மக பாஸ் அதுகரீம் நானா
1 min readவேகமாக ஊருக்குள் பாய்ந்து வந்த ஒரு கார் வண்டி திடீரென பழுதாகி இடையிலே நின்று விட்டது. புதிய ரக (ஷிரி- சிங்கள இலக்க) கார் வேறு. ஓட்டி வந்தவருக்கு ஒரே குழப்பம். போய்ச் சேரவேண்டிய தூரமோ அதிகம். மாலையாவதற்குள் போய்ச்சேரவும் வேண்டும். ஓட்டுனர் இறங்கி காரை சுற்றி சுற்றிப் பார்த்தும் பிரச்சினை புரியவில்லை. புதிய ஊர் என்பதால் கராஜ் எங்கிருக்கிறது என்று கூட ஓட்டுனருக்குத் தெரியாது.
அவ்வழியாக வந்த ஒருவரை நிறுத்தி கேட்ட போது, “பக்கத்து தெருவில் பழைய ‘பாஸ்’ ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் ஞாபகம் இல்லை. அந்த பக்கம் போய் விசாரித்தால் அவர் வீட்டை காட்டுவார்கள்” என்றார்.
ஓட்டுனரும் அந்தத் தெருவில் உள்ளவர்களை விசாரிக்க அவர்கள் அதுகரீம் நானாவின் வீட்டை காட்டிவிட்டார்கள். ஓட்டுனரும் அதுகரீம் நானாவை போய் சந்திக்க, தனது ஆயுத, கருவிகள் அடங்கிய பெட்டியை சுமந்துகொண்டு கார் இருந்த இடத்துக்கு நடந்தார்.
அதுகரீம் நானா, ஒன்றுமே பேசவில்லை. கருவிப் பெட்டியை கீழே வைத்து விட்டு காரின் நான்கு சக்கரத்தையும் உற்று உற்றுப் பார்த்தார். பிறகு, காரின் கீழ் புகுந்து எதையோ பார்த்தார். எழுந்து காரின் என்ஜின் எங்கே?! என்று கேட்டபடி கார் முன் பாகத்தை திறந்தார். ‘கார முழுசா கழட்டி பாத்தா தான் என்ன பிரச்சின என்டு வெளங்கும்’ என்றார்.
ஓட்டுனரும் தலையாட்டவே, காரை அக்கு வேறு ஆணி வேறாக கழற்றினார். பிறகு மீண்டும் எல்லா பாகங்களையும் இணைத்துப் பூட்டினார். பழையபடி எல்லாம் பூட்டி முடிய அதுகரீம் நானாவின் கையில் 4 ஸ்குரு ஆணிகள் எஞ்சி இருந்தன. ஓட்டுனர் வேறு அவதானித்துவிட்டார். ‘நான்கு ஆணிகள் எஞ்சியது எப்படி?’ அதுகரீம் நானாவுக்கு தலை கிறுக்க ஆரம்பித்தது.
அதுகரீம் நானாவின் மூளை வேகமாக வேலை செய்தது. பதற்றத்தை காட்டிக் கொள்ளாது, 100/= ஐ வாங்கிக் கொண்டு ஓட்டுனரிடம் “ஹாஜி! நல்ல நேரம் நீங்க என்கிட்ட வந்த, இல்ல உங்கள ஏமாத்தி இருப்பாங்க, நான் சென்ஞதுல இந்த நாலு ஆணியும் மிஞ்சின, ‘கராஜ்’ ஆக இருந்தா இந்த நாலு ஆணியேம் அவர்கள் சுட்டிருப்பாா்கள். காரை இப்போ ஸ்டார்ட் செய்ங்க” எனக்கூறி ஓட்டுனரின் கையில் 4 ஆணிகளையும் கொடுத்தார் அதுகரீம் நானா.
ஓட்டுருக்கு ஒன்றுமே புரியவில்லை. கார் கொஞ்ச தூரம் போகயில் காரின் ஒவ்வொரு பாகமாக கழன்று விழ ஆரம்பிக்கும் போது தான், அதுகரீம் நானா ‘சாதாரன பாஸ்’ இல்லை ‘மக பாஸ்’ என்று ஓட்டுனருக்கு விளங்கியது.
இதெல்லம் நீங்க தலேல போட்டுக்கொல வாணம்!
இஸ்பஹான் சாப்தீன்.
27.07.2015