மீள்தலுக்கான வேட்கை!
ஆன்மாவைப் படைத்தவன் மீது சத்தியமாக! என் ஆன்மா விருப்பற்ற இடமாய் இவ் வையகத்தைப் பார்க்கிறது.
இது என் பூர்வீகம் அல்ல என்கிறது.
இவ்வையகம் சோதனைச் சாவடி. அடிக்கடி சோதிக்கப்படுவதாய் முறைப்படுகிறது. என் தேசத்தில் சோதனைச் சாவடி இருக்கவில்லை என்கிறது.
அகதியாய் வாழ்வதில் இஷ்டமில்லை என அங்கலாய்த்துக் கொள்கிறது. தன் தேசம் பற்றி அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறது.
அது கற்பனைப் பெட்டியை உடைத்துக் கொண்டு வரும் காட்சிகளை நிரப்பி வைத்திருக்கிறது. அந்த தேசக் காட்சிகளின் நிழல்களில் ஒரு துகளே இங்கிருப்பாய்ச் சொல்கிறது.
மேலும் சொல்கிறது!
தன்னை தேசம் கடத்தி அகதியாக்கிய அப்பிள் அல்ல இந்த அப்பிள். அப்பிளைக் கடித்தபடி ஆதிப்பாவம் பெண் எனச் சொல்லும் தேசம் எனதான தேசமல்ல, என் தேசத்து குடிமக்களுமல்ல.
என் தேசத்தில் நிர்வாணம் இருந்தது. ஆனால், இருக்கவில்லை. இங்கு நிர்வாணம் இல்லை. ஆனால், இருக்கிறது.
இரண்டே இரண்டு நீண்ட ஆயுள்களே இருந்தன. இங்கு அவை துண்டு துண்டாக பிரித்துப் போடப்பட்டிருக்கிறது.
என் தேசத்தில் இருந்து என்னை விரட்டியவன் இங்கும் இருக்குறான். அவனிடம் இருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். அவன் பல கனிகளை வைத்திருக்கிறான். அவை ருசியாய் இருப்பதாய் விளம்பரப் படுத்துகிறான்.
என் தேசத்துக்கு நான் மீள வேண்டும். இது என் தாயகமல்ல. என் தாயகம் அழகானது. சொகுசானது. மகிழ்ச்சியானது.
அங்கே இலைகள் பழுதாகி விழுவதில்லை. இங்கே, காலைப் பூ மகிழ்ச்சியையும் அதே பூ மாலையில் கவலையையும் தருகிறதே. என் தேசப் பூ மகிழ்ச்சியை மட்டும்தானே தந்தது?
அங்கு நினைக்க முன் எல்லாம் கிடைத்தன. இங்கு, நினைத்து நினைத்தே எதுவும் கிடைக்கவில்லை. சிலபோது நினைக்கவே முடியவில்லை.
எங்கள் ஆறுகள் வற்றியதில்லை. எங்கள் பாதைகள் இடைஞ்சலாய் இருந்ததில்லை. எங்கள் மரங்கள் பட்டுப்போனதில்லை.
என் தேசம் எனக்காய் காத்திருக்கிறது. என் பயணத்துக்கான கட்டுச்சாதம் எங்கே! இன்னொரு நரகத்துக்கு என்னைத் துரத்த நீ எடுக்கும் பிரயத்தனம் பிரயோசனம் அற்றது எதிரியே!
என் தேசம் இதுவல்ல என்பதை புரிந்து கொள்ளாதவரை என்னை நீ தடுத்து வைத்திருந்தாய். புரிந்துவிட்ட பின், இந்த ஈத்தம் பழம் எதற்கு? இதை சாப்பிட எடுக்கும் நேரம் என் தேசம் காண்பதை தாமதப்படுத்தி விடுமே!
நான் போக வேண்டும். என் தாயகம்… என்.. தாயகத்துக்கு!
10.04.2016