற்கு பண்டித சிறிதிலகசிறி அவர்களுக்கும் ஆங்கிலத்திற்கு டொக்டர் மார்லின் பீரிஸ் அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் ஒரு இலக்கியவாதிக்குக் கிடைக்கும் அதி உயர் விருது இதுவாகும்.

book-fair-2016

litracy-award-2016

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அவர்களின் தலைமை யில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் வருடந்தோரும் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

அத்தோடு, இலக்கிய விழாவை முன்னிட்டு இலக்கிய விரிவுரைகள ஏற்பாடு செய்து இலக்கிய இரசனையைப் பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. முதல் அமர்வில் இலக்கிய இரசனை சம்பந்தமான ஒரு உரையும் இரண்டாவது அமர்வில் பல இலக்கியவாதிகள கலந்து கொள்ளும் செயலமர்வும் இடம்பெறும். தமிழ் மொழி மூல இலக்கிய உரை அண்மையில் கொடகலை ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையில் இடம்பெற்றது. சிங்கள மொழி மூல உரை முதலாம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

மாதாந்தம் ஒரு இலக்கிய உரை கொழும்பில் இடம் பெறுகிறது. இது சிங்கள மொழியில் நடாத்தப்படுகிறது. அது தவிர தமிழ் மொழி மூல இலக்கிய உரைகளை இருமாதங்களுக்கு ஒருமுறை நடாத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

முன்னரை விட தற்போது தமிழ் இலக்கிய படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் அதிக கவனம் செலுத்தப்படுவதால், தமிழ்ப்ப டைப்பாளிகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில், மொழிபெயர்ப்பு க்கான உதவிகளை வழங்கல் மற்றும் விருது பெரும் நூல்களை மும் மொழிகளுக்கும் மாற்றுதல் ஆகியவற்றை க் குறிப்பிடலாம். இளைய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் தரப்படுத்தவும் மட்டக்களப்பில் இலக்கிய செயலமர்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கைப்பிரதிப் போட்டி ஒன்று நடாத்தப்படுகிறது. ஒரு புத்தகம் முழுமையடைய முன் உள்ள கைப்பிரதிகளுக்கான இப்போட்டி மும்மொழிகளிலும் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான அறிவித்தல் வருடந்தோரும் பிரசுரிக்கப்படுகிறது. இப் போட்டியில் வெற்றிபெறும் நூல் அமைச்சின் இலக்கியப் பேரவையினால் அச்சிட்டு வெளியிடப்படும்.

ஒரு எழுத்தாளனின் மூலம் வெளியிடப்படும் ஒரு நூலை “வெளியீட்டுப் பிரிவு” முன்வந்து வெளியிடும். பின் 25,000 பெறுமதியான நூல்களை தாமே வாங்கி நூலகங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யும். இது பற்றிய ஒரு விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும். அதன்பின் விண்ணப்பப் படிவத்துடன் ஒரு புத்தகம் அனுப்பி வைத்தால் அதனை பரீட்சிக்கும் குழுவிடம் வழங்கி தகுதிவாய்ந்த்தாக்க் கண்டால் இந்த முறையில் தமது புத்தகத்தையும் வெளியிட்டுக்கொள்ள முடியும்.

வருடாந்தம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. கவிதை, கவிதை வாசிப்பு, கட்டுரை, சிறுகதை, கையெழுத்து என பல பிரிவுகளில் மும்மொழிகளிலும் இப்போட்டி நடாத்தப்படுகிறது. இதற்கான அறிவித்தல் வருடந்தோரும் ஜனவரியில் வெளியிடப்படுகிறது. பிரதேச செயலகம் மூலமாகவும் பிறகு மாவட்டம் பிறகு தேசிய மட்டத்திலும் என ஒழுங்குமுறையில் போட்டிகள் நடைபெறுகிறது. அத்தோடு விருது விழாவுக்கு தெரிவாகும் நூல்களை மாணவர்களை வாசிக்கத்தூண்டும் வகையில் குறிப்பாக நாவல்களை திறனாய்வு செய்யும் வகையிலான ஒரு போட்டியும் நடாத்தப்பட்டு வருகிறது.

இலக்கியவாதிகளை கௌரவிக்கவும், புதிய தலைமுறை இலக்கியவாதிகளை உற்சாகமூட்டவும், பாடசாலை மட்டத்தில் எழுத்தாளர்களை இணங்காணவும் மற்றும் தரப்படுத்தவும், இலக்கிய ரசனையை பகிர்ந்துகொள்ளவும், இலக்கியப் படைப்புகளை மக்கள் மயப்படுத்தவும் என பல நிகழ்வுகள் இவ்விலக்கிய மாதத்தை மையப்படுத்தி இடம்பெற்று வருகின்றன. இவை பற்றி எந்தளவில் நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதையும் நமது பிரிதிநிதித்துவம் மற்றும் பங்குபற்றுதல் எத்தனை சதவிகிதம் என்பதையும் உணர்ந்து கொண்டாலே இவ்வாக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

-இஸ்பஹான் சாப்தீன்-
01.09.2016

(09.09.2016 மீள்பார்வையில் வெளிவந்துள்ளது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed