அப்பாக் கவிதை!
1 min readஇன்னும் எழுதாத
கவிதையில் உள்ளது
எனது வாழ்க்கை.
யார் யாரோ
எழுதிய கவிதைகளில்
நானில்லை.
இருப்பினும்,
அவற்றை ரசிக்கிறேன்.
அவற்றோடு சிரிக்கிறேன்.
அவற்றுக்காய் அழுகிறேன்.
வாழ்க்கைக் கவிதையை;
எனதான கவிதையை
எழுதெனச் சொல்லி,
இறைவன் தந்தான்
அழகான ஒரு
நோட்டுப்புத்தகம்.
எழுதுகிறேன்…
மிக நேர்த்தியாக,
மிக மிக அழகாக
எழுதுகிறேன்.
யார் யாருக்காகவோ
எது எதெற்காகவோ
தாள்களை
கிழித்து எறிகிறேன்.
கவிதைகளை அழிக்கிறேன்.
அழித்து அழித்து
கிழித்து கிழித்து…
என்ன இது…?
கிழிப்பதற்கு
ஆயிரம் கருவிகள்.
அழிப்பதற்கு
ஆயிரம் அழிப்பான்கள்.
எவன் கண்டுபிடித்தானோ
இவற்றை?
தற்செயலாய் பிறக்கும்
கவிதைகளை
திட்டமிட்டு எழுதவேண்டி
இருக்கிறதே…
அலுத்துக்கொள்ளவும்
முடியவில்லை.
ஏற்றுக்கொள்ளவும்
முடியவில்லை.
ஆணித்தரமாய் சொல்கிறேன்.
மிக விரைவில்,
ஒரு கவிதை எழுதுவேன்.
அது அழகான கவிதை.
அது என்
வாழ்க்கைக் கவிதை.
அது என்னைப் பற்றிச் சொல்லும்.
நான் மரணித்த நாளில்,
‘இன்னும் ஒருவன்
மரணித்துவிட்டான்’ என
நீங்கள் சொல்லமாட்டீர்கள்.
‘இந்த அழகான
நோட்டுப் புத்தகத்தில்
இந்த அழகான
கவிதையை எழுதிய
இந்தக் கவிஞன்
இறந்துவிட்டான்’ என
நீங்கள் சொல்வீர்கள்.
என் அடையாளக் கவிதை,
என்னை ரசிக்கும்.
என்னோடு சிரிக்கும்.
எனக்காய் அழும்.
எனக்கான பிரார்த்தணையை
அது சுமந்திருக்கும்.
அப்போது,
நான் சந்தோசமாக மரணிப்பேன்
ஒரு நல்ல கவிஞனாக!
கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்
2014.10.17 (6.40PM)
‘நான்’ ௭னும் கவிதை எழுதிய ‘என் அப்பாக்’ கவிஞருக்கு சமர்ப்பணம்!