சாளரக் கண்ணாடி!
#சாளரக் கண்ணாடி!
சாளரக் கண்ணாடியில்
சாரல் வரையும்
அழகோவியத்தைக்
காணவில்லை.
#
தூரல் வராதபடி
என்றோ மூடிய
சாளரக் கண்ணாடியில்
அப்பியிருக்குது புழுதி.
#
சாளரக் கண்ணாடி வழி
தெரியுது
சட்டகமிட்ட ஓவியமாய்
பட்டுப்போன மரக்காடு.
#
தென்றல் வரத் திறந்த
சாளரக் கண்ணாடி வழி
வெளியே செல்கிறது
மெய் ஆவி.
#
விரல்நுனியால் பெயர் எழுத
சாளரக் கண்ணாடியில்
வைகறைப் பனி
படர்வதேயில்லை.
#
சாளரக் கண்ணாடியில்
மோதி விளையாட
சில் வண்டுகள்
வருவதில்லை.
#
சாளரக் கண்ணாடிக்கு
மஞ்சள் காமாலையோ
பச்சையும் தெரிவதில்லை.
நீலமும் தெரிவதில்லை?
#
மின்மினிகளோ,
பட்டாம் பூச்சிகளோ
சாளரக் கண்ணாடியில்
வந்து நிற்பதில்லை.
#
சாளரக் கண்ணாடி தாண்டி
நனைந்த பட்சிகள்
தலை சிலுப்பிப்
பறப்பதே இல்லை.
#
ஆக, ஒரு மரம் நட்டிய பின்
சாளரக் கண்ணாடியைத்
திறப்பதாய் உத்தேசம்
நீங்கள்?
இஸ்பஹான் சாப்தீன்
2016.05.01