இனவாதத்தாலேயே நாம் பின்தள்ளப்பட்டோம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன
1 min readதேசிய சூரா சபை சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த 67 வது சுதந்திர தின விழாவில் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…
தமிழில்: இஸ்பஹான் சாப்தீன்
இதே புனிதமான இடத்தில் வைத்துத்தான் அன்று D.S சேனானாயக அவர்கள் சுதந்திரத்தை பிரகடனம் செய்தார்கள். அன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்து போர் செய்தோம். அன்று எங்களுக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்ற பிரதானமான ஒரு எதிரி இருந்தது.
1919 இல் தான் தேசிய காங்கிரஸ் இலங்கையில் உருவானது. 1818 இல் வீர கெப்பெட்டிப்பொல யின் தலைமையில் ஒரு பிரதான போராட்டமும், 1848 இல் வீர புரன் அப்புவின் தலைமையில் ஒரு போராட்டமுமாக பிரதானமான இரண்டு ஆயுத போராட்டங்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டது. அதுதவிர 1938 இல் ரதனபால நாயக ஹிமி போன்றோரின் தலைமையில் இடம்பெற்றது போல் சிறு சிறு கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பிறகு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஜனநாயக போராட்டமாக உருவெடுத்தது. அதற்காக 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல இனத் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்தார்கள். அதன் போது இரு பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். அதில் முதலாவது, எங்களுக்கு தகுந்த அரசியலமைப்பு முறை, இரண்டாவது, அதில் பெரும்பான்மையை இலங்கையர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது. 1919 கவுன்சில் முதல் இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அர்ப்பணத்தோடு செயற்பட்டார்கள். அன்று அப்துல் கபூர், நைனா மரைக்கார், டீ.பி.ஜாயா போன்றோர் பிரித்தானிய ஏகதிபத்தியத்திற்கு எதிரான இந்த தேசிய காங்கிரஸை உருவாக்குவதற்கு முன்னணியில் இருந்து பாடுபட்டார்கள். பிறகு 1927 இல் முதலாவது சீர்திருத்தம் இடம்பெற்றது. 1919 இல் ஆரம்பமான இந்த அமைப்பின் முதலாவது சீர்திருத்தமாக 1927 டொனமோர் சீர்திருத்தம் அமைந்தது. அதிலும் மாக்கான் மாக்கார், அப்துல் காதர், டீ.பீ.ஜாயா ஆகிய முஸ்லிம்கள் மூவர் கலந்துகொண்டார்கள். இந்த மூவரும் டொனமோர் சீர்திருத்தத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அயராது உழைத்தார்கள்.
இந்த டொனமோர் சீர்திருத்ததில் உள்ள ஜனநாயக விடயங்கள் சிலதை இம்முறை புதிய பாராளுமன்ற உருவாக்கத்திற்கும் இணைத்துக்கொள்ள இருக்கின்றோம். அதன் பிறகு சோல்பரி சீர்திருத்தத்தின் மூலம் சுதந்திரத்தை பெற்றுகொள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்தார்கள். டி.எஸ்.சேனநாயக்க, எப்.ஆர். சேனநாயக்க, சேர்.டீ.பி.ஜயதிலக்க, ஏ.டப்ளியூ.பெரேரா, எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆகியோர் சிங்கள இன பிரதிநிதிகளாகவும் சேர்.பொன்னம்பலம் ராமனாதன், சேர்.பொன்னம்பலம் அருனாச்சலம் ஆகிய தமிழ் இன பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதிநிதியாக டீ.பி.ஜாயா அவர்களும் இப்போராட்டத்திற்காக ஒன்றினைந்தார்கள்.
சிங்கள பௌத்தர் என மார்தட்டிகொண்டிருக்கும் சிலர் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும், அன்று சுதந்திர செய்தியை பிரித்தானியாவுக்கு கொண்டு சென்றது ஒரு சிங்களவர் அல்ல. சேர்.பொன்னம்பலம் இராமனாதன், ஒரு தமிழர்.
1948 இல் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்ததன் பிறகு, முதல் தடவையாக தமிழ் தலைவர்கள் தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் சங்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் தேசிய காங்கிரஸிலேயே இருந்தார்கள். தேசிய காங்கிரஸில் இருந்த ஏனையவர்கள் இணைந்து முதலாவது அரசியல் கட்சியை உருவாக்கினார்கள். அப்போது இலங்கை சமசமாஜக் கட்சி உருவாகி இருந்தது. அடுத்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி நிர்மாணிக்கப்பட்டது. அதனை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றார்கள். அதில் S.W.R.D பண்டாரநாயக்க தற்காலிக தலைவராக முன்னிலையில் இருந்து செயற்பட்டார். அதன்போது உருவாக்கப்படும் கட்சிக்கான பெயராக ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயர் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு அதன் தலைவர் யார் என்ற தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது. தலைவராக D.S சேனாநாயகவின் பெயரை நடேசன் எனும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவரே பிரேரித்தார். அதனை அமோதித்தவர் டீ.பீ.ஜாயா அவர்கள். அப்படியென்றால் அன்று, தமிழரின் பிரேரிப்பில் முஸ்லிமின் அமோதிப்பில் சிங்கள பௌத்தர் ஒருவர் இந்நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். அது தான் அன்று இருந்த இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை.
