கஞ்சன் அதுகரீமும் தேயாத செருப்பும்.
1 min read‘அப்துல் கரீம்’ எனும் பெயர் ‘அதுகரீம்’ என இங்கு மருவி வந்துள்ளது. அதுகரீமின் மனைவி பெயர் ‘மரியம் பீபி’ இங்கு, ‘பீபி (Beebi)’ என வருகிறது.
(ஓவர் பில்டப் வாணம் வாப்பா! Ok, Ok)
‘அதுகரீம் நானா’ வீட்டுக்கும், பள்ளிவாசலுக்கும் ஒரு கிலோமீட்டர் அளவு தூரம் இருக்கும்.
பள்ளிவாசலில் பாங்கொலித்துவிட்டது. ‘அதுகரீம் நானா’ வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு வேகமாக வந்துகொண்டிருந்தார். காலுக்கு, எட்டிய தூரத்தில் பள்ளிவாசல். பள்ளிவாசலை நெருங்கும் போது, திடீரென, தனது அறை மின்குமிழை அணைத்தோமா, இல்லையா என்கிற சந்தேகம் எழுந்தது அவருக்கு.
‘ஐயையோ கரண்ட் பில் கூடவந்துடுமே. வீணா எதுக்கு காசு கட்டனும்’ என முணுமுணுத்தவாறு வீட்டுக்கு நடையைத் திருப்பினார்.
ஓட்டமும் நடையுமாக வீட்டை நெருங்கிய ‘அதுகரீம் நானா’ ‘பீபி’, ‘பீபி’ என தனது மனைவியை அழைத்தபடி கூக்குரலிட ஆரம்பித்தார். இது கேட்ட மனைவி ‘பள்ளிக்கு போன மனுசன் என்னடா இப்படி அலறி அடித்துக் கொண்டு வருகிறார்’ என எண்ணியபடி கதவைத் திறக்க முனைந்தாள்.
அப்போது, ‘அதுகரீம் நானா’ கதவை திறக்காத ‘பீபி’, நீ கதவை திறந்தா கதவின் அசவு தேய்ந்திடும் உள்ள இருந்தே கேளு! என்ட ரூம் லைட்ட ஓப் பண்ண மறந்துட்டேன். அத அவசரமா பார்த்து ஓப் பண்ணிடு!’ என்று கூறிவிட்டு திரும்பினார்.
‘பீபி’க்கு தன் கணவன் மேல் கடும் கோபமே வந்தது.
‘ஏண்டல்லாவே! பள்ளிவாசல் வரைக்கும் போய் இதுக்காகவா அலறி அடித்துக் கொண்டு வந்தது. கதவு தேயிரது இருக்கட்டும். இங்க இருந்து பள்ளிவரைக்கும் பெய்த்து, திரும்ப இங்க வந்து, திரும்ப பள்ளிவாசலுக்கு போறீங்களே, உங்க செருப்பு தேய்ந்திருக்குமே.’ என்றாள்.
திரும்பி நிண்ட மனுசன்: ‘அவ்வளவு மடயனா நான், இந்த பாரு! அது தேயாது! இந்தா பத்திறமா இருக்கு’ என கமக்கட்டில் மறைத்து வைத்திருந்த செருப்பை வெளியில் எடுத்துக் காட்டினார் ‘அதுகரீம் நானா’.
யன்னலோரம் இருந்த ‘பீபி’ ‘அட நப்பி மனுசனே!’ என்று கண்ணத்தில் கை வைத்தாள் சொல்வதறியாமல்…
(இது இன்றைய ஜும்ஆ குத்பாவில் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை தழுவி எழுதியது.
-இஸ்பஹான் சாப்தீன்-
19.06.2015
(இக்கதைக்கு தலைப்பிட்டவர் மதிப்புக்குரிய எழுத்தாளர் கலைமகன் பைரூஸ் அவர்கள்.)