அதுகரீம் நானா – 02
‘நோம்பு காலத்துல பயணம் போரது சரிக் கஷ்டம். எனா செய்ய? கார் ஈந்தா கார் வண்டி, கார் இல்லாதவனுக்கு கால் தானே வண்டி!’ என முணுமுணுத்தபடி பயணத்தைத் தொடர்ந்தார் நம்ம அதுகரீம் நானா.
மதியம் உச்சி வெயிலில் அதுகரீம் நானாவிற்கு அப்படி என்ன பயணமோ அல்லாஹ்விற்கும் அவருக்கும் தான் தெரியும்.
மனுசன் காலில் வேறு செருப்பில்லை. இப்போது அதுகரீம் நானா ஆளில்லா தார் ரோட்டில் கால்சூட்டை தாங்க முடியாமல் வியர்வை வடிய வடிய வந்து கொண்டிருந்தார்.
இதற்குமேல் நடக்க முடியாமல் ரோட்டோரத்தில் இருந்த ஒரு அரச மரத்துக்கு கீழ் புத்தர் போல் சம்மனமிட்டு உட்கார்ந்தார்.
கொஞ்ச நேரத்தில் யாரோ மோட்டர் பைக்கில் வரும் சத்தம் கேட்டதும் எழும்பி நடந்தார். பைக் அருகில் வந்ததும், அதுகரீம் நானாவிற்கு ஒரு யோசனை. பைக்கில் வருபவர் போட்டிருந்த செருப்பைக் கேட்டுப் பார்ப்போம். வண்டியில் போகின்றவருக்கு செருப்பு எதற்கு?, சில நேரம் தந்தாலும் தரலாம். வண்டியை மறித்து, எண்ணியபடி கேட்டார். அவரும் சரியென செருப்பை கழற்றிக் கொடுத்தார். அதுகரீம் நானாவிற்கு சரியான சந்தோசம்.
வண்டியின் பின் இருக்கையில் காணப்பட்ட மூட்டையில், ஒரு குடை இருந்தது அதுகரீம் நானாவின் கண்ணுக்குப் பட்டது. இந்த வெயிலில் மழை பெய்ய வாய்ப்பில்லை. வண்டியில் போவதால் வேகமாக போய்விடலாம். எனவே அவருக்கு குடையும் அவசியமிருக்காது. உச்சி வெயிலில் போவதால் நான் கேட்டால் தரப்போகிறார் என மனம் சொல்லவே அதுபடியே கேட்டார், அவரும் நிலமை அறிந்து குடையையும் கொடுத்து வைத்தார்.
இப்போது அதுகரீம் நானாவிற்கு இரட்டிப்பு சந்தோசம். சரி, செருப்பை கேட்டேன் கொடுத்தார். குடையை கேட்டேன் கொடுத்தார். மோட்டர் பைக்கை கேட்டால் என்ன? என மறுபடியும் மனசு நச்சரிக்கவே, “இவளோ தூரம் நீங்க பைக்குல வந்தீங்க, நான் நடந்து வந்தேன். டவ்னுகு இன்னம் கொஞ்ச தூரம் தான் ஈக்கிறு. நீங்க உங்க மூட்டைய தூக்கிட்டு நடந்து வாங்க. எனக்கு மாச்சலா ஈக்கிது. எனக்கு உங்க பைக்க தர ஏலுமா” என்று கேட்டார் அதுகரீம் நானா.
அந்த மனிதருக்கோ கடும் கோபம், வண்டியில் இருந்து இறங்கியவர், “ஏண்டா! ஒனக்கு பைக்கு கேக்குதா” என்று குரல் இட்டபடி அதுகரீம் நானாவை தாக்க ஆரம்பித்தார். அதுகரீம் நானாவோ அடியை வாங்கிக் கொண்டு ‘கெக்கெபெக்கெ’ என்று சிரித்தார். இது கேட்ட மனிதருக்கு கடும் கோபம், இப்போது தாறுமாறாக தாக்க ஆரம்பித்தார்.
இந்நேரம் பார்த்து அந்தப் பக்கமாக வந்த ஒரு மனிதர் அதுகரீம் நானாவின் பரிதாப நிலை கண்டு, “எதுக்கு இந்த மனிசன போட்டு இப்பிடி அடிக்கிறீங்க!, நீங்க என்னடான்னா அடிய வாங்கிட்டு சிரிக்கிறீங்க?” என்று கேட்டார். அதற்கு அதுகரீம் நானா சொன்ன பதில் இன்றளவும் படிப்பினையாக பேசப்படுகிறது.
“ஹாஜி, மனசுக்கு அடிமயானா நாம அடிமை. நாம மனச அடிமயாக்கினா நாமதான் பெரிய எஜமான்.” என்று சொல்லி விட்டு நடந்தவற்றை விஸ்தாரமாக கூறினார்.
“எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். என்ன அடிக்க விடுங்க. மனசு சென்ன படி கேட்டேனே எனக்கு நல்ல தண்டன. அதுதான் தண்டனய வாங்கிக் கொண்டிருக்கேன்.” என்றார் சிரித்தபடி நம்ம அதுகரீம் நானா.
அப்ப பாருங்களே!
இஸ்பஹான் சாப்தீன்.
01.07.2015