1948இற்குப் பிறகு, ஐக்கிய தேசியக் கட்சி ஒருபக்கம் உருவாகி வளர்ந்தது. ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தேசிய ஒற்றுமைக்கு எதிராக இனங்களுக்கு இடையே பிரச்சினைகள் வந்ததில்லை. மறுபக்கம் இடதுசாரித் தலைமைகளாக பேராசிரியர் என்.எம்.பேரேரா, பெராசிரியர் கொல்வின் ஆர் டி சில்வா, டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்க, பிலிப் குணவர்தன, ரொபட் குணவர்தன, லெஸ்லி குணவர்தன ஆகியோர் இருந்தார்கள். இவர்கள், முழுமையாக எல்லா இனத்தவர்களுக்கும் சம உரிமை உண்டென அச்சமின்றி குரலெழுப்பிய தலைவர்களுள் சிலர்.
பிறகு 50களில் தான் கட்சிகள் பிரிந்து தேர்தலில் இறங்கியபோது, அவர்களுக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு மதத்தையும் இனத்தையும் விற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த இடத்திலிருந்து இனமும் மதமும் வியாபாரப் பண்டமானது. அன்று முதலாவது மதப்பிரச்சினையை தோற்றுவித்தவர் ஜே.ஆர் ஜயவர்தன. களனி தொகுதி அமைச்சர் ஏ.டப்ள்யு.பெரேராவை தோற்கடித்து களனியை தனக்குப் பெற்றுக்கொள்வதற்காக ஜே.ஆர் ஜயவர்தன, களனி என்பது புத்தர் இறங்கிய இடம். இது ஒரு பௌத்த புனித பூமி. எனவே, இங்கு ஒரு கிறிஸ்தவருக்க இடம்கொடுக்கக் கூடாது என்று கருத்துப் பரப்பினார். அன்று உயிரை துச்சமென மதித்து சுதந்திர செய்தியை கொண்டு சென்ற அந்த ஏ.டப்ள்யு.பேரேராவை தோற்கடித்தார். அந்த களனியில் மதவாதத்தை கிளப்பி, பிறகு இனவாதத்தை ஆரம்பித்தார்.
இப்படித்தான் அன்று ஹிட்லர், முஸோலினி போன்றோர் இனததை விற்று கோடிக்கணக்கான மக்களை அழித்தொழித்தார்கள். ஏனெனில், விற்க முடியுமான இதை விட சிறந்த அழகான ஒரு பொருள் வேறில்லை. அந்தளவு வேகமாக விற்பனையாகும் ஒரு பொருள். ஆனால், அவற்றை உட்கொள்ளும் அனைவருக்கும் நோய்தான் வரும். பொருள் விற்பனையாகும். ஆனால், பொருளினால் சுகமாகாத நோய்தான் உருவாகும்.
தேசபக்தி என்பது தான் ஹிட்லரின் முக்கியமான போராட்ட சுலோகம். இந்த தேசபக்தி என்கிற சுலோகத்துக்குள் தான் இனவாதிகள் ஒளிந்துகொள்கிறார்கள் என அல்பர்ட் ஐன்டீன் சொல்கிறார். தேசபக்தி என்பது, ஒரு நோய். அது சாதாரண ஒரு நோய் அல்ல. உடம்பு பூராகவும் பரவிய அம்மை போன்ற ஒரு நோயாகும். அதாவது, இனவாதம் இருக்கின்ற ஒருவனின் உடம்பு பூராகவும் நோய். அந்த நோய் குணமானாலும் அதன் வடுக்கள் அழிவதில்லை. அம்மை ஏற்பட்டாலும் அப்படித்தானே! எங்காவது வடு எஞ்சியிருக்கும். அதுபொன்ற ஒரு நோய்தான் தேசபக்தி எனும் வழியில் வரும் இனவாதமும். இந்த இனவாதத்தால்தான் இதுவரை எமது நாடு நாசமானது.
நாம் சுதந்திரம் பெரும் போது பொருளாதார அபிவிருத்தியில், ஜப்பானிடம் மாத்திரம்தான் இரண்டாம் நிலையில் இருந்தோம். தனிநபர் வருமானத்தைப் பார்த்தால் ஒரு டொலரில் ஜப்பானிடம் பின்தங்கி இருந்தோம். அன்று ஜப்பானின் தனிநபர் வருமானம் 89 டொலர். நாம் 88 டொலர். ஒரு டொலரே வித்தியாசமானது. மதவாதத்தினதும் இனவாதத்தினதும் புண்ணியத்தினால் இன்று, அந்த வித்தியாசம் பாரிய ஒரு வித்தியாசமாக மாறி இருக்கிறது.
ஜப்பானின் இன்றைய தனிநபர் வருமானம் 40 ஆயிரத்தை தாண்டும் போது நாம் 4 ஆயிரத்தை தாண்ட தவழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவை எல்லாம் இந்த நாட்டில் இருந்த மதவாதிகளதும் இனவாதிகளதும் புண்ணியத்தினாலேயே நடந்தது. எல்லா நாடுகளும் முன்னேரின. நாம் மட்டும் இனவாதத்தால் பின்தள்ளப்பட்டோம்.