இலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டமூலம்.
1 min readஇலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டமூலம்.
தகவல் அறியும் உரிமை என்பது அடிப்படை மனித உரிமை என உலகம் ஏற்றுக்கொண்டு இற்றைக்கு 250 வருடங்கள் ஆகின்றன. அன்று தொடக்கம் இன்றுவரை தகவல் அறியும் உரிமையை பெரும்பாலான உலக நாடுகள் அமுல்படுத்தி வருகின்றன. 102 நாடுகளின் சட்டமூல எழுத்தாவணங்கள் உள்ளதாக சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கான மத்திய நிலையம் குறிப்பிடுகிறது. தென் ஆசியா நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையில் மாத்திரமே இவ்வுரிமை கிடைக்கப் பெறாமல் இருந்தது.
எமது நாட்டு மக்களுக்கு தகவல் உரிமையை வழங்குவதற்கான உரையாடல் 1993-1994 களில் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், அதன் முக்கியத்துவம் அறியாதவர்களின் கெடுபிடிகளால் தொடர முடியாமல் போனது.
கடந்த 20 வருடங்களாக இவ்வுரிமையை பெற முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் சட்டமூலமாக அங்கீகரிக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது பற்றிய கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூல வரைவுகள் முன்வைத்த பல சந்தர்ப்பங்களிலும் தடங்கள் இருந்துகொண்டே இருந்தன. சுய நலமிகளினதும் அறிவீனர்களதும் கெடுபிடிகள் காரணமாகவும் பாராளுமன்றம் கலைக்கப்படல் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாகவும் இழுபறி நிலையிலேயே இருந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றத்துடன் தெரிவான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசு 100 நாள் வேலைத்திட்டத்தின்படி தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக உறுதியளித்தது.
- 1993-1994 பொதுத் தேர்தல் – ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக எழுந்த ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடக இயக்கத்துள் தகவல் அறியும் உரிமை தொடர்பான உரையாடலை தோற்றுவித்தார்கள்.
- 1995 அப்போதைய ஊடக அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா அவர்கள், ஊடக சுதந்திரம், தகவல் சுதந்திரம் தொடர்பாக ஆராய நீதியரசர் ஆர்.கே.டபள்யூ. குணசேகர தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்தார்.
- 1995 ஏப்ரல் 7 ஆர்.கே.டபள்யூ. குணசேகர தமது குழுவின் அறிக்கையை ஊடக அமைச்சருக்கு ஒப்படைத்தார்.
- 1996 மே 27 ஆர்.கே.டபள்யூ. குணசேகர ‘The R.K.W.Goonasekara Committee Report’ இறுதி அறிக்கையை ஊடக அமைச்சருக்கு வழங்கியது. இவ் அறிக்கையில், தகவல் அறியும் உரிமை (Freedom of Information Act.) சட்டமாக மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என முதன்முதலாக பிரேரிக்கப்பட்டிருந்தது.
- 1996 இலங்கையின் சட்ட ஆணைக்குழு, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டும் என மாதிரி வரைவொன்றை வெளியிட்டது.
- 1998 ஏப்ரல் கொழும்பில் நடைபெற்ற வெகுஜன ஊடக மாநாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப்பொறுப்புணர்வு தொடர்பான கொழும்புப் பிரகடனத்தை வெளியிட்டது. (Colombo Declaration on media freedom and social responsibility) இதில் தகவல் அறியும் உரிமையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமென பிரேரித்திருந்தது.
- 2000 ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசு புதிய யாப்பு சீர்திருத்தம் வரைவொன்றை முன்மொழிந்தது. அதில் அடிப்படை உரிமைகள் பகுதியில் தகவல் அறியும் உரிமை இணைக்கப்பட்டிருந்தது.
- 2003 சுதந்திர ஊடக இயக்கம், மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் மற்றும் பல அமைப்புகள் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டமூல வரைவொன்றை முன்வைத்தது. அது அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது.
- 2004 பெப்ரவரி பிரதமர் ரணில் விகரமசிங்க அவர்களால் தகவல் அறியும் சட்டமூல வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இருப்பினும், பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதற்கு முன் 2004 மார்ச் மாதம் பாரளுமன்றம் கலைந்தது.
- 2006 ஏப்ரல் இலங்கையின் சட்ட ஆணைக்குழு இரண்டாவது முறையாகவும் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூல வரைவை ‘Draft Freedom of information act -2006 Proposed by the Law Commission of Sri Lanka’ வெளியிட்டது.
- 2009 அப்போதய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மிலிந்த மொரகொட அவர்கள் தகவல் அறியும் சட்டமூல வரைவொன்றை முன்வைத்தார்.
- 2010 ஜூலை அப்போதை ய எதிரக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தமது சுய முன்வரைவாக தகவல் அறியும் உரிமை ச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர அதிகாரம் இல்லையென தடுக்கப்பட்டது.
- 2010 செப்டம்பர் 23 அப்போது எதிர்க்கட்சி அமைச்சராக இருந்த ஐ.தே.க பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அவர்கள் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அப்போது ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக இருந்த தினேஷ் குணவர்தன அவர்கள் தமது அரசு 6 மாதத்தில் இப்படியான ஒரு சட்டமூலத்தை கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார்.
- 2011 ஜூன் 21 மீண்டும் கரு ஜயசூரிய முன்வைத்தார். அதற்கு ஆளுங்கட்சி மறுத்ததோடு சட்டமூலம் கொண்டுவருதல் தொடர்பாக வாக்கெடுப்பொன்றும் நடாத்தப்பட்டது. சார்பாக 32 வாக்குகள் கிடைத்தது. 99 வாக்குகள் எதிராக இருந்ததால் விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது பகிஷ்கரிக்கப்பட்டது.
- 2015 ஜனாதிபதி பொது ஆபேட்சகர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் வெளியிட்ட தனது கொள்கைப் பிரகடனத்தில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் கொண்டுவருவதாக வாக்களிக்கப்பட்டது.
- 2015 ஜனவரி தகவல் அறியும் உரிமை சட்டமூலம் 100 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என புதிய ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக பதவியேற்பின் போது தெரிவித்தார்.
- 2015 ஜனவரி 100 நாள் வேலைத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் காலப்பகுதி குறிப்பிடப்பட்டிருந்தது.
- 2015 ஏப்ரல் 23 அரசியல் யாப்பின் 122 ஆம் சரத்தின் கீழ் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்க பிரதமர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.
- 2015 மே 15 19ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தம் கொண்டிவரல். அதில் 14 அ (1) சரத்தில் தகவல் அறியும் உரிமை தொடர்பான யாப்புரீதியான அங்கீகாரம் வழங்கப்படல்.
- 2015 டிசம்பர் 21 தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் அரச வர்த்தமானி யில் வெளியிடப்பட்டது.
- 2016 மார்ச் 24 – பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களால் தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பித்தல்.
- 2016 மே 3 தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
- 2016 ஜூன் 23 பாராளுமன்றத்தில் சட்டமூலம் தொடர்பான விவதாம் இடம்பெற்றது.
- 2016 ஜூன் 24 வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் சபையின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம், குறித்த சட்டமூலத்தில் தகவலைப் பெற இருக்கும் உரிமைக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினை ஸ்தாபிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
13 வருடங்களின் பின் 2016 மார்ச் மாதம் 24 ஆம் திகதி தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் ஊடக அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஜூன் 24 அங்கீகரிப்பட்டு இலங்கை மக்களுக்கான வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் Centre for law and democracy மற்றும் Access Information ஆகிய நிறுவனங்களின் 102 நாடுகளைக்கொண்ட பட்டியலில் இலங்கை புதிதாக இணைந்து கொள்கிறது. இந்நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி இலங்கையின் சட்டமூலத்திற்கு 120 புள்ளிகள் கிடைத்துள்ளது. தரப்படுத்தலின் படி இலங்கைக்கு 102 நாடுகளின் சட்டமூலங்களில் 7 ஆவது இடம் கிடைத்துள்ளது. அந்தவகையில் எமது தகவல் அறியும் சட்டமூலம் உலகின் சிறந்த 10 தகவல் சட்டமூலங்களுக்குள் அடங்குகின்றது ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்படி இச்சட்டமூலம் குறைவற்றது முழுமையானது என்ற முடிவுக்கு வர முடியாது.
இஸ்பஹான் சாப்தீன்