மௌனத்தின் ஓசை
மௌனத்தின் ஓசை.
என்னுள்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
ஓர் அசரீரி.
அது ஒலியல்ல.
ஆனால் ஒலிக்கிறது.
சோம்பல் முறித்தெழும்
பூனையாய் எழுந்து
மீண்டும்
அமைந்துவிடுகிறது.
என் குரலாயும்
பின் என் குரலற்றதுமாய்
மாறி மாறி ஒலிக்கிறது.
அது மௌனத்தின் ஓசை.
கோபம் கொண்ட
பெண்ணின் உணர்ச்சி
அதில் இருக்கிறது.
வரம்புடைத்துப்
பாய்கின்றன
வார்த்தைகள்.
கனன்று வீசும் புயலை
ஒத்தது அக்குரல்.
அது உந்தி இயக்கும்
விசை பெற்றது.
ஊர்ந்து
பின் பாய்ந்து
சுதாகரித்துக் கொள்வதற்குள்
நகர்ந்துவிடுகிறது.
அவ்வோசை
என்னை ‘நான்’ ஆக்குகிறது.
என்னில் ‘நான்’ தொலைகயில்
அது உயர்ந்தொலிக்கிறது.
அது திமிர் மிக்கது.
அடங்காதது.
ஆயினும் அற்புதமானது.
சில்லுச் சில்லாய்
உடைந்து விழும்
என் மனக்கண்ணாடியை
குரல் எழுப்புவது கொண்டு
ஒட்டிச் சேர்க்கிறது.
என்னைத் தொலைக்கிற போது
தேடித் தருகிறது.
என்னைக் கண்டடைகயில்
தொலைத்து விடுகிறது.
2016.04.19