கண்ணாமூச்சிகளால் ஒரு கடிதம்.
1 min read“விளக்குகளை
அணையுங்கள்.
மின்மினிகள்
வருகின்றன.”
ஒரு கவிதை நூலின் முகப்புக் கவிதையாய் வாசித்த ஞாபகம். எவ்வளவு அற்புத தரிசனம் இது. இயற்கையை விட்டு ரொம்ப தூரம் ஓடிக் கொண்டிருக்கும் போது, மின்மினிகள் கூட பெருத்த ஆறுதல் தான்.
விளக்குகள் நிரம்பிய நகரத்து வாழ்வில் மின்மினிகளுக்கு எங்கே செல்வது?
மின்மினிகளால் ஜோடனை செய்யப்பட்ட நம்மூரின் காட்சிகளை, அவை தரும் சந்தோசத்தை இன்றைய பண்டிகை கால ஜோடனைகளில் கூட காண முடியாது.
என் உம்மும்மா ஒரு விடயம் சொல்வாள். அந்தக் காலத்தில் இரவுப் பயணங்களுக்கு மின்மினிகளை கண்ணாடிக் குடுவையில் போட்டு எடுத்துச் செல்வார்களாம். அதுதான் அவர்களது லாந்தர் விளக்காம்.
உம்மும்மா இன்னொரு விடயமும் சொல்லியிருக்கிறாள். ஒரு மின்மினி வீட்டுக்குள் வந்து போக முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தால், வீட்டில் யாருக்காவது யாமத்தில் கழிப்பறை போக வேண்டி வருமாம். அது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால், மின்மினிகள் பற்றிய கதைகள் சுவாரஸ்யமானவை.
மின்மினிகள் இரை பிடிக்கும் முறை அலாதியானது. இரையைக் கண்டால் மயக்கமுறச் செய்து பின் கூழானதும் சாப்பிடும். கண் சிமிட்டி மயக்கும் பெண்களும் இந்த மின்மினிகளும் ஒன்றென்று சொல்வார்கள். இதனாலோ என்னவோ நம் ஊரில் இதற்கு “கண்ணாம் பூச்சி” என்று பெயர்.
டார்ச் அடித்துப் பறக்கும் தொழில் நுட்பப் பறவை இந்த மின்மினி. பறவைக் கூடுகளுக்கு விளக்கு இது. சில பறவைகள் வெளிச்சம் பெற மின்மினிகளைப் பிடித்து வந்து கூடுகளில் வைத்துக்கொள்ளுமாம்.
குழந்தைகளுக்கு போத்தலில் பிடித்துக் கொடுக்கும் பேய்க் கண்கள் இந்த மின்மினிகள். ஆங்காங்கே வளைய வரும் மின்மினிகளைப் பார்த்துப் பயந்து போகும் குழந்தைகளுக்கு இது ஆறுதல் பரிசு.
மின்மினிகள் வெளிச்சத் துகள்களாய் பறக்கும் காட்சிகளை காண இப்போது கொள்ளைப் பிரியமாக இருக்கிறது. நம் யன்னல் வழி எட்டினால் பார்வை தொடும் தூரம் வரை ஆக்கிரமித்திருக்கும் மின்விளக்குகள் பெருத்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நம் நகர வாழ்வில் விளக்குகளை அணைத்தாலும் மின்மினிகள் வருவதில்லை.
மின்மினிகள் பூமிக்கு வந்த நட்சத்திரங்கள் என நம்பியிருந்த ஒரு பருவம் இருந்தது. அந்தப் பருவத்தில் மின்மினிகளைத் தொடர்ந்து காட்டுக்குள்ளே போய், நினைவு திரும்பி, பயந்தோடி வந்த அனுபவங்கள் இப்போதுள்ள குழந்தைகளுக்கு இருக்குதோ தெரியவில்லை. காதுகளில் நீலப்பல் (மன்னிக்கவும் Bluetooth) பொருத்திய ஒருவன் இருட்டில் நடக்கும் போது அதோ மின்மினி எனக் காட்டவேண்டியது தான்.
குழந்தைகளுக்கு மின்மினிகளைக் காட்ட ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது எனச் சொல்லும் பக்கத்து அறைத் தோழனுக்கு எப்படிச் சொல்வேன் ஊரிலும் மின்மினிகள் இல்லையென்று.
அடுத்த தலைமுறைக்கு மின்மினிகளைக் காட்ட ஒரு மின்மினிப் பூங்காவை உருவாக்க முன்வாருங்கள் ஒரு மரத்தை நட்டியோ, ஒரு மரத்தை வெட்டாமலோ…!
இஸ்பஹான் சாப்தீன்
www.isbahan.com
13.06.2016