அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் #இளைஞர்களே!
1 min read1989 இற்குப் பிறகு கொழும்பு சந்தித்த மாபெரும் வெள்ள அனர்த்தம் இது. கடந்த 17 ஆம் திகதி பின் மாலையில் வெல்லம்பிடிய பகுதியில் நீர் மட்டம் உயர ஆரம்பித்தது. நேற்று காலை (20 ஆம் திகதி) வரை நீர் மட்டம் உயர்ந்தபடியே இருந்தது. அல்லாஹ்வின் உதவியால் நேற்று நன்பகலுடன் படிப்படியாக நீர் மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது.
18ஆம் திகதி காலை மீட்புப் பணிக்காக களத்திற்குச் சென்றிருந்தேன். நேற்று(20) இரவு வரை, பகல் இரவு பாராது மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த என் சக இளைஞர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. அல்லாஹ்வே கூலி வழங்கப் போதுமானவன்.
18ஆம் திகதி காலை வெல்லம்பிடிய பகுதியின் தாழ்நில உட்பகுதியில் 9அடி உயரத்துக்கு நீர் மட்டம் உயர்ந்து இருந்தது. அவிஸ்ஸாவெல்ல பிரதான வீதிப்பகுதியில் கரண்டைக்கால் அளவுக்கே நீர் இருந்தது. அதன் பிறகு இரவு 12 மணியளவில் சுமார் 4.5 அடிக்கு பிரதான வீதிப்பகுதி மூழ்கியிருந்தது. உட்பகுதியில் சுமார் 11-13 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து இருந்தது. நேற்றுக்காலை வரை அந் நீர் மட்டம் குறையவேயில்லை. கடந்த 3 நாட்களாக நீர் வடிந்தோடாதிருந்தது பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. இன்னும் முற்றாக நீர் வடிந்தோடவில்லை.
18ஆம் திகதி காலை மீட்புப் பணிக்காக எமது இளைஞர்கள் தம்மிடம் உள்ள மிதக்கும் பொருட்களைக் கொண்டும், சிறு படகுகளைக் கொண்டும் உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியைத் தொடங்கியிருந்தார்கள். பிறகு படையினரின் இரண்டே இரண்டு படகுகள் களத்துக்கு வந்து சேர்ந்தன. அதற்குள் எமது இளைஞர்களின் பல படகுகள் களத்தில் தனது பணியைத் தொடங்கியிருந்தன. ஆனால், சில ஊடகங்கள் படையினர் களத்தில் தீவிரமாக பணிபுரிவதாகவே செய்து வெளியிட்டன.
உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் 19, 20 ஆம் திகதிகளில் களத்துக்கு வருகை தந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு சவாரி செய்துவிட்டுப் போனார்கள்.
ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே முதல் நாள் வந்து விட்டுப் போனார்கள். இளைஞர்களும் சமூக சேவை அமைப்புகளும், முஸ்லிம் சிவில் அமைப்புகளும் மூன்று நாட்களாக களத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 18 மாலை படையினரின் பல படகுகள் களத்தில் இருந்ததை காணமுடியுமாக இருந்தது. நேற்று படையினர் முழுவதுமாக மீட்புப் பணிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.
களத்தில் சந்தித்த சில அசௌகரியங்களையும் நிகழ்வுகளையும் அவதானங்களையும் இன்றைக்குப் பிறகுள்ள பணிகளையும் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்!