December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

தகவல் சுதந்திரம் மிக்க நாடுகள்.

1 min read

தகவல் சுதந்திரம் மிக்க நாடுகள்.

RTI-01

உலகில் சுமார் 120 நாடுகள் தகவல் அறியும் உரிமை குறித்த சுதந்திரத்தை தம் யாப்பின் சட்டதிட்டங்களின் வழியாகவும் சட்ட ஆவண வெளியீடுகள் மூலமாகவும் வழங்கியுள்ளன.

அவ்வாறே, தகவல் அறியும் உரிமை, தகவல் சுதந்திரம் எனும் குறித்த பெயர்களிலேயே வழங்கப்படும் 102 அரசுகளின் சட்டதிட்டங்கள் எழுத்துருவில் இருப்பதாக்க் கனடாவில் உள்ள சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கான மத்தியநிலையம் (Centre for Law and Democracy) குறிப்பிடுகிறது. அத்தோடு, அந்த நிலையம் இந்த நாடுகளின் தகவல் அறியும் உரிமை சம்பந்தமான சட்டதிட்டங்களை ஆராய்ந்து அதில் நிலவும் சிறப்பம்சங்களை அளவீடு செய்து, அவற்றை தரவரிசைப்படுத்தியுள்ளது. அச் சட்ட திட்டங்களில் நிலவும் சிறப்புப் பண்புக்கூறுகளை 150 புள்ளிகள் என்ற அடிப்படையில் புள்ளிகளை வழங்கி மதிப்பீடு செய்துள்ளது.

புள்ளிகள் வழங்கும் போது அந்நாடுகளில் நிலவும் தகவல் அறியும் உரிமை சட்டமூலங்கள் அல்லது தகவல் சுதந்திரம் குறித்த சட்டமூலங்களின் உள்ளடக்கம் மற்றும் மானியங்கள் எந்தளவு தூரம் அந்நாட்டு மக்களுக்கு முக்கியம் என ஆராய்ந்துள்ளது. அதில், தகவலுக்காக மக்கள் நுழைவுரிமை (Right to Access) வழங்கப்பட்டுள்ள விதம், அச் சட்டமூலத்தின் மூலபிப்பிராயங்கள் (Scope), தகவல் விண்ணப்ப ஒழுங்குமுறைகள் (Requesting procedures), மக்கள் அபிலாசைகள் மற்றும் மறுப்புகள் (Expectations and Refusals), மேன்முறையீடு (Appeals), தகவல் வழங்காதவிடத்து கொடுக்கப்படும் தண்டனைகள், இரகசிய தகவல்களை பாதுகாக்கும் முறைகள் (Sanctions and Protections) மற்றும் தகவல் பெறுவதற்காக மக்களைத் தூண்டும் மற்றும் உற்சாகமூட்டும் முறைகள் (Promotional Measures) போன்றன ஆராயப்பட்டுள்ளது. அவ்வப் பகுதிகளுக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்டு இறுதியில் அவற்றைக் கூட்டி மொத்தப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தகவல் அறியும் மற்றும் தகவல் உரிமை குறித்த சட்டமூலங்கள் அமுலாகும் நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறு புள்ளிகள் வழங்கி தரப்படுத்தப்பட்ட வரிசைப்படி சிறந்த மற்றும் உயர் பெறுமானமுள்ள பண்புக்கூறுகளை உளளடக்கிய தகவல் சட்டமூலமாக 135 புள்ளிகளைப் பெற்று முதல் தரத்தைப் பிடித்திருப்பது சேர்பியா ( Serbia ) அரசாகும். 2005 இல் தகவல் சுதந்திரம் குறித்த சட்டமூலத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்த இந்தியா 128 புள்ளிகள் பெற்று 3 ஆவது தரத்தை பெற்றிருப்பதோடு 2014 இல் தகவல் சுதந்திர உரிமை சட்டமூலத்தை அறிமுகம் செய்த மாலைத் தீவு அப்பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் நீதிக்கும் ஜனநாயகத்திற்குமான மத்திய நிலையமும் தகவல் பிரவாகம் குறித்த ஐரோப்பிய சங்கமும் மிகச் சிறந்த தகவல் அறியும் உரிமை சம்பந்தமான சட்டமூலங்கள் உள்ள 10 அரசுகளை பட்டியலிட்டுள்ளன. அவை வருமாறு:

  • TOP 10 MAX MARKS
    …………………………..
    Serbia 135
    Slovenia 129
    India 128
    Croatia 126
    Liberia 124
    El Salvador 122
    Sierra Leone 122
    South Sudan 120
    Mexico 117
    Maldives 116

தகவல் சட்டமூலம் பயன்பாட்டில் உள்ள 102 நாடுகளில் மிகவும் பலவீனமான தகவல் சட்டமூலம் உள்ள நாடுகளுக்கு அதி குறைந்த புள்ளிகளே வழங்கப்பட்டுள்ளன. அதி குறைந்த புள்ளிகள் பெற்ற அரசுகளின் வரிசையில் இத்தாலி, ஈரான், பெல்ஜியம், ஜெர்மன் ஆகிய நாடுகளும் உள்ளடக்கம். இவ்வாறு தரப்பட்டியலில் குறைந்த புள்ளிகளைப் பெற்று கடைசியில் உள்ள 10 நாடுகள் வருமாறு:

  • BOTTOM-10 MAX MARKS
    ……………………………
    Austria 32
    Liechtenstein 39
    Tajikistan 49
    Iran 50
    Jordan 53
    Germany 54
    Italy 57
    Taiwan 58
    Dominican Republic 59
    Belgium 59

உலகில் பழம்வாய்ந்த தகவல் அறியும் உரிமை சம்பந்தமான சட்டமூலம் உள்ள நாடு சுவீடன் ஆகும். அச் சட்டமூலம் சுவீடன் அரசு அங்கீகரித்து அமுலாக்கியிருப்பது 1766 ஆம் ஆண்டிலிருந்தாகும். சுவீடன் மக்கள் 250 வருடங்களுக்கு முன்பிருந்தே இச் சட்டமூலத்தின் கீழ் தகவல் அறியும் உரிமையினால் பயன் அனுபவிக்கிறார்கள். உலகின் பழமையான தகவல் சட்டமூலத்தைக் கொண்ட சுவீடன் பெற்றுள்ள புள்ளிகள் 92 ஆகும். இது தரப்படுத்தலில் 40 ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன், உலகின் இரண்டாவது தகவல் அறியும் உரிமை குறித்த சட்டமூலத்தை சட்டமாக்குவது 1951 இல் பின்லாந்து அரசாகும். மேற்போந்த தரப்படுத்தலின் பிரகாரம் பின்லாந்து 22 ஆவது இடத்தில் உள்ளது. பெற்றுள்ள புள்ளி அளவு 105 ஆகும்.

அமெரிக்கா, 1966 இல் தகவல் சுதந்திர சட்டமூலத்தை தம் நாட்டினர்க்கு அறிமுகம் செய்த மூன்றாவது நாடாகும். இருப்பினும் தரப்பட்டியலில் 89 புள்ளிகளுடன் 44 ஆவது இடத்திலேயே காணப்படுகிறது.

உலக ஜனதாயகத்தின் தொட்டில் என்று கூறப்படும் ஐக்கிய இராச்சியம் தம் நாட்டு மக்களுக்காக தகவல் அறியும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவது 2000 ஆம் ஆண்டிலாகும். ஐக்கிய இராச்சியம் தரப்படுத்தலின் பிரகாரம் 100 புள்ளிகளைப் பெற்று 30 ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன் உலகில் பலம்பொறுந்திய மற்றும் செல்வந்த ஜனநாயக அரசுகளாக கருதப்படும் அவுஸ்திரேலியா, கனடா, நோர்வே, சுவிச்சர்லாந்து, தென் கொரியா, தாய்லாந்து, யப்பான், பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் மேற் குறிப்பிட்ட தரப்பட்டியலில் இருப்பது 50 ஆவது தரத்திற்கும் குறைவான இடங்களிலாகும்.

ரஷ்யா 98 புள்ளிகளைப் பெற்று 31 ஆவது இடத்திலும் நியூசிலாந்து 94 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் 35 ஆவது இடத்திலும் எத்தியோப்பியா தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தின் பயன்தருகைப்படி 112 புள்ளிகள் பெற்று 14 ஆவது இடத்தில் உள்ளது.

உலக பிரசித்தி வாய்ந்த குடியரசு நாடான சீனா 2007 இல் தகவல் உரிமை யை மக்களுக்கு வழங்குகிறது. சீனா தரப்படுத்தல் படி 75 ஆவது இடத்தில் உள்ளது. பெற்றுள்ள புள்ளிகள் 70 ஆகும்.

சார்க் பிராந்தியத்தில் இந்தியாவும் மாலைத்தீவும் அதிக புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தல் பட்டியலில் முதல் 10 நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளன. பங்களாதேஷ் 107 புள்ளிகளுடன் 20 ஆவது இடத்திலும் 104 புள்ளிகளுடன் 23 ஆவது இடத்தில் நேபாளும் ஆப்கானிஸ்தான் 77 புள்ளிகள் பெற்று 63 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 66 புள்ளிகளுடன் 83 ஆவது இடத்திலும் உள்ளன.

இஸ்பஹான் சாப்தீன்.
www.isbahan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